தாய்ப்பால் கொடுத்தால் அழகு குறையாது! 

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் முதல்வாரம் உலக தாய்ப்பால் வாரமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், தாய்ப்பால் புகட்டும் இளம் தாய்மார்கள் கவனத்திற்கு
தாய்ப்பால் கொடுத்தால் அழகு குறையாது! 

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் முதல்வாரம் உலக தாய்ப்பால் வாரமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், தாய்ப்பால் புகட்டும் இளம் தாய்மார்கள் கவனத்திற்கு சில ஆலோசனைகள்:
பச்சிளம் குழந்தையின் பூரண ஆரோக்கியமானது, பாலூட்டும் தாயின் உடல் நலம், மனநலம், உணவு, இருக்கும் சூழல் ஆகியவற்றைப் பொருத்து அமைகிறது. குழந்தைப்பேறு முடிந்தவுடன், தாய்மார்கள் மருத்துவமனையில் இருக்கும்வரை, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கண்காணிப்பில் இருப்பதால், அவர்களின் அறிவுரைகளைக் கேட்டுக் கொள்கிறார்கள். ஆனால், வீடு திரும்பியவுடன், பிறந்த வீட்டிலும், புகுந்த வீட்டிலும் இருப்போர், உறவினர்கள் மற்றும் தோழிகள் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக அறிவுரை வழங்குவதால், மிகுந்த மனக் குழப்பத்திற்கு ஆளாகிவிடுவது நடைமுறையாக நாம் பார்க்கும் ஒன்றுதான். 
இரண்டாவது குழந்தை பெற்ற தாய்மார்கள், முதல் பிரசவம், குழந்தை பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு, இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் இடைவெளியில் அவர்களுக்குக் கிடைக்கும் அனுபவம், பெறும் தகவல்கள் வாயிலாக நன்றாகவே தங்களைப் பக்குவப்படுத்திக் கொள்கிறார்கள். 
இதிலும், 28 வயதிற்குப் பிறகு திருமணம் செய்து குழந்தை பெறுபவர்கள் ஓரளவு சமாளித்து விடுகிறார்கள். ஆனால் வளரிளம் பருவத்திலோ அல்லது 25 வயதிற்குள்ளும் திருமண வாழ்க்கைக்குள் நுழைந்து முதல் குழந்தையைப் பெற்றெடுக்கும் இளம் தாய்மார்களின் நிலைதான் மிகுந்த குழப்பத்திற்கு உள்ளாகிறது. அவர்களைத் தெளிவுபடுத்தக் கூடிய செய்திகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
குழந்தைக்குப் பாலூட்டுவதால், தங்களின் இளமைத் தோற்றமும், அழகும், உடல் வலிமையும், மார்பக அமைப்பும் மாறிவிடும் அல்லது பொலிவிழந்துவிடும் என்று இளம் தாய்மார்கள் நினைப்பது முற்றிலும் தவறு. பாலூட்டுவதால், பால் சுரப்பு ஹார்மோன்களின் செயல்பாட்டால், கர்ப்பப்பையிலுள்ள நச்சுகள் வெளியேற்றப்பட்டு சுத்தமடைவதுடன், சுருக்கமடைந்து தனது பழைய நிலையை அடைகிறது. மனரீதியாக ஏற்படும் மகிழ்ச்சியால், உடலும் ஆரோக்கியமாக இருக்கும் என்பதை நினைவில் வைக்க வேண்டும். 
குண்டாக இருக்கும் பெண்கள் அல்லது மார்பகங்கள் பெரிதாக இருக்கும் பெண்களுக்கு தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்; என்றும், சத்துகள் அதிகம் என்றும் நினைப்பது தவறாகும். உடல் எடைக்கும், மார்பக அளவிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. ஆனாலும் அவர்கள் உண்ணும் உணவிலுள்ள சத்துகளைப் பொருத்து தாய்ப்பாலில் கிடைக்கும் சத்துகளும், பாலின் அளவும் நிர்ணயிக்கப்படுகின்றன. 
சுகப்பிரசவம் எனில், குழந்தை பிறந்த அரை மணி நேரத்திற்குள்ளும், அறுவை சிகிச்சை எனில், நான்கு மணி நேரத்திற்குள்ளும் தாய்ப்பால் கொடுத்தாக வேண்டும். அதைத் தவிர்த்து, நீர், தேன், சர்க்கரைத் தண்ணீர், குளுக்கோஸ் அல்லது வேறேதேனும் மூலிகை நீர் போன்றவற்றைக் கொடுக்கக் கூடாது. இவை, குழந்தையின் பாலுறிஞ்சும் திறனைக் குறைத்து விடுவதுடன், பசி எடுப்பதையும் தடுத்துவிடும். 
பிரசவித்தவுடன் முதல் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு 10 முதல் 40 மி.லி அளவில் சுரக்கும் இளம் மஞ்சள் நிறத்தில் நீர்த்த திரவம்போல் காணப்படும் சீம்பால் அல்லது முதல் பாலில் (Colostrum) புரதம், வைட்டமின் B12, துத்தநாகம் போன்ற சத்துகளும், குழந்தையின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நொதிகளும், பெரியம்மை, தட்டம்மை, சளிக்காய்ச்சல் போன்ற நோய்கள் வராமல் தடுக்கும் எதிர்ப்புத்திறனும் செறிவாக இருப்பதால், குழந்தைக்குக் கட்டாயம் தாய்ப்பால் கொடுத்தாக வேண்டும். 
உலக சுகாதார நிறுவனம் (WHO) மற்றும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF) ஆகிய அமைப்புகளின் பரிந்துரைப்படி, பிறந்தது முதல் இரண்டு வயது வரை குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கப்பட வேண்டும். 
ஒவ்வொரு நாளும் 8 முதல் 12 முறைகள் பாலூட்ட வேண்டும். 
இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை பாலூட்ட வேண்டும். 
ஒவ்வொரு மார்பகத்திலும் குறைந்தது 20 நிமிடங்கள் முதல் 45 நிமிடங்கள் வரையில் இரண்டு மார்பகத்திலும் சமமாகப் பாலூட்டலாம். ஆனால், இடது பக்க மார்பகத்தில் பாலூட்டுவதுதான் வசதியாக இருக்கிறது என்று இளம் தாய்மார்கள் வலது பக்க மார்பில் பாலூட்டுவதை தவிர்க்கிறார்கள். அது தவறான செயல். 
தூக்கத்திற்கான தேசிய அமைப்பு (National Sleep Foundation) கொடுத்துள்ள வரைமுறையின்படி, பிறந்த குழந்தை, முதல் 3 மாதங்கள் வரையில் சுமார் 14 முதல் 17 மணி நேரம் வரை தூங்க வேண்டும் என்பதால், தூங்கும் குழந்தையை எழுப்பக்கூடாது என்று தாய் விட்டுவிடக்கூடாது. மெதுவாக குழந்தையை அசைத்து, தட்டிக்கொடுத்து பாலூட்ட வேண்டும். நான்காவது மாதத்திலிருந்து, 11 மாதங்கள் வரையில் 12லிருந்து 15 மணி நேரம் வரையில் குழந்தை தூங்க வேண்டும். 
மூன்று மணி நேரத்திற்கு மேலாக விழிக்காமலோ அல்லது தானாகவோ அழுதல், சிணுங்கல், அசைதல், வாயசைத்தல், உதடுகளை சப்புதல், கை கால்களை உதைத்தல் போன்ற செயல்பாடுகள் இல்லாமல் இருப்பின், கட்டாயம் குழந்தையை எழுப்பிப் பாலூட்ட வேண்டும். 
குழந்தை ஒரு பக்கம் பால் குடித்து முடித்தவுடன், மெதுவாகத் தூக்கி மார்போடு சேர்த்து, தோளில் அணைத்தபடி முதுகை மென்மையாகத் தட்டிக் கொடுக்க வேண்டும். ஏப்பம் வந்தவுடன் அடுத்த பக்கம் பாலூட்ட வேண்டும். முழுமையாகத் திருப்தியடைந்து குடிக்கும்வரை பொறுமையாகப் பாலூட்ட வேண்டும். பிறகு, மீண்டும் தோளில் அணைத்து, தடவிக் கொடுத்தபின்பு படுக்க வைக்கலாம்.
Cluster Feeding என்று கூறப்படும் குறைந்த நேர இடைவெளியில் அடுத்தடுத்து, சிறிது சிறிதாகப் பால் குடிப்பதும், பிறகு நீண்ட நேரம் தூங்க வைப்பதும் முழுவதுமாகப் பசியை ஆற்றாது. பல மணி நேரங்கள் பால் குடிக்காமல் இருப்பதால், குழந்தையின் தொண்டை வறட்சியாகிவிடுவதற்கும் வாய்ப்பு ஏற்பட்டுவிடும். 
குழந்தை பிறந்து முதல் ஐந்து நாட்களுக்கு கருமை, காவி நிறத்திலிருக்கும் பச்சிளம் குழந்தையின் மலம், பழுப்பு கலந்த மஞ்சள் நிறத்திற்கு மாறிவிடும். மேலும், ஒரு நாளைக்கு 3 அல்லது 4 முறைகள் மலம் வெளியேறினால், குழந்தை நன்றாகப் பால் குடிப்பதாகக் கருதலாம். 
நான்கு நாட்களுக்குப் பிறகும், குழந்தைக்குப் போதுமான பால் கிடைக்கவில்லை என்றாலும், பிளவுபட்ட அல்லது சிவந்து காயங்களுடன் வீக்கமடைந்த மார்புக்காம்புகள் இருந்தாலும், அல்லது, ஒரு நாளைக்கு 8 முறைகளுக்குக் குறைவாக குழந்தை பால் அருந்தினாலும் உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம். 

ப. வண்டார்குழலி இராஜசேகர், 
உதவி பேராசிரியர், மனையியல் துறை, 
அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி, காரைக்கால்.
- அடுத்த இதழில்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com