திருநீற்றுப் பச்சிலையின் சிறப்புகள்!

திருநீற்றுப்பச்சிலை அதிக மணமுடைய, வெளிறிய கருஞ்சிவப்பு நிறமான, பருத்த பூங்கொத்துகளையுடைய தாவரம். 1 மீட்டர் வரை உயரமானவை.
திருநீற்றுப் பச்சிலையின் சிறப்புகள்!
Published on
Updated on
1 min read

திருநீற்றுப்பச்சிலை அதிக மணமுடைய, வெளிறிய கருஞ்சிவப்பு நிறமான, பருத்த பூங்கொத்துகளையுடைய தாவரம். 1 மீட்டர் வரை உயரமானவை. மலர்கள், இள மஞ்சள் நிறமானவை, அடர்த்தியான உரோமங்கள் காணப்படும். நறுமணம் மிக்க திருநீற்றின் வாசனையை இது ஒத்திருக்கும்.  அதனால்தான் இந்தத் தாவரத்திற்கு திருநீற்றுப் பச்சை என்று பெயர். விதைகள் ஈரமான நிலையில் பசைப்பொருள் கொண்டவை. இந்தச் செடிக்கு கற்பூரத் துளசி, பச்சிலை, உருத்திரச் சடை என  மாற்றுப் பெயர்களும் உண்டு. இலை, விதை ஆகியவை மருத்துவப் பயன்கொண்டவை. விதைகளுக்குச் சப்ஜா விதை, ஷர்பத் விதை போன்ற பெயர்களும் உண்டு. இவை, நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.

திருநீற்றுப் பச்சையின் முழுத் தாவரமும் விறுவிறுப்பான சுவையோடு குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. இலை, வியர்வைப் பெருக்கியாகவும், தாது வெப்பத்தை அகற்றி உடலைத் தேற்றவும் பயன்படும். பொதுவாக, சளி, காய்ச்சல், குடல் புழுக்கள், வயிற்றுக் கோளாறுகள், கீல்வாதம் போன்றவற்றிற்கு இது மருந்தாகப் பயன்படுகின்றது. இலைச்சாறு, மூக்கடைப்பை நீக்கும்; தோல் வியாதிகளைப் போக்கும்; குடல் புழுக்களை வெளியாக்கும்.

இலை எண்ணெய்யிலிருந்து கற்பூரம் போன்றதொரு வாசனைப் பொருள் தயாரிக்கப்படுகின்றது.

* விதைகள் (சப்ஜா விதை) சீதபேதி, வெள்ளைப்படுதல், இருமல், மூலநோய், மலச்சிக்கல் போன்றவற்றைக் குணமாக்கவும், சிறுநீரைப் பெருக்கவும் பயன்படுகின்றன.

* கால் ஆணி குணமாக பாதிக்கப்பட்ட  இடத்தை சுத்தம் செய்து அரைத்த இலைகளை, அந்த இடத்தில் வைத்துக் கட்ட வேண்டும்.

* உடம்பில் தோன்றும் கட்டிகள் உடைய தேவையான அளவு இலைகளை அரைத்து கட்டியின் மீது பூச வேண்டும்.  ஒரு நாளைக்கு இரண்டு முறைகள் வீதம் 3 நாட்கள் தொடர்ந்து செய்துவர வேண்டும்.

* இலைச்சாற்றுடன் வசம்பைச் சேர்த்து அரைத்து, பசைபோலச் செய்து, நன்றாகக் குழைத்து, பருக்கள் உள்ள இடத்தில் தடவினால் முகப்பரு மறையும்.

* இருமல் தொல்லையால் அவதிப்படுபவர்கள் திருநீற்றுப் பச்சையின் இலைச்சாறு, தேன் ஆகியவற்றை சமமாகக் கலந்து, 30 மி.லி. அளவு குடிக்க வேண்டும். தினமும், 2 வேளைகள் இவ்வாறு செய்ய இருமல் மட்டுப்படும்.

* இலைச்சாறு 2 தேக்கரண்டி அளவுடன், காய்ச்சாத பசும்பால் ஒரு டம்ளர் கலந்து, உள்ளுக்குச் சாப்பிட வெள்ளைப்படுதல் குணமாகும்.

* வெறுமனே இலையை முகர்ந்துப் பார்த்தால் தலைவலி, இதயநடுக்கம், தூக்கமின்மை சரியாவதுடன், மூக்கில் வரும் வியாதிகள் சரியாகும். 

* இலைச்சாறுடன் சம அளவு தேன் கலந்து சாப்பிட்டால் மார்புவலி, இருமல், வயிற்று வாயு பிரச்னைகள் சரியாகும்.

* திருநீற்றுப் பச்சிலையின் இலையை மென்று சாப்பிட்டால் வாய்வேக்காடு சரியாகும். தேள் கடியால் வலி ஏற்படும்போது அதன் கடிவாயில் இந்த இலையை கசக்கி பூசினால் வலி குறையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com