புற்றுநோயிலிருந்து காக்கும் தங்க மசாலா! - நாச்சாள்

தமிழர்கள் பின்பற்றும், பயன்படுத்தும் பலவற்றை மூடநம்பிக்கை என்று தமிழர்களையே நம்பவைத்து மூடர்களாக்கி.. அவற்றிற்கு புதுவடிவம் அளிக்கிறது நவீன உலகம்.
புற்றுநோயிலிருந்து காக்கும் தங்க மசாலா! - நாச்சாள்
Updated on
4 min read

தமிழர்கள் பின்பற்றும், பயன்படுத்தும் பலவற்றை மூடநம்பிக்கை என்று தமிழர்களையே நம்பவைத்து மூடர்களாக்கி.. அவற்றிற்கு புதுவடிவம் அளிக்கிறது நவீன உலகம். காலம் காலமாக எந்த படிப்பும் படிக்காத நமது முன்னோர்கள் நமக்கு பெரும் பொக்கிஷங்களை கற்றுக்கொடுத்துள்ளனர். அவற்றை பின்பற்றினாலே போதும் வாழ்வு சிறக்கும்.
பல்லாண்டுகாலமாக நமது முப்பாட்டியும், எள்ளுப்பாட்டியும் சாதாரணமாக அஞ்சறைப்பெட்டியில் இருக்கும் ஒருபொருளை வைத்து பல மாயங்களை செய்தனர். அதிலும் அந்த பொருளை எவ்வாறு, எவற்றுடன், எவ்வளவு, எப்படி யெல்லாம் சேர்க்கவேண்டும் என்று உறுதியாக தெரிந்து அவற்றை அளவோடு தினம்தினம் மறவாமல் சேர்த்தனர். அதன் காரணமாக இந்தியாவிலும், தமிழகத்திலும் தோல், குடல் புற்றுநோய்கள் குறைவு.
அது என்ன நவீன யுகத்தில் உலகத்தையே ஆட்டிப்படைக்கும் புற்றுநோயை தடுக்கும் இந்திய மருந்து என்று வியப்பாக உள்ளதா? நீங்கள் மட்டும் இதைகேட்கவில்லை, பல அறிஞர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் கூட இந்த கேள்வி உள்ளது. புற்றுநோயைக்கூட தடுக்கும் மருந்தா என்று நமது அஞ்சறைப்பெட்டியில் இருக்கும் அந்த தங்க மசாலாவை ஆராய்ச்சிக்குட்படுத்தியது பல நாடுகள். ஆராய்ச்சி முடிவுகளை கண்டதும் அந்த பொருளுக்கே காப்புரிமை பெற்றுவிடலாம் என்று கூட பல நாடுகள் துடித்தது... அந்த தங்க மசாலா வேறொன்றுமில்லை... நமது மஞ்சள் தான்.
காலம் காலமாக நமது உணவிலும், வாழ்விலும் பின்னிப்பிணைந்திருக்கும் மஞ்சளின் அருமையைப் பார்ப்போம்: 
உணவாகவும், மருந்தாகவும் மட்டுமல்லாமல் ஆத்மார்த்தமாகவும், மனரீதியாகவும் பல நன்மைகளை மஞ்சள் அளிக்கிறது. மஞ்சள் சிறந்த கிருமி நாசினி, நோய் எதிர்ப்பு திறன், ஆன்டி ஆக்ஸிடென்ட், அழகு, புனிதம் என பலவாக நமக்கு நன்மையை அளிக்கிறது. சுவையூட்டியாகவும், நிறமூட்டியாகவும் கூட மஞ்சள் உள்ளது. 
சமீபத்திய மருத்துவ உலகம் மஞ்சளில் செய்த பல ஆராய்ச்சியில் அதில் இருக்கும் குர்க்குமின் என்ற வேதிப்பொருள் பல வகையான புற்றுநோயை தடுக்கிறது என்பதால் புற்றுநோய்களுக்கான மருந்துகளில் மஞ்சளை சேர்க்கலாம் என்று வெளியிட்டுள்ளது. இதன்காரணமாக அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வெளிநாடுகள் பிரத்யேகமாக மஞ்சளை சிறப்பு உணவாக விற்பனை செய்து வருகிறது.
அன்றாட உணவில் சாம்பார், ரசம், பொரியல், கூட்டு என அனைத்திலுமே அளவான மஞ்சளை கலப்பதால் சாதாரண சளி முதல் புற்றுநோய்வரை வரும் வாய்ப்புகள் குறைவாக உள்ளது என்கிறது பல ஆய்வுகள். 
அந்த காலத்தில் மஞ்சளை நமது பெண்கள் உடல் முழுவதும் பூசி குளித்ததால் எந்த சரும நோய்களும், தோல் புற்றுநோயும் பெருமளவில் நமது பெண்களை அண்டவில்லை. அறுபது வயதிலும் இளமையான தோற்றத்துடன்இருந்தார்கள். ஆனால், இனியும் இந்த நிலை நீடிக்கும் என்று சொல்ல முடியாது. காரணம் இன்றைய பெண்கள் (நகரம் மற்றும் கிராமங்களிலும்) மஞ்சளை மறந்து பல பல கிரீம்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதனால் பெரும்பாலான பெண்கள் நாற்பது வயதை தாண்டினாலே அவர்களின் முகத்தில் ஒருவகை சுருக்கம், முதுமை தோற்றம் காணப்படுகிறது.
ஆம், இன்று நமது இளைய தலைமுறை பெண்கள் பயன்படுத்தும் அழகு சாதனங்களில் சாதாரண பவுடர் முதல் ப்ளஷ், கரெக்டர், கன்சிலர், கிளென்சர் என எல்லாமே சரும புற்றுநோய்க்கு வித்தே. அதுமட்டுமல்லாது வியர்வை நாற்றம், மற்ற உடல் துர்நாற்றம் போன்றவற்றிற்கும் இவையே முதல் காரணமாகவும் உள்ளது. உடல் துர்நாற்றம் உள்ளது என்று நாம் பயன்படுத்தும் பாடி ஸ்பிரே, டியோட்ரண்ட் போன்றவையும் சரும நோய்களுக்கு காரணமாகிறது. 
கருவிலேயே நமது நிறம், முடி போன்றவை நிர்ணயிக்கப்பட்டாலும் அது புரியாமல் தொலைக்காட்சியில் வருவது போல் வெள்ளையாக மாறிவிடலாம் என்று வருடக்கணக்கில் சிகப்பழகு கிரீம்களை வாங்கி பயன்படுத்தி பணம் விரையமானது மட்டுமல்ல நமது ஆரோக்கியமும் காணாமல் போய்க்கொண்டிருக்கிறது. ஒருநாளாவது யோசித்ததுண்டா.. கடந்த பத்து ஆண்டுகளாக நாமும் இந்த கிரீம்களை பயன்படுத்துகிறோம். ஆனால் நிறம் சற்றாவது வெளுத்திருக்கிறதா என்ன? மாறாக பல கருப்பு திட்டுகள், புள்ளிகள், பருக்கள் போன்றவைதான் மிச்சம். மஞ்சள் இவை அனைத்திற்கும் மருந்தாக உள்ளது.
எந்த மஞ்சளை பயன்படுத்துவது? 
மஞ்சள் என்பது ஒருவகையான கிழங்கு செடி வகையைச் சேர்ந்தது. உடலுக்கு ஒருவகை வெப்பத்தைக் கொடுக்கக் கூடியது. அதனால் நச்சு கிருமிகளை அழிக்கிறது. பல வகையான மஞ்சள் உள்ளது. உருண்டை மஞ்சள், விரலி மஞ்சள், கஸ்தூரி மஞ்சள் போன்றவை அனைவரும் அறிந்ததே. 
• உருண்டை மஞ்சள் உடலுக்கு உரசி பூசும் மஞ்சள், பலவகையான நன்மைகளைக் கொண்டது. மஞ்சள் நிறத்தைக் கொடுக்கக் கூடியது.
பிவிரலிமஞ்சள் என்பது உட்கொள்ள பயன்படும் மஞ்சள், அரைத்து தூளாக பயன்படுத்துவது தமிழர்களின் பழக்கம். மிளகாயில் உள்ள நச்சுகளை இந்த மஞ்சள் நீக்கி உடலின் குடலையும், வயிற்றையும் காக்கிறது. 
• கஸ்தூரி மஞ்சள்.. உடலில் பூசி குளிக்க எந்த நிறத்தையும் அளிக்காது. சருமம் பளபளப்பாகவும், நல்ல தேஜசுடனும் காணப்படும். 
ஒருவகையான மணத்தையும் கொடுக்கக் கூடியது. உடலில் ஏற்படும் துர்நாற்றம், வியர்வையை போக்க சிறந்தது. பெண்கள் முகத்தில் இருக்கும் தேவையற்ற சிறு முடிகளை போக்கக்கூடியது.

• மஞ்சளை புண்கள் உள்ள இடத்தில் பூசினால் விரைவில் குணமாகும். தோலில் ஏற்படும் படை, சொறி, சிரங்கு போன்றவற்றிற்கு மஞ்சளை பற்றாக போடலாம். கரும்புள்ளிகள், பருக்கள், திட்டுகள் போன்றவற்றிற்கு மஞ்சள் பூச விரைவில் மறையும். மஞ்சளை நெருப்பில் சுட்டு அந்த புகையை நுகர்ந்தால் தலையில் கோர்த்துள்ள நீர், மூக்கடைப்பு அகலும்.
இத்துணை சிறந்த மஞ்சளை அன்றாடம் காலையில் தேநீராக குடிப்பதும் (செய்முறை இறுதியில் உள்ளது), உடலுக்கு பூசிக் குளிப்பதுமே போதுமானது.. மஞ்சளின் முழுப் பலனையும் நாம் பெறலாம். சர்க்கரைநோய், ரத்தக்கொதிப்பு, உடல்பருமன், மூட்டுவலி, உடல்வலி, நரம்புகளில் சேரும் தேவையற்ற அமிலாய்டு புரதத்தை கரைப்பது என தொடங்கி புற்றுநோய் வரை போக்கக்கூடிய தன்மை இந்த மஞ்சளுக்கு உள்ளது.
இவ்வளவு நன்மைகளா மஞ்சளில் என்று உடனே கிளம்பிவிடாதீர்கள், பொட்டலத்தில் விற்கும் மஞ்சள் தூளை வாங்குவதைத் தவிர்க்கவும் காரணம், பொட்டலத்தில் உள்ள மஞ்சள் தூளிலும் ரசாயனங்கள் கலப்பதால் சமையலுக்கு பயன்படுத்தும் மஞ்சளை விரலி மஞ்சள் வாங்கி நீங்களே அரவை கடையில் கொடுத்து அரைத்து பயன்படுத்தவும். அதுவே நமது தலைமுறையினருக்கு சிறந்தது. அதிலும் இயற்கையில் விளைந்த மஞ்சளாக இருக்க சிறந்தது.
கஸ்தூரி மஞ்சள் கிழங்கை நாட்டு மருந்து கடைகளில் வாங்கி நேரடியாகவோ அல்லது வெட்டிவேர் போன்ற சேர்மானங்களுடன் சேர்த்து நாமே அரைத்து பயன்படுத்தி பலன்பெறலாம். 

சரி இனி மஞ்சள் தேநீர் பற்றி பார்ப்போம்:
மஞ்சளில் இருக்கும் குர்க்குமினை உடல் உட்கிரகிக்க அவசியமான ஒன்று பைப்பரின் (piperine) எனப்படும் வேதிப்பொருள். அது ஒன்றுமில்லை மிளகிலிருக்கும் (pepper) ஒரு சத்துப்பொருள் தான். மிளகிலிருக்கும் இந்த பொருள் மஞ்சளில் இருக்கும் குர்க்குமினுடன் சேர்ந்தால் மட்டுமே அதனை நமது உடல் உட்கிரகித்து மருந்தாக வினைபுரியும். அதனால் தான் மிளகு, மஞ்சள் சேர்த்த ரசம், மிளகு, மஞ்சள் சேர்த்த பால் போன்றவற்றை நமது முன்னோர் வகுத்து வைத்துள்ளனர். இதனையே தேநீராக அருந்த உடலும் குடலும் சுத்தமாகிறது, மேலும் இந்த தேநீரால் கல்லீரலில் உள்ள நச்சுக்கள் வெளியேறுகிறது, உடலுறுப்புகள் பலப்படுகிறது, புற்றுநோயினை தடுக்கிறது, செரிமானக் கோளாறுகள் நீங்குகிறது. தைராய்டு தொந்தரவுகள், கருப்பை தொந்தரவுகள் போன்ற ஹார்மோன் பாதிப்புகளுக்கு சிறந்த மருந்தாக உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதனை பருகுவதால் இன்சுலின் சுரப்பு தூண்டப்படுகிறது. உடல் கொழுப்பை குறைக்கும்.
சருமத்தைப் பாதுகாக்கும், தோல்நோய்களிலிருந்து காக்கும். இருதய நோய் வராமல் காக்க உதவும். பித்த நோய் கட்டிகளை போக்கும். மூட்டு வலியை குறைக்கும். நுரையீரல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். சாதாரணமாக வரக்கூடிய சளி, காய்ச்சல் முதல் உயிர்கொல்லி நோய்கள் என பல நோய்களுக்கும் மருந்தாக இருக்கும் இந்த தேநீரை தயாரிப்பது குறித்து பார்ப்போம்.
ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் அல்லது அதற்கு இணையான பச்சை மஞ்சள் கிழங்கினை எடுத்துக் கொள்ளவேண்டும். பச்சை மஞ்சளாக இருந்தால் சிறிது நசுக்கி எடுத்துக்கொள்ளவேண்டும். அதனுடன் ஒரு சிட்டிகை மிளகு தூள் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு கப் நீரினை நன்கு கொதிக்கவைத்துக் கொள்ளவேண்டும். பின் அடுப்பை அணைத்துவிட்டு அதனில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் மிளகு தூள் இரண்டையும் சேர்ந்து ஐந்து முதல் பத்து நிமிடங்கள் மூடிவைக்கவேண்டும். இளம்சூடாக இருக்கும் இதனில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து பருகலாம். சற்று மணமும் சுவையும் தேவைப்பட்டால் ஒரு துண்டு இஞ்சி அல்லது சிறிது சுக்கு தூள் சேர்த்துக்கொள்ளலாம். 
உடலின் தொற்றுகளை போக்கும் இந்த தேநீர் சிறந்த நோய்யெதிர்ப்பு சக்தியை அளிக்கும். இனி இந்த மஞ்சள் தேநீர் அருந்தி பல பலன்களை பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com