என் பிருந்தாவனம்! - பாரததேவி 

மகன் பின்னாலேயே ஓடிவந்த சங்கரி மருமகளின் பாதங்களைப் பார்த்தாள். இதுவரையில் மண்தரையில் கூட வெறுமையாக மிதிக்காத அவள் மென்மையான பாதங்களில் எங்கும்
என் பிருந்தாவனம்! - பாரததேவி 
Updated on
2 min read

மகன் பின்னாலேயே ஓடிவந்த சங்கரி மருமகளின் பாதங்களைப் பார்த்தாள். இதுவரையில் மண்தரையில் கூட வெறுமையாக மிதிக்காத அவள் மென்மையான பாதங்களில் எங்கும் ரத்தத் துளிகள் பொட்டு, பொட்டாய் துளிர்த்திருந்தது. 
"இப்படி கால மொத்தத்தையும் பாழாக்கிக்கிட்டயே தாயீ, அது முள்ளு செடின்னு உனக்கு தெரியாதா'' என்றவாறு, வரப்பில் அமர்ந்து, அவள் காலை மடி மீது வைத்து, காலில் தைத்திருந்த முட்களை நீக்கிக் கொண்டிருந்தாள்.
"எனக்கு அது முள்ளு செடின்னு தெரியாது. இதுவரைக்கும் இந்த மாதிரி செடியை நான் பார்த்ததே இல்லை. இன்னைக்குதான் இந்தச் செடியைப் பாக்குறேன்'' என்றாள் கௌசிகா.
அதற்குள், பக்கத்து பிஞ்சையில் வேலை செய்து கொண்டிருந்த ராக்காம்மா, கௌசிகா விழுவதைப் பார்த்து தூக்கிவிட ஓடி வந்தவள். 
கௌசிகா சொன்னதை கேட்டு, "நல்லாப் பார்த்தபோ, குதிகாலு, பாதம் மொத்தத்தையும் ரத்தமாக்கிக்கிட்டு.. இரு சங்கரி நானு போயி அருவாத்தாங்கி கொளையில இருந்தாப் புடுங்கிட்டு வாரேன். அத கசக்கி இந்த கால்ல விட்டா வார நத்தம் (ரத்தம்) நிக்கும். சீக்கிரம் புண்ணும் ஆறிரும்'' என்றபடி கொள்ளைப் பக்கம் ஓடினாள்.
தான் கல்யாணம் முடித்து வந்த நாள் முதலாய், தன்னால் உதாசீனம் படுத்தப்பட்ட தன் மாமியார், எந்த வெறுப்பும் இல்லாமல், இப்படி தன் காலை எடுத்து அவள் மடியில் வைத்து, தனக்கு பணிவிடை செய்வதையும், சங்கரி, இடுப்பு சூளுக்கி துடித்துக் கொண்டிருந்தபோது, தான் நடந்துக் கொண்டதையும் நினைத்தபோது, கௌசிகாவிற்கு, நெருஞ்சி குத்திய வலியைவிட, மனது அதிகமாக வலித்தது.
"நீ எதுக்குதாயீ பிஞ்சைக்கு வந்தே? என்னைக்கும் போல பேசாம வீட்டிலேயே இருக்க வேண்டியதுதான'' என்ற சங்கரியின் குரல் கேட்டு நினைவு கலைந்தாள் கௌசி.
அதற்குள் அங்கே வேலை செய்து கொண்டிருந்தவர்கள் எல்லாரும் வந்து கூடிவிட்டார்கள். 
எண்பது வயதான ஆவுடைப் பாட்டி, "ஏ... சங்கரி இந்தப்புள்ளதேன் உன் மருமவளா?'' என்று கேட்க, 
"ஆமா பெரியாத்தா'' என்றாள் சங்கரி.
"மண்ணுக்குள்ள இருக்க சிந்தாமணிக் கெழங்கப் புடுங்கி வாய்க்கா தண்ணியில கழுவுனாப்பல தேன் கணக்கா இருக்கா உன் மருமவ. இங்கன இருக்கவக கண்ணே பட்டுரும் வீட்டுக்குப் போயி ஒரு கை மிளாவ வத்தல அள்ளி அவளுக்கு சுத்திப் போடு'' என்றவள். 
கௌசி பக்கம் திரும்பி, "வரப்பு மேல நடந்து வரும்போது, பார்த்து கவனமா வரணும் தாயீ, இல்லன்னா, இப்படிதான் வழுக்கி விட்டுடும். இனிமே பார்த்து வா '' என்றவள்,
அருகில் நின்றிருந்த தங்கராசு பக்கம் திரும்பி, "ஏலே தங்கராசு, செவப்பா உருட்டயா, சீனிக்கட்டியா இருக்க புள்ளயக் கட்டிக்கிட்டு வந்துட்டோம்ங்கிற பவுசிலதேன் இம்புட்டு நாளும் ஆட்டம், பாட்டமுமா இருந்தயா நீ, அம்புட்டு பேரு கூடயும் பேசாம இருந்தயாக்கும்'' என்றாள்.
தங்கராசுவிற்கு கூச்சமாயிருந்தது. எப்போது கெளசியை வீட்டுக்கு கூட்டிட்டு போவோமென்று தவித்தான். 
அதற்குள் மூலிகைச் செடியைப் புடுங்கி வந்த ராக்கம்மா, காயம்பட்ட இடங்களில் எல்லாம் இலையை கசக்கி மருந்து பிழிய எரிச்சல் தாங்காது அலறினாள் கௌசிகா. தங்கராசுவிற்கு நெஞ்சில் உதிரம் கொட்டியது. அவளைச் சுற்றி நின்றவர்களின் கண்களெல்லாம் ஈரத்தில் மினு, மினுப்பதை கவனித்தாள் கௌசி. அந்த வலியிலும், இவ்வளவு அன்பு காட்டும் இந்த மனிதர்களையா இத்தனை நாளா அழுக்கானவர்கள், படிப்பறிவில்லாதவர்கள் என்று ஒதுக்கி வைத்தோம் என்று நினைத்தபோது, அவளுக்கு அவமானமாய் இருந்தது. 
கௌசிகா, தன் அறையில் காய்ந்த வாழைச் சருகாக படுத்திருந்தாள். காய்ச்சல் நெருப்பாக சுட்டுக் கொண்டிருந்தது. தங்கராசு அவள் காலை தூக்கி தன் மடி மீது வைத்துக் கொண்டு மயிலிறகால், மருந்து ஈட்டுக் கொண்டிருந்தான். தன் மனைவியின் வலி மொத்தத்தையும் தான் வாங்கிக் கொண்டது போல் தங்கராசுவின் முகம் வேதனையில் துடித்துக் கொண்டிருந்தது. அவனைப் பார்க்க, பார்க்க கௌசிகாவிற்குப் பாவமாயிருந்தது. அவனை தன் மடியில் போட்டுக் கொண்டு அவனின் இதயத்திற்கு மருந்து போட வேண்டும் போல் இருந்தது அவளுக்கு. காலம் முழுவதும் இப்படியே அவன் அருகிலேயே ஒட்டிக் கொள்வதற்காக, இன்னும் எத்தனை நெருஞ்சி முள் குத்தினாலும், தாங்கிக் கொள்ள தயாராயிருந்தாள்.
"ரொம்பவும் உன் மனசு வலிக்கும்படியா பேசிட்டேன்ல, என்ன மன்னிச்சிடு கௌசி'' என்று கண்களில் நீர் தளும்ப சொன்னவனை ஆசையோடும், இரக்கத்தோடும் பார்த்துக் கொண்டிருந்த கௌசிகாவிடம்,
"உன் பாதம் ரெண்டுமே முள் குத்தியதில் ரத்த தடமா மாறிப் போயிருச்சி கௌசி. இந்தக் காயம் ஆறுறவரைக்கும் நீ இங்கே இருக்க வேண்டாம். நானே உன்னைக் கூட்டிப் போய் உன் அம்மா வீட்டுல விட்டுட்டு வாரேன்'' என்று சொல்லி முடிக்குமுன்பே கௌசி அவன் வாயைப் பொத்தினாள்.
"வேண்டாங்க, இனிமே நான் எங்கேயும் போக மாட்டேன். இந்த ஊரும், இந்த வீடும், தோட்டமும்தான் எனக்குப் பிருந்தாவனம், நீங்கதான் என்ஆசை கண்ணன். இந்தக் கண்ணனையும், இந்த பிருந்தாவனத்தையும் விட்டு பிரிந்து நான் எங்கேயும் போகமாட்டேன்'' என்று சொன்னவள் தங்கராசுவை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள். இப்போது அவன் உடம்பும் சேர்ந்து கொதித்தது.
(நிறைவுபெற்றது)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com