
இந்திய விளையாட்டுத்துறையில் பி.வி.சிந்து, மேரிகோம், ஹீமா தாஸ் போன்றவர்கள் இளவயது சாதனையாளர்கள். சாதிக்கத் துடிக்கும் பல பெண்களுக்கு இவர்கள் ரோல்மாடல். நமது தமிழகத்தில் இவர்களைப் போன்று இளம் சாதனையாளர்கள் அடையாளம் காணப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் யார்? செய்த சாதனைகள் என்ன? என்பதை விரிவாகப் பார்ப்போம்:
ஆறு தங்க பதக்கம் குவித்த ஐஸ்வர்யா!
கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் ஐஸ்வர்யாவுக்கு வயது 17. இவர் இதுவரை சைக்கிள் போட்டிகளில் பங்கேற்று 6 தங்கப்பதக்கங்களைக் குவித்துள்ளார்.
"நான் 11 வயதில் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொண்டேன். என்னுடைய அப்பா பால் வியாபாரம் செய்பவர். அதற்கு சைக்கிள் தான் முக்கியம். பால்கேன்களை எடுத்துச் செல்வதற்கு வசதியாகக் கேரியர் வைத்திருப்பார். அவருடைய சைக்கிளை ஓட்டுவதற்கு கடினமாக இருக்கும். ஆனாலும் நான் அந்த சைக்கிளில் தான் பயிற்சி மேற்கொள்டேன். நான் முதல் தங்கபதக்கம் ஜெயித்தது 2014-ஆம் ஆண்டு. ஸ்பான்சர்கள் மூலமாக ரேஸிங் சைக்கிள் கிடைத்தது. ஆண்டு தோறும் செப்டம்பர் 15- ஆம் தேதி திருச்சி அண்ணா ஸ்டேடியத்தில் சைக்கிள் போட்டிகள் நடைபெறும். அதில் பங்கேற்று பரிசுகளை ஜெயித்துவிடுவேன். தற்போது தேசிய அளவிலான போட்டிகளில் பங்கு பெறுவதற்குத் தயாராகி வருகிறேன்.
என்னுடைய மாமா தொழில்முறை சைக்கிள் ஓட்டுநர். அவர் தான் என்னை சைக்கிள் போட்டிகளில் பங்கேற்பதற்குப் பயிற்சி தருவார். காலை 5 மணிக்கு எழுந்து 40 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டுவேன். பெண்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். "கஷ்டப்பட்டுத் துணிச்சலுடன் உழைத்தால் வெற்றி நிச்சயம்'' என்கிறார் ஐஸ்வர்யா.
ஐஸ்வர்யாவை அடுத்து அடையாளம் காணப்பட்டு இருப்பவர் ரக்ஷனா.
12 வயது சுற்றுச்சுழல் பாதுகாவலர்!
12 வயதாகும் ரக்ஷணா சுற்றுச்சுழல் பாதுகாவலர். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 8 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்து விதைப்பந்துகளை இந்தியா முழுவதும் வீசியுள்ளார்.
நான் இந்தியா முழுவதும் பயணம் செய்து விதைப்பந்துகளை வீசுவதற்குக் காரணம் இந்தப் பூமி அழிவிலிருந்து தடுக்கப்பட வேண்டும். குறிப்பாக வரும் காலங்களில் மழை அளவு அதிகரிக்கும். பூமி வெப்பமாவதை தடுக்கும் என்று கூறும் ரக்ஷணா கரூரை சேர்ந்தவர்.
ரக்ஷணாவின் சுற்றுச்சுழல் சேவையைப் பாராட்டி தமிழக முதல்வர் பழனிசாமி அவருக்கு 1 லட்ச ரூபாய் பரிசாக வழங்கியுள்ளார். அந்தப் பணத்தை வாங்கிய ரக்ஷணா, கட்டணம் செலுத்த முடியாமல் படிப்பை நிறுத்திய மூன்று மாணவிகளுக்குக் கட்டணம் செலுத்தி அவர்களைப் படிக்க வைத்துள்ளார்.
சிறுவயதிலேயே இந்த சமூக அக்கறை எப்படி வந்தது என்று அவரிடம் கேட்ட போது சொன்னார்:
"என்னுடைய அம்மாவுக்குச் சமூகச்சேவை என்றால் பிடிக்கும். 5 வயதில் மரக்கன்று நடுவதில் ஆர்வம் ஏற்பட்டது. 80 ஆயிரம் மரக்கன்றுகளை வாங்கிச் சுற்றியுள்ள நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த ஐம்பதாயிரம் பேருக்கு கொடுத்தேன். 2017-ஆம் ஆண்டு ஓசோன் மண்டலத்தைப் பற்றி விரிவுரை நிகழ்த்தினேன்.
25 ரகமான விதைபந்துகளைப் பெங்களூர் மற்றும் கோவையிலிருந்து பெற்று 100 நபர்களை வைத்து 35 நாட்கள் நாடு முழுவதும் தூவி இருக்கிறேன். என்னைப் போன்று படிக்கும் குழந்தைகள் விதைப்பந்து, மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சுழலைப் பாதுகாக்க வேண்டும்'' என்கிறார் ரக்ஷணா.
14 வயது விஞ்ஞானி!
இந்தியா விண்வெளித்துறையில் புதிய உயரத்தை எட்டியுள்ளது. பல குழந்தைகள் விண்வெளித்துறையில் பணியாற்றுவதில் ஆர்வமாக இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் தான் சபீதா. 14 வயதாகும் இவர் கரூர் அரங்கபாளையம் பகுதியிலுள்ள பஞ்சாயத்துப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படிக்கிறார். கரூர் மாவட்டத்தில் முதல் மாணவியாகத் தேர்வு பெற்று இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் பார்வையிட்டுத் திரும்பியுள்ளார். மேலும் இந்த ஆண்டுக்கான "மானக்' விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சபீதாவின் கனவு என்ன தெரியுமா? இந்தியாவிலுள்ள நதிகளை இணைக்க வேண்டும் என்பது தான். அதற்கு எவ்வளவு செலவாகும் என்ற திட்டத்தையும் தயாராக வைத்துள்ளார்.
"மத்திய அரசு நதிகளை இணைக்க 30 லட்சம் கோடி செலவாகும் என்கிறது. ஆனால் நான் தயார் செய்துள்ள திட்டத்தின் படி 3லட்சம் கோடி தான் செலவாகும். அதாவது பூமிக்கு அடியில் பைப் லைன் வசதிகளை மேற்கொண்டு நதிகளை இணைக்க முடியும்'' என்கிறார்.
சபீதாவின் இந்தச் செயல்முறை திட்டத்திற்கு உதவியாக இருந்தவர், அவருடைய அறிவியல் ஆசிரியர், என்னுடைய திட்டத்தை அரசு நிறைவேற்றினால் எதிர்காலத்தில் தண்ணீர் பஞ்சமின்றி மக்கள் சுபிட்சமாக இருப்பார் என்று கூறுபவர், நாட்டின் முன்னேற்றம் நம்மைப் போன்று வளரும் இளப்பெண்களில் தான் உள்ளது'' என்று சொல்லி அனைவருடைய பாராட்டுகளை அள்ளுகிறார்.
-வனராஜன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.