கோழி வளர்ப்பில் கொட்டிக்கிடக்குது லாபம்!

"தற்போது பள்ளி படிப்பை முடித்த பலர் பொறியியல் படிப்பைத் தேர்ந்தெடுக்கின்றனர். இதில் பலர் சரியான வேலையின்றி, குறைந்த சம்பளத்திற்கு வேலைக்குச் செல்கின்றனர்.
கோழி வளர்ப்பில் கொட்டிக்கிடக்குது லாபம்!
Updated on
2 min read

இல்லத்தரசிகளும் தொழில் முனைவோர் ஆகலாம்! 39
 "தற்போது பள்ளி படிப்பை முடித்த பலர் பொறியியல் படிப்பைத் தேர்ந்தெடுக்கின்றனர். இதில் பலர் சரியான வேலையின்றி, குறைந்த சம்பளத்திற்கு வேலைக்குச் செல்கின்றனர். அப்படியும் நல்ல வேலை, நல்ல சம்பளம் என்றாலும் கூட அந்த வேலைப் பளுவினால் ஏற்படும் மன அழுத்தத்தின் காரணமாக வேலையைப் பாதியில் விட்டுவிட்டு சொந்தமாக தொழில் தொடங்கவே ஆர்வம் காட்டுகின்றனர். அதுபோன்று சொந்த தொழிலில் ஆர்வமுள்ளவர்கள் கோழி வளர்ப்பில் ஈடுபடலாம். ஏனென்றால், கோழி வளர்ப்பில் கொட்டிக் கிடக்குது லாபம் . எனவே, இந்த வாரம் கோழிப் பண்ணை அமைத்து எப்படி தொழில் செய்து லாபம் எடுப்பது, கோழி குஞ்சுகள், அதற்கான தீவனம், அதனை விற்பது பற்றி விரிவாக பார்ப்போம்'' என்கிறார் சுயதொழில் ஆலோசகர் உமாராஜ்:
 "கோழிப்பண்ணை அமைப்பது எனும்போது அது நகரத்தில் இயலாத காரியம். நகரத்தை தாண்டி உள்ள ஊர்களில் இதனைச் சிறப்பாக செய்யலாம். காரணம், கோழிப் பண்ணை வைப்பதற்கு நல்ல இட வசதி வேண்டும். அதாவது, 300 அடி நீளம் 23 அடி அகலத்திற்கு கிழக்கு - மேற்காக அமைக்க வேண்டும். அப்போதுதான் சூரிய வெளிச்சம் மிதமாக இருக்கும். கூரை ஆஸ்பெட்டாஸ் -ஆக இருந்தால் நீண்ட வருடங்களுக்கு பராமரிப்பு செலவு இருக்காது.
 பண்ணையின் உள்ளே நான்கு, நான்கு பிரிவாக பிரித்து அதில்தான் கோழிகளை பராமரிக்க வேண்டும்.
 நாம் கோழிப் பண்ணை அமைக்கும்போது இதற்கான நிறுவனங்களை அணுகினால் போதும். அவர்களே கோழி குஞ்சுகள் மற்றும் தீவனங்களை சப்ளை செய்வார்கள். பிறகு கோழிகள் வளர்ந்தபின் அதை அவர்களே நம் இடத்திற்கே வந்து வாங்கிக் கொள்வார்கள். கோழிகள் வளர்ப்பும் ஏறத்தாழ பயிர் செய்வது போன்றதுதான். நாம் வயலில் நாற்றங்கால் வைப்பது போன்று முதலில் கோழிக் குஞ்சுகளை கொட்டகையை இரண்டாக பங்கிட்டு 150 அடியில் கோழிக் குஞ்சுகளை 6 நாட்கள் தனியாக பராமரிக்க வேண்டும். பிறகு 4 பிளாக்கிற்கும் கோழிக் குஞ்சுகளை பிரித்து விட வேண்டும். ஒவ்வொரு பிளாக்கிற்கும் இடையே ஒன்றரை அடி உயர தடுப்பு சுவர் இருக்க வேண்டும் அப்போதுதான் கோழிகள் ஒரு பக்கத்தில் இருந்து அடுத்த பக்கத்திற்கு போகாமல் இருக்கும். கோழிகள் எப்போதும் தீவனம் தின்று கொண்டே இருக்கும். மேலே சொன்ன அளவுள்ள பண்ணை இடத்தில் 5000 கோழிகளை வளர்க்கலாம். இவற்றிற்கு தீவனம் எவ்வளவு முக்கியமோ அதே போன்று தண்ணீரும். தண்ணீர் எப்போதும் இவைகளுக்கு ஒரே சீராக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு இவற்றிற்கு 8 மூட்டை தீவனமும் 2000 லிட்டர் தண்ணீரும் தேவைப்படும்.
 பண்ணையின் எல்லா பக்கமும் திரைப்போட்டு உள்ளே வெப்பம் ஒரே சீராக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். வெய்யில் காலங்களில் வெப்பத்தைத் தணிக்க கூரை மீது தண்ணீர் தெளிக்க வேண்டும். கோழிகள் தீனி சரியாக எடுக்க வில்லை என்றால், அதற்கு ஏதோ பிரச்னை என்று அர்த்தம். அப்போது கால்நடை மருத்துவரை அழைத்து வந்து காட்டலாம். போகப்போக அனுபவத்தில் நாமே அவைகளுக்கு ஏற்படும் பிரச்னைகளை சரி செய்து விடலாம்.
 கறிக்கோழிகள் இரண்டரை கிலோ எடை வரை வளர 45 நாட்கள் ஆகும். நல்ல எடை வந்தப் பிறகு நமக்கு கோழிக் குஞ்சுகள் கொடுத்த நிறுவனமே வந்து கோழிகளை எடைபோட்டு எடுத்துக் கொண்டு அதற்கான தொகையில், கோழித் தீவனம், கோழிக் குஞ்சுகள் சப்ளை செய்ததற்கான தொகையை கழித்துக் கொண்டு மீதியை கொடுத்து விடுவார்கள்.
 இந்த அளவு பண்ணையில் பராமரிக்கப்படும் கோழிகளுக்கு நமக்கு ஒரு தடவையில் ரூபாய் ஒரு லட்சம் வரை நிச்சயம் லாபம் கிடைக்கும். கோழிகளை விற்ற பின்னர், அந்த இடத்தில் உள்ள கோழிக் கழிவுகளை எடுத்து உரமாகவும் விற்று விடலாம். பின்னர், உள்ளே வெள்ளை அடித்து 15 முதல் 20 நாட்கள் வரை பராமரிப்புக்கு ஒதுக்க வேண்டும். பிறகுதான் அடுத்த கோழிக் குஞ்சுகளை வாங்கி விட வேண்டும். இதற்கான பராமரிப்புப் பணியை ஆரம்பத்தில் நாமே பார்த்துக் கொள்ளலாம்.
 இவ்வாறு கோழிப் பண்ணை வைப்பதினால் நமக்கு ஒரு (அறுவடை) வளர்ப்புக்கு எல்லாச் செலவுகளும் போக ஒரு லட்ச ரூபாய் கையில் கிடைக்கும். இடம் இருப்பவர்கள் இரண்டு மூன்று பண்ணைகளாக கூட வைக்கலாம். இதனால் கூடுதல் லாபம் தானே. கூடுதல் விவரங்களுக்கு உங்கள் பகுதியில் உள்ள கால்நடை ஆராய்ச்சி நிலையத்தை தொடர்பு கொள்ளலாம்'' என்றார்.
 - ஸ்ரீ
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com