கிராமத்துப் பெண்ணின் தைரியத்திற்கு கிடைத்த பரிசு! 

ஏழ்மையிலும் மக்கள் சேவை செய்து தான் வசிக்கும் கிராமத்தை தூய்மை இந்தியா திட்டத்தின் படி மாற்றியுள்ளார் சக்கிமங்கலத்தைச் சேர்ந்த செல்வி.
கிராமத்துப் பெண்ணின் தைரியத்திற்கு கிடைத்த பரிசு! 
Updated on
2 min read

ஏழ்மையிலும் மக்கள் சேவை செய்து தான் வசிக்கும் கிராமத்தை தூய்மை இந்தியா திட்டத்தின் படி மாற்றியுள்ளார் சக்கிமங்கலத்தைச் சேர்ந்த செல்வி. மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த இவருக்கு மத்திய அரசின் ஸ்வச் பாரத் புரஸ்கார் விருது கிடைத்துள்ளது.
 நன்கு படித்து, அரசு உயர் பதவிகளில் உள்ளவர்கள் செய்ய வேண்டிய சமூகப் பணிகளை பிளஸ் 2 படிப்பை பாதியில் நிறுத்திய செல்வி செய்துள்ளார். அப்படி அவர் செய்த சாதனைகள் என்ன? யார் இந்த செல்வி?
 மதுரை மாவட்டத்தில் உள்ள சிறு கிராமம் சக்கிமங்கலம். படிப்பதற்கு வசதியில்லாமல் பிளஸ் 2 படிப்பை பாதியிலேயே நிறுத்தியவருக்கு திருமணம் செய்து வைத்தார்கள். திருமணத்திற்குப் பின்பு அம்மாவுடன் இணைந்து அந்தப் பகுதியில் சிறியளவில் தையல் கடை ஒன்றை நடத்தி வந்தார் செல்வி.
 2014- ஆம் ஆண்டு பாரதப் பிரதமரின் தூய்மை இந்தியா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. வீடுகளில் கழிப்பறை கட்டுவது, பொதுக் கழிப்பறைகள் அமைப்பது, திடக்கழிவு மேலாண்மை உருவாக்குவது போன்றவை தான் இந்தத் திட்டத்தின் நோக்கம்.
 திறந்தவெளி கழிப்பிடத்தைப் பயன்படுத்தி வந்த செல்வி வெளியே சொல்ல முடியாத பல இன்னல்களைச் சந்தித்தார். ஒரு கட்டத்தில் மன உளைச்சலுக்கும் ஆளானார். தனது கிராமத்தில் இருந்து அரை மணி நேரம் பேருந்தில் பயணம் செய்து கோரிப்பாளையம் சென்று கட்டணம் செலுத்தி கழிவறையை பயன்படுத்தி வந்தார். ஒருகட்டத்தில் அதில் சிரமம் ஏற்படவே செய்வது அறியாது விழித்தார்.
 அப்போது அவருடைய ஊருக்கு வருகை தந்தார். கூடுதல் ஆட்சியரும், மாவட்ட திட்ட அலுவலரான ரோகிணி. அவரை சந்தித்து தனது கிராமத்தில் பெண்கள் படும் சிரமங்களை எடுத்துக்கூறினார். குறிப்பாகத் திறந்தவெளி கழிப்பிடத்தைப் பயன்படுத்தும்போது கண்ணியமும், பாதுகாப்பு உறுதியில்லாத நிலையைக் கண்ணீர் துளிகளுடன் விவரித்தார். அவருடைய கண்ணீருக்கு உடனே பதில் கிடைத்தது.
 மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை நடத்திய ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க அழைக்கப்பட்டார் செல்வி. அங்கு தூய்மை இந்தியா திட்டம் பற்றி அதிகாரிகள் எடுத்து சொன்னார்கள். அப்போது தனது கிராம மக்களின் நிலையையும், பெண்கள் அடையும் இன்னல்களையும் அதிகாரிகளுக்கு எடுத்துச் சொன்னார் செல்வி. கிராமத்தில் இருக்கும் வசதிகள் பற்றி செல்வியிடம் கேள்விகள் எழுப்பினர். அப்போது தான் இயற்கை உபாதைகளுக்காக அரைமணி நேரம் பயணம் செய்யும் விஷயத்தையும் சொன்னார் செல்வி. உடனே அதிகாரிகளுக்கு அந்தக் கிராமத்தின் மீது கவனம் திரும்பியது. அரசின் சார்பில் பொதுக் கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டன.
 கிராமத்தை சுகாதாரமாக மாற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொறுப்பு செல்விக்கு வழங்கப்பட்டது. வீடு வீடாகச் சென்று அரசின் தூய்மை இந்தியா திட்டம் பற்றி எடுத்துச் சொன்னார். இதன் அடுத்தக் கட்டமாகப் பெண்கள் சிலரை தன்னுடன் இணைத்து குழு ஒன்றை உருவாக்கினார். அவர்கள் காலை 4 மணிக்கு திறந்த வெளி கழிப்பிடம் உள்ள பகுதிக்கு சென்று விசில் ஊதி அங்கு வரும் பெண்களைப் பொதுக் கழிப்பிடத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று திருப்பி அனுப்புவார்கள்.
 இதனால் பல பெண்களின் கோபத்திற்கு ஆளானார் செல்வி. "எங்களுடைய அவசரம் தெரியாமல் நீ பேசுகிறாய்' என்ற கோபத்தில் பெண்கள் சிலர் அவர் மீது கல் எறிந்தனர். அவர் எதையும் பொருட்படுத்தாமல் தனது கிராமத்தில் உள்ள பெண்களின் நிலை மாற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் செல்வி. சில மாதங்களிலேயே பாதுகாப்பான கழிப்பறை பயன்படுத்தி அதில் இருக்கும் வசதிகளை உணர்ந்தனர் அந்தப் பகுதி பெண்கள். இது செல்வி அடைந்த முதல் கட்ட வெற்றி.
 அடுத்ததாக "தாழம்பூ' என்ற சுய உதவிக் குழுவை ஆரம்பித்துக் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓய்வூதியம் பெற்று கொடுக்கும் சமூகப் பணியில் இறங்கினார் செல்வி.
 இத்தனை பணிகளும் எப்படி சாத்தியாமானது இனி செல்வியே பேசுகிறார்:
 "எனக்குச் சிறுவயதில் இருந்து சமூகச் சேவை செய்வது என்றால் மிகவும் பிடிக்கும். 2006- ஆம் ஆண்டு தொடங்கியது என்னுடைய சமூக சேவை. கிராமத்தில் உள்ளவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்து கொடுப்பேன். நான் அதிகம் படிக்கவில்லை என்றாலும், வங்கி, அஞ்சலகத்தில் சென்று அதிலுள்ள விபரங்களைத் தெரிந்து கொண்டு வயதானவர்களுக்கு உதவுவேன்.
 என்னுடைய பருவ வயதின் போது திறந்த வெளி கழிப்பிடத்தைப் பயன்படுத்தியதால் பல இன்னல்களைச் சந்தித்தேன். இதற்கு எப்படி விடிவு தேட வேண்டும் என்ற தீப்பொறி என் மனதில் எழுந்தது. அப்போது தான் எங்கள் ஊருக்கு ரோகிணி மேடம் வந்தார்கள். எல்லோரும் அவரை வேடிக்கை தான் பார்த்தார்கள். அவரிடம் சென்று கிராமத்தில் பெண்கள் படும் கஷ்டங்களைத் தைரியமாக எடுத்துச் சொன்னேன். அதன் விளைவு இன்று சக்கிமங்கலத்தில் மட்டும் 1500 கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர பக்கத்து ஊரான நரசிங்கம், வாடிப்பட்டி, திருப்பரங்குன்றம் பகுதிகளில் 3500 கழிப்பறைகள் என மொத்தமாக 5 ஆயிரம் கழிப்பறைகள் அமைய இந்த ஐந்து ஆண்டுகள் உழைத்துள்ளேன். என்னுடைய சேவையை ஊக்குவிக்கும் வகையில் ஸ்வச் பாரத் விருது கிடைத்துள்ளது பெருமையாக இருக்கிறது'' என்கிறார் செல்வி.
 தங்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்து வளர்ச்சியை ஏற்படுத்தி கொடுத்த செல்வியை இன்று கிராமத்தில் உள்ள பெண்கள் கொண்டாடுகிறார்கள். அது மட்டுமல்ல மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில், திடக்கழிவு மேலாண்மை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் செல்வி.
 -வனராஜன்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com