மாற்றுத் திறனாளிகளுக்கான உதவிகள்! மன நல நிபுணர் வந்தனா

"ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7-ஆம் தேதி உலக சுகாதார தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
மாற்றுத் திறனாளிகளுக்கான உதவிகள்! மன நல நிபுணர் வந்தனா
Updated on
2 min read

"ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7-ஆம் தேதி உலக சுகாதார தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு உலக சுகாதார தினத்தை எங்களது "வீ-கோப்' மருத்துவக் குழு "மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்புச் சலுகைகள்' குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இலக்காகக் கொண்டுள்ளது. பல காப்பீட்டுத் திட்டங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படுகின்றன. ஆனால், இதுகுறித்த விழிப்புணர்வு அவர்களிடம் இல்லை. மாற்றுத்திறனாளிகள் யாரை அணுகி தங்களது நலத்துக்கான காப்பீட்டுத் திட்டம் அல்லது அரசு சலுகைகளைப் பெறுவது என்று தெரியாமல் உள்ளனர். எனவே, சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தையும் , அரசு சலுகைகள் மற்றும் வேலைவாய்ப்புகள் பற்றிய விழிப்புணர்வையும் அவர்களுக்கு ஏற்படுத்துவது அவசியம்.
முதலில், மாற்றுத்திறனாளிகளுக்காக வழங்கப்படும் அரசின் உதவித் தொகை குறித்துப் பார்க்கலாம். இதில், மாற்றுத் திறனாளிகளை மூன்று வகையினராக பிரித்து உதவித் தொகை வழங்கப்படுகிறது. 
முதலாவது - பிறப்பின் போது ஏற்படும் குறைபாடு. 
இரண்டாவது - விபத்து காரணமாக ஏற்படும் குறைபாடு.
மூன்றாவது - மனநலக் குறைபாடு.
அந்த வகையில், அதிகப்படியான பாதிப்புகள் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு அதாவது மன வளர்ச்சி குன்றியோர் 45 சதவீதம் பாதிப்பும், உடல் இயக்கக் குறைபாடுடையோர் 75 சதவீதம் பாதிப்பும், தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர் 40 சதவீதம் பாதிப்பும் அடைந்திருந்தால் அவர்களுக்கு பராமரிப்பு உதவித் தொகையாக மாதம் ரூ.1,500 வீதம் வழங்கப்படுகிறது.
காப்பீட்டுத் திட்டம்: இதில் விபத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு முழுமையான காப்பீடும் மற்ற பிரிவினருக்கு குறைபாட்டின் சதவீத அடிப்படையில் காப்பீடும் வழங்கப்படுகிறது. 
Swavlamban (ஸ்வலம்பான்) காப்பீடு: இத்திட்டம் 2015 -ஆம் ஆண்டு அக்டோபர் இரண்டாம் தேதி முதல் தொடங்கப்பட்டது. இதில், மாற்றுத் திறனாளியின் வருவாய் ஆண்டுக்கு மூன்று லட்சத்திற்கும் குறைவாக இருந்தால் காப்பீடு இலவசமாக வழங்கப்படுகிறது. மற்றவர்கள் ரூ.355 பிரீமியம் செலுத்தி இந்த காப்பீட்டு திட்டத்தைப் பெற முடியும். பிறந்த குழந்தை முதல் 65 வயது வரை உள்ளவர்கள் இந்த காப்பீட்டை பெறலாம். இதில் ரூ.2 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படுகிறது.
Nirmaya (நிர்மயா) காப்பீட்டுத் திட்டம்: கீழ்க்கண்ட ஊனம் உள்ளோருக்கு: Autism , cerebral palsy ,
Mental Retardation and Multiple Disabilities) இதில் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூபாய் ஒரு லட்சம் வரை காப்பீடு வழங்கப்படுகிறது. வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இந்த காப்பீடு இலவசமாக கிடைக்கும். இதற்கு வயது வரம்பு இல்லை. 
இதற்கான விண்ணப்பத்தை www.thenationaltrust.gov.in என்ற இணையதளம் மூலமாக பெற்றுக்கொள்ளலாம்.
மாற்றுத்திறனாளிகளுக்கான disability சான்றிதழையும் இந்த இணையதளம் மூலம் பெறலாம். ஆவணங்களை சரி பார்த்த பின் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இது தவிர ஆண்டுக்கு ரூபாய் நூறு செலுத்தி மாற்றுத் திறனாளிகள் ஆயுள் காப்பீடு பெற்றுக்கொள்ளலாம். இந்த ஆயுள் காப்பீட்டில் மருத்துவச் செலவுகளும் அடங்கும். 
அடுத்ததாக, மாற்றுத்திறனாளிகளின் வாரிசுகளுக்கான கல்வி உதவித்தொகை கூறுகிறேன். மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகளுக்கு ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆண்டு ஒன்றுக்கு ரூபாய் ஆயிரம் வழங்கப்படுகிறது.
ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூபாய் 3000 மும் ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் டூ வரை படிப்பவர்களுக்கு ஆண்டுக்கு ரூபாய் 4 ஆயிரமும் பட்டப்படிப்பு படிப்போருக்கு ஆண்டுக்கு ரூபாய் 6 ஆயிரமும் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்போருக்கு ஆண்டுக்கு ரூபாய் 7000 கல்வி உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.
படித்து முடித்து வேலைவாய்ப்புக்காகக் காத்திருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த மாற்றுத்திறனாளி பட்டதாரிக்கு மாதம் ரூ.450 முதல் ரூ.1000 வரை வழங்கப்படுகிறது. பிளஸ் டூ வரை படித்தவர்களுக்கு மாதம் ரூபாய் 375 முதல் 750 வரை வழங்கப்படுகிறது பத்தாம் வகுப்பு வரை படித்தவர்களுக்கு மாதம் ரூ.300 முதல் ரூ.600 வரை உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. சட்டப்படிப்பு படித்த மாற்றுத்திறனாளிக்கு மாதம் ரூ. 10,000 வழங்கப்படுகிறது. மருத்துவம் மற்றும் பொறியியல் படிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்பெஷல் ஃபீஸ் என்று சொல்லக்கூடிய சிறப்புக் கட்டணம் எதுவும் கிடையாது.
மாற்றுத்திறனாளியான ஆண் மாற்றுத்திறனாளியான பெண்ணையோ அல்லது ஒரு மாற்றுத்திறனாளி பெண். இன்னொரு மாற்றுத்திறனாளி ஆணையோ திருமணம் செய்து கொண்டால் திருமண உதவித் தொகையாக ரூபாய் 25 ஆயிரம் மற்றும் தேசிய சேமிப்பு பத்திரம் 25 ஆயிரம் மதிப்பு உள்ளது மற்றும் தாலிக்கு 4 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது. அடுத்ததாக சுயதொழில் தொடங்க விரும்பும் மாற்றுத் திறனாளிகளுக்கு மெழுகுவர்த்தி தயாரித்தல் போன்ற பல்வேறு சுய தொழில்களுக்கு ரூபாய் 5 லட்சம் வரை வங்கி மூலம் கடன் பெறலாம்.
சிறு மற்றும் குறு தொழில் தொடங்குவோர் ரூபாய் 25 லட்சம் வரை வங்கியில் கடனாக பெற முடியும். விவசாயம் செய்ய விரும்பும் மாற்றுத்திறனாளிக்கு ரூபாய் 10 லட்சம் வரை வங்கி கடன் வழங்கப்படுகிறது. மொத்தம் 75 வகையான உதவித்தொகைகள் மாற்றுத் திறனாளிகளுக்கு மத்திய அரசுகளின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அளித்து வருகின்றன. மாற்றுத் திறனாளிகள் அவற்றைத் தெரிந்து, பயன்படுத்திக் கொண்டால் அவர்களின் வாழ்வாதாரம் மேம்பாடு அடையும்'' என்கிறார் மனநல நிபுணர் வந்தனா. மனநலக் குறைபாடு உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் அவரைச் சந்தித்தபோது மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வழங்கும் பல்வேறு சிறப்புச் சலுகைகள் குறித்து விவரமாகக் கூறினார். அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து...

- ரவிவர்மா
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com