

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் 51 வயதான ஜி.எஸ். லட்சுமி. ஐசிசி சர்வதேச போட்டி நடுவர்கள் பட்டியலில் இடம் பெற்ற முதல் பெண் நடுவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதன் மூலம் அவர் சர்வதேச ஆட்டங்களில், ஆண்கள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டிகள் உள்ளிட்ட அனைத்திலும், போட்டி நடுவராகச் செயல்பட உள்ளார். தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தில் கிரிக்கெட் எப்படி இணைந்து கொண்டது என்ற சுவாரஸ்யமான கதையை விவரிக்கிறார்:
"ராஜமுந்திரி எனது சொந்த ஊர். அப்பாவுக்கு இரும்பு ஆலையில் பணி. அதனால் அனைவரும் ஜாம்ஷெட்பூருக்குக் குடி பெயர்ந்தோம். வீட்டிற்கு ஒரே செல்ல மகள் நான். எனக்கு இரண்டு அண்ணன்கள். அம்மா அப்பாதான் என் உலகம்.
அடுத்து எனக்குத் தெரிந்த ஒன்று கிரிக்கெட். ஒரு விளையாட்டு வீராங்கனையாக என் பள்ளிப்பருவம் தொடங்கியது. என்னுடைய பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவு எனக்குக் கசப்பான அனுபவத்தைத் தந்தது. மிகவும் குறைவான பெண்கள் எடுத்திருந்தேன். இதனால் குடும்ப உறவினர்கள், நண்பர்களின் கேலி பேச்சுக்கு ஆளானேன். என்னுடைய திறமை என்பதை அவர்களாகவே மதிப்பிட்டு ஏளனம் செய்தார்கள். அவர்கள் செய்த ஏளனம் தான் ஏணி படியில் ஏறத் தூண்டியது.
அடுத்தவர்கள் நினைத்தது போலவேதான் என்னுடைய வாழ்க்கையிலும் பல சம்பவங்கள் நிகழ்ந்தன. குறைவான மதிப்பெண் காரணமாகக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. என்னுடைய தந்தை அந்தக் கல்லூரி முதல்வரிடம் கெஞ்சியும் அவர் இடம் தர மறுத்துவிட்டார். அதற்கு அவர் சொன்ன ஒரே காரணம் மதிப்பெண் தான்.
உடனே வேறு ஒரு கல்லூரியில் சேர முயற்சித்த போது அங்குள்ள முதல்வர் கேட்டார் "உங்கள் மகள் வேறு ஏதாவது துறையில் சிறந்த விளங்குபவரா என்று கேட்டார்'. உடனே என் தந்தை கிரிக்கெட், டென்னிஸ் விளையாடுவாள் என்று சொல்லியுள்ளார். உடனே விளையாட்டு ஆசிரியரை வரச்சொல்லி என்னுடைய திறமைகளைப் பரிசோதிக்கச் சொன்னார். அவரும் என்னை வேகப்பந்து வீச சொன்னார். நான் பந்து வீசுவதைப் பார்த்து அசந்து போய்விட்டார். என்னைப் பற்றிய விவரங்களைக் கேட்டவர், கண்டிப்பாக இந்தப் பெண் நம்முடைய கல்லூரியில் படித்தால் நமக்குத் தான் பெருமை என்று முதல்வரிடம் கூறினார். உடனே எனக்கு அந்தக் கல்லூரியில் இடம் தரப்பட்டது. மதிப்பெண் குறைவு என்று படிப்பு மறுக்கப்பட்ட நிலையில் எனக்கு அந்த வாய்ப்பை பெற்றுத் தந்தது கிரிக்கெட் தான். என்னுடைய விளையாட்டு உலகத்திற்கான வாசல் முழுமையாக திறக்கப்பட்ட தருணம் அது தான்.
நான் கிரிக்கெட் விளையாடிய தருணம் இதுபோன்ற தொழில் நுட்ப வளர்ச்சி அடையவில்லை. கிரிக்கெட் விளையாட்டின் கள நிலவரத்தை வர்ணனையாக ரேடியோவில் தான் கேட்க முடியும். 1985-ஆம் ஆண்டுகளில் தான் தொலைக்காட்சியில் கிரிக்கெட் விளையாடுவதை பார்த்து இருக்கிறோம். அன்றைய காலகட்டங்களில் ஆர்வம் உள்ள பல பெண்களுக்குப் போதிய ஒத்துழைப்பும், விளையாடுவதற்கான வசதியும் கிடைக்காது. ஆனால் இன்று அப்படி அல்ல. பெண் குழந்தைகள் பலர் கிரிக்கெட் உபகரணங்களுடன் விளையாடச் செல்வதைப் பார்க்க முடியும். பெருநகரங்களில் பெண்களுக்காக ஏராளமான பயிற்சி மையங்கள் உள்ளன.
குடும்பத்தின் துணை இல்லாமல் பெண்கள் விளையாட்டில் சாதிப்பது அத்தனை சாத்தியமில்லை. என்னுடைய ஒரே மகளை என் அம்மா தான் வளர்த்து ஆளாக்கினார். அதனால் தான் என்னால் கிரிக்கெட் இத்தனை உயரத்தை எட்ட முடிந்தது'' என்றவரிடம் பெண்கள் கிரிக்கெட் பற்றிக் கேட்ட போது சொன்னார்.
இந்தியாவில் 1980-ஆம் ஆண்டுகளில் ஆண்கள் விளையாடிய உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் உலகின் போக்கை மாற்றியது. அதே போல 2017-இல் பெண்கள் விளையாடிய உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள், உலகில் உள்ள அனைவர் கவனத்தையும் ஈர்த்தது. அப்போது தான் ஊடக வெளிச்சம் முழுமையாகக் கிரிக்கெட் மீது பட்டது. பெண்கள் கிரிக்கெட் அணிகளுக்கு மிகுந்த உத்வேகம் அளிப்பதாக இருந்தது. இந்தியாவில் ஒவ்வொரு வீட்டிலும் பெண்கள் கிரிக்கெட் விளையாடுவதை ஆர்வமாகப் பார்க்க ஆரம்பித்த தருணம் அது. தற்போது பல பெண்கள் கிரிக்கெட் விளையாட்டைத் தங்களின் பிரதான துறையாகத் தேர்வு செய்யத் தொடங்கியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
கிரிக்கெட் நடுவராகத் தேவையான தகுதிகள் என்ன?
கிரிக்கெட்டில் நடுவராக வேண்டும் என்றால் முதலில் நீங்கள் கிரிக்கெட் வீரராக இருக்க வேண்டும். கருத்துகளைத் தெளிவாக வெளிப்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும். இன்று பலரும் கிரிக்கெட் விதிகளை அறிந்திருக்கின்றனர். மறுபுறத்தில் எல்லாவற்றிற்கும் நடுவர்களைச் சுலபமாகக் குறை சொல்லி விடுகின்றனர். அதை ஏற்கும் மனநிலையும் உறுதியையும் கொண்டிருக்க வேண்டும். நடுவராக இருப்பது மிகவும் சவாலான வேலைதான். நடுவராக, மிகக்கடுமையான சூழல்களைக் கையாளும் சந்தர்ப்பங்கள் இன்னும் எனக்கு அமையவில்லை. எதிர்வரும் போட்டிகளில் அப்படியான சூழல் வந்தால் நிச்சயம் அதைச் சரியான முறையில் கையாள்வேன் என்ற நம்பிக்கை உள்ளது.
கிரிக்கெட் நடுவராக நியமிக்கப்பட்ட தருணம் எப்படி இருந்தது?
ஐ.சி.சி குழுவினர் என்னை முதல் பெண் போட்டி நடுவராகத் தேர்ந்தெடுத்தது என்பது எனக்குக் கிடைத்த மிகப்பெரும் கெளரவமாகக் கருதுகிறேன். நான், நீண்ட காலமாகக் கிரிக்கெட் வீரராக இருந்துள்ளேன். அந்த அனுபவமும் எனக்கு உதவும். தற்போது இந்திய ரயில்வே பணியில் இருந்துகொண்டேதான் வரப்போகும் போட்டிகளில் நடுவராகப் பணிபுரியப் போகிறேன். ஒருவேளை பணிச்சுமை அதிகமாக இருப்பதாக நான் உணர்ந்தால். என்னுடைய ரயில்வே பணியை ராஜினாமா செய்துவிட்டு, கிரிக்கெட் நடுவராக தொடர்வேன்.
-வனராஜன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.