

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஏலகிரி மலைப் பகுதியில் வசித்து வருபவர் பொன். வென்னிலா. சில ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு பசு மாட்டை வைத்து பால் விற்பனை தொடங்கியவர். அதன் மூலம் வரும் வருமானத்தைக் கொண்டு இரவும் பகலும் ஓய்வில்லாமல் உழைத்து, தன் வாழ்க்கையையே மாற்றி அமைத்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து பொன்.வெண்ணிலா கூறுகையில், ""1960- ஆம் ஆண்டில் என் தந்தை பொன்னுசாமிக்கு இந்த ஏலகிரி மலையில் ஆசிரியர் பணி வழங்கப்பட்டது. இதன் காரணமாக இந்த மலைப் பகுதிக்கு வந்து சேர்ந்தோம். எனது தந்தை இங்கு வரும்போது, இந்த மலைப்பகுதியில் சரியான பாதை கூட இருக்கவில்லையாம். கல்வியறிவோ, விழிப்புணர்வோ இல்லாத மலைவாழ்மக்களுக்கு என் அப்பாதான் முதல் குரு. இந்த மக்களுக்கு பல வகைகளில் உதவிகள் செய்ய தொடங்கினார். சிறுவயதிலிருந்தே இதை பார்த்து வளர்ந்ததால், எனக்கும் அப்பாவை போன்று இந்த மக்களுக்கு நம்மாலான உதவிகள் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்தது.
அதற்காக, ஏதாவது வேலை செய்து வருமானத்தை உருவாக்கி கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். அந்த சமயத்தில்தான் இரண்டு பசுமாடுகள் வாங்கினேன். காலம், நேரம் பார்க்காமல் உழைத்ததனால் இரண்டு பசு மாடுகள், சிறு மாட்டுப்பண்ணையாக உருவெடுத்து கூடுதலாக வருமானம் கிடைக்க தொடங்கியது.
இவ்வருமானத்தின் அடிப்படையில், ஏலகிரியில் முதன்முதலாக சிறிய இயந்திரங்களை கொண்டு நெல், கோதுமை, அரிசி மாவு அரவை ஆலையை தொடங்கினேன். இது அப்பகுதிமக்களுக்கு பெரிய உதவியாக அமைந்தது. அதற்கு முன்பு இதற்காக ஜோலார்பேட்டை வரை மக்கள் செல்ல வேண்டி இருந்தது.
மலைப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு செய்தித்தாள் கிடைப்பதில்லை. மேலும், செய்திகளை அறிய வானொலி செய்தியைத் தவிர அங்கு வேறு வசதிகளும் இல்லை. குறைந்தபட்ச எண்ணிக்கையாவது இருந்தால்தான் பத்திரிகை முகவராக முடியும் என்றார்கள். இந்த சூழ்நிலையில், மலைப்பிரதேசம் என்பதால் விதிவிலக்கு வழங்க கோரி, முகவர் அங்கீகாரம் பெற்றேன். தற்போது இங்கு அனைத்து வார, மாதஇதழ்களும், செய்தித்தாள்களையும் படிக்க முடிகிறது.
அது போன்று, ஏலகிரியில் ஒரு நகல் எடுக்கவோ, லேமினேஷன், ஸ்பைரல் பைண்டிங் செய்யவோ எந்த வசதியும் கிடையாது. இதனால் முதன்முதலாக ஜெராக்ஸ் மையம் அமைத்தேன். மாணவர்களும் மற்றவர்களும் பெரிய அளவில் பயனடைந்து வருகிறார்கள்.
அதுபோன்று, "ஹோட்டல் அறிவு' என்று தங்கும் விடுதி ஒன்றை சுற்றுலா பயணிகளுக்காக அமைத்து கொடுத்தேன்.
பெரிய அளவில் சாதிக்க முடியாவிட்டாலும், இப்படி என்னால் முடிந்த சின்ன சின்ன உதவிகளை எங்கள் மலை வாழ்மக்களுக்கு தொடர்ந்து செய்து வருவதில் எனக்கு பெரிய மகிழ்ச்சி கிடைக்கிறது'' என்றார்.
அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு இவர் செய்து வரும் சேவையைப் பாராட்டி, டான்பாஸ்கோ கல்லூரி, 2012-இல் இவருக்கு ஏலகிரியில் "உழைப்பால் உயர்ந்த பெண்மணி' என்று பட்டம் வழங்கியுள்ளது குறிப்பிடதக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.