

கொத்தவரங்காய் தமிழ்நாட்டில் சீனி அவரைக்காய் என்றும் அழைக்கப்படுகிறது. இக்காயானது கொத்து கொத்தாகக் காணப்படுவதால் கொத்தவரை என்ற பெயரினைக் கொண்டுள்ளது. இக்காயில் விட்டமின் ஏ,சி,கே மற்றும் பி தொகுப்பு விட்டமின்கள் உள்ளன. இக்காயில் தாது உப்புகளான கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச் சத்து ஆகியவை காணப்படுகின்றன. குறைந்த எரிசக்தி, அதிக நார்ச்சத்து, புரோட்டீன், கார்போ ஹைட்ரேட் முதலியவை இக்காயில் காணப்படுகின்றன.
கொத்தவரங்காயின் மருத்துவப் பண்புகள்
சர்க்கரை நோய்க்கு:
கொத்தவரங்காயில் உள்ள கிளைக்கோ நியூட்ரியன்கள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவினைக் கட்டுப்படுத்துகின்றன. அதனால் இக்காயானது குறைந்த கிளைசெமிக் குறியீட்டினைப் பெற்றுள்ளது எனவே இதனை உண்ணும்போது ரத்தத்தில் சர்க்கரையின் ஏற்ற இறக்கங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. ஆகவே, சர்க்கரை நோயாளிகள் இதனை உணவில் அடிக்கடி எடுத்துக் கொள்ளலாம்.
எலும்புகள் வலுப்பெற
கொத்தவரங்காயானது கால்சியத்தையும், பாஸ்பரஸையும் பெற்றுள்ளது. கால்சியமானது எலும்புகளை பலப்படுத்தி அவைகள் உடையாமல் பாதுகாக்கிறது. மெக்னீசியமானது எலும்புகளுக்கு வலுவூட்டி அதன் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. எனவே இக்காயினை உணவில் சேர்த்து எலும்புகளைப் பலப்படுத்தலாம்.
இதய நலத்திற்கு
கொத்தவரங்காயில் காணப்படும் நார்ச்சத்தானது ரத்தத்தில் கெட்ட கொழுப்பின் அளவினைக் குறைக்கிறது. இதனால் உயர் ரத்த அழுத்தம் குறைக்கப்பட்டு மாரடைப்பு உள்ளிட்ட இதயநோய்கள் தடுக்கப்படுகின்றன. இக்காயில் காணப்படும் ஃபோலேட்டுகள் மற்றும் பொட்டாசியம் போன்றவை இதய சம்பந்தமான நோய்களைத் தடுக்கிறது. எனவே இக்காயினை உணவில் சேர்த்து இதயநலத்தைக் காக்கலாம்.
கர்ப்பிணி பெண்களின் ஆரோக்கியத்திற்கு
இக்காயில் காணப்படும் ஃபோலேட்டுகள் கருவில் இருக்கும் குழந்தை குறைபாடுகள் இன்றி வளர உதவுகின்றன. இக்காயில் காணப்படும் இரும்புச்சத்து மற்றும் கால்சியம் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். இக்காயில் உள்ள விட்டமின் கே கருவில் உள்ள குழந்தையின் எலும்பின் வளர்ச்சிக்கு உதவுகிறது. எனவே இக்காயினை கர்ப்பிணிப் பெண்கள் உண்டு ஆரோக்கியத்தைப் பெறலாம்.
சீரான ரத்த ஓட்டத்திற்கு
இக்காயில் உள்ள இரும்புச்சத்து ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியினை அதிகரிக்கிறது. இதனால் ஆக்ஸிஜன் உள்ளிழுக்கும் திறன் அதிகரித்து ஆக்ஸிஜன் நிறைந்த ரத்தம் உடலின் உறுப்புகளுக்கு நன்கு செலுத்தப்படுகின்றன. ஆக்ஸிஜன் நிறைந்த ரத்தம் உடல் உறுப்புகளுக்கு சீராக செலுத்தப்படுவதால் அவை திறன்பட செயல்படுகின்றன. எனவே இதனை உண்டு சீரான ரத்த ஓட்டத்தைப் பெறலாம்..
நல்ல செரிமானத்திற்கு
கொத்தவரை இரைப்பை மற்றும் குடல்களை சீராக இயங்க தூண்டி நல்ல செரிமானத்திற்கு வழிவகை செய்கிறது. இது மலமிளக்கியாக செயல்படுவதோடு செரிமானப் பாதையில் உள்ள நச்சினை வெளியேற்றவும் உதவுகிறது எனவே இதனை அடிக்கடி உண்டு வர நல்ல செரிமானத்தைப் பெறுவதோடு மலச்சிக்கலுக்கும் தீர்வு காணலாம்.
மனஅமைதிக்கு
கொத்தவரங்காய் மனஅழுத்தத்தைக் குறைக்கும் தன்மையைப் பெற்றிருக்கிறது. இதனை உண்ணும்போது மூளை மற்றும் நரம்புகள் அமைதி
படுத்தப்படுகின்றன. இதனால் மன அமைதி உண்டாகிறது .
கொத்தவரை பற்றிய எச்சரிக்கை
கொத்தவரங்காயை அளவுக்கு அதிகமாக உண்ணும்போது வயிற்றுப் பொருமலை உண்டாக்கி வயிற்று வலியை ஏற்படுத்திவிடும் எனவே இதனை அளவோடு உண்பது நலம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.