தூக்கி எறியும் சிரட்டையும் தொழிலாகலாம்!

'பிளாஸ்டிக் பயன்பாட்டை குறையுங்கள்' என்று குரல் எழுப்புவதுடன் நிற்காமல் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க நடவடிக்கையில் இறங்கி ஒரு தொழில் முனைவராக மாறியதுடன்,
தூக்கி எறியும் சிரட்டையும் தொழிலாகலாம்!
Published on
Updated on
2 min read

'பிளாஸ்டிக் பயன்பாட்டை குறையுங்கள்' என்று குரல் எழுப்புவதுடன் நிற்காமல் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க நடவடிக்கையில் இறங்கி ஒரு தொழில் முனைவராக மாறியதுடன், சுமார் பதினேழு பெண்களுக்கு வேலை வாய்ப்பும் வழங்கி வருகிறார் கோவையை அடுத்துள்ள கொண்டயம்பாளையத்தைச் சேர்ந்த ராதாலட்சுமி.
 தூக்கி எறியும் தேங்காய் சிரட்டையில் பல பொருள்களை செய்து தமிழ்நாட்டில் விற்கவில்லை. ஜப்பான், ரஷ்யா, வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக தேங்காய் சிரட்டை கொண்டு தயாரிக்கப்பட்ட ஐஸ் கிரீம் கப்புகள், தேநீர் குவளைகள், மது அருந்தும் குவளைகள், சிறிய பெரிய கரண்டிகள், கோப்பைகள், கிண்ணங்கள், சோப்பு பெட்டிகள், பூக்கள் வைக்கும் குவளைகள், மெழுகுவர்த்தி ஊதுபத்தி ஸ்டாண்ட், பறவைக் கூண்டுகள், பெண்கள் அணியும் ஜிமிக்கி, வளையல்கள், டாலர்கள் போன்ற அணிகலன்களைத் தயாரித்து ஏற்றுமதி செய்து வருகிறார். ராதாலட்சுமி தொடர்ந்து கூறுகிறார்:
 ""பிளாஸ்டிக் பயன்பாட்டை எப்படிக் குறைப்பது என்று யோசனை செய்தபோது எனது பகுதியில் அதிகமாகக் கிடைக்கும் தேங்காய் சிரட்டை எனது கவனத்தைக் கவர்ந்தது. சிரட்டையில் செய்யப்படும் பொருள்களுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு இருக்கிறது என்பதை அறிந்த நான் இந்த தொழிலில் இறங்கினேன். தேங்காய்களை மொத்தமாக வாங்கி உடைத்து பருப்புகளை தேங்காய் எண்ணெய் தயாரிப்பவர்களுக்கு விற்றுவிடுவோம். சிரட்டையை இரண்டு நாள் தண்ணீரில் ஊற வைப்போம். அப்போதுதான் சிரட்டையின் வெளிப்புறத்தில் இருக்கும் நார்களை சிரமமின்றி நீக்க முடியும். எல்லாவற்றிற்கும் இயந்திரங்களை வடிவமைத்து வாங்கினேன். சுற்றும் உருளையில் நார் உள்ள பகுதியைப் பிடித்தால் போதும். நார் கழன்று போய்விடும். பிறகு சிரட்டையில் உள்பகுதியைக் கடைந்து முதல் படிமத்தைக் களைந்து விட்டு மிருதுவாக்குவோம். வெளிப்பகுதியில் உள்ள சொரசொரப்பு தன்மையும் போக்குவோம். வாடிக்கையாளர்களின் தேவைப்படி வெளிப் பகுதியிலும் உள் பகுதியிலும் தேன் மெழுகு பூசி பளபளப்பைச் சேர்ப்போம். சிரட்டைக் கோப்பையை விரல்களால் பிடிக்க ஏதுவாக துளையிட்ட சிரட்டைத் துண்டினையும் ஓட்டுவோம். மது குவளைகளுக்குத் தனியாக பிடியைப் பொறுத்துவோம்.
 ஆரம்பத்தில் நாங்கள் தயாரித்த பொருள்களை விற்பனை செய்ய வீடு வீடாக ஏறி இறங்கினோம். வீட்டில் ஏறு முன்பே "ஒன்னும் வேண்டாம்மா..
 நிம்மதியா இருக்கவிடமாட்டேங்கிறீங்களே' என்று முகத்தில் அடித்தது போல சொன்னார்கள். கடைகளிலும் யாரும் வாங்க முன்வரவில்லை. வலிய சென்று விற்க முயற்சித்தால் "வேண்டாம்.. போ..' என்றுதான் விரட்டுவார்கள். நம்மைத் தேடி வரும் சந்தையை உருவாக்குவோம் என்றுதான் ஏற்றுமதி பக்கம் போனேன். இப்போது எனக்கென்று ஒரு சந்தை கிடைத்துவிட்டது. பல நாடுகளுக்கு "ஏ எஸ் ஆர்' என்ற நிறுவனத்தின் பெயரில் ஏற்றுமதி செய்து வருகிறேன்.

 பெண்களில் பலருக்கும் வருமானத்திற்காக "இதைச் செய்யலாமே... அதை தயாரிக்கலாமே' என்று தோன்றும். ஆனால் பெரும்பாலான பெண்கள் நடைமுறைப்படுத்த மாட்டார்கள். தேங்காய் சிரட்டையில் கழிவு என்று ஒன்றும் இல்லை. சிரட்டை உடைந்து போனாலும் எரிபொருள் ஆகிவிடும். நாறும் அப்படித்தான். எரிக்கலாம்... அல்லது எருவாக்கலாம்... சிரட்டையில் செய்யப்படும் பொருள்கள் உறுதியானவை. எளிதில் உடையாது. குறைந்த விலையில் சிரட்டை கிடைக்கும். சிரட்டையில் செய்யப்படும் பொருள்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம். நீண்ட காலத்துக்குப் பயன்படுத்தலாம். எல்லாவற்றிற்கும் மேலாக பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாகப் பயன்படுத்தலாம். அதனால் சுற்றுப்புறம் மாசுபடுவது குறையும்'' என்கிறார் ராதாலட்சுமி.
 - கண்ணம்மா பாரதி
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com