
டாக்டர் பிந்து மேனன், ஆந்திராவின் நெல்லூரைச் சேர்ந்தவர். நரம்பியல் மருத்துவ நிபுணர். நியூராலஜிஸ்ட். இன்றைக்கும் சாதாரண மருந்துகள் கிடைக்காத கிராமங்கள் இந்தியாவில் உள்ளன. அதில் ஆந்திராவும் விதிவிலக்கல்ல. இந்த அடித்தள மக்களுக்காக பிந்து மேனன் "நடமாடும் நரம்பியல் முகாமை' கடந்த ஆறு ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இதுவரை 23 குக்கிராமங்களில் சுமார் 160 மருத்துவ முகாம்களை நடத்தியுள்ளார்.
"மாதத்தில் ஒரு ஞாயிறு அன்று நாங்கள் குக்கிராமம் நோக்கி வேனில் புறப்படுவோம். உடன் உதவியாளர்களும் இருப்பார்கள். கிராமத்து மக்களிடம் பக்க வாதம், வலிப்பு, நரம்பியல் தொடர்பான சுகவீனங்கள் குறித்து புரிய வைப்போம்.
நரம்பு பாதிக்கப்பட்டவர்களை பரிசோதித்து மருந்துகளை இலவசமாகக் கொடுப்போம். கிராமத்தில் திடீரென்று நரம்பியல் ரீதியாக யாராவது பாதிக்கப்பட்டால் யாரை உடனடியாக அணுக வேண்டும் என்பது குறித்தும் விழிப்புணர்வு தந்து வருகிறோம்.
இந்த மருத்துவ உதவிகளை நான் 2013-இல் தொடங்கினேன். எல்லா சிகிச்சைகளும் இலவசம். மருத்துவம் படிக்கும்போது மருத்துவமனைக்கு வரும் நரம்பியல் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பலரைப் பார்த்திருக்கிறேன். சிகிச்சைகளை உடனடியாக தொடங்காமல் தள்ளிப்போடுவதும், நரம்பியல் நோய்கள் குறித்து புரிதல் இல்லாததும்தான் நோய் தீவிரப்படுவதற்கு காரணங்கள்.
படிப்பு முடிந்து டாக்டராகத் தொழில் தொடங்கியதும் எனது மருத்துவ ஆலோசனைகள், சிகிச்சைகள் எல்லாம் நகர்ப்புற வட்டத்திற்குள் அடங்கிப் போய்விட்டன. மனதுக்குள் கிராமப்புற நோயாளிகள் என்ன செய்வார்கள்... அவர்கள் சிகிச்சை கிடைக்காமல் கஷ்டப்படுவார்களே என்று மனசு குமையும். அந்த அழுத்தத்தில் தொடங்கப்பட்டதுதான் இந்த இலவச சிகிச்சைகள்.
நரம்புகள் பாதிக்கப் பட்டால், இதர நோய்களைவிட அதிகம் உடல் ரீதியாகப் பாதிக்கப்படுவார்கள். பக்கவாதம் வந்துவிட்டவர்கள் முழுமையாகக் குணமாகவேண்டுமென்றால் குறைந்தது மூன்று ஆண்டுகளாவது தேவைப்படும். தேவையான மருந்துகளும், மேற்பார்வையின் கீழ் உடல் பயிற்சியும் தேவைப்படும். மூளையில் பாதிப்பு என்றால் பக்க வாதம் நிரந்தரமாகிவிடும். வாழ்கிறவரை பிறரது உதவி தேவைப்படும்.
நரம்பியல் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு இல்லாதலால் கிராமப்புற மக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். கொஞ்சம் தேறினால், கொடுக்கப்படும் மருந்துகளை நடுவில் நிறுத்திவிடுவார்கள். அப்படி நிறுத்தும்போது மீண்டும் பக்கவாதம் வர வாய்ப்பும் கூடும். அப்படி வந்தால் நிரந்தரமாக முடக்கிப் போட்டுவிடும்.
இந்தியாவில் வலிப்பு நோய் வருவது சுகாதாரம் குறைவாக இருக்கும் இடங்களில் உருவாகும் ஒருவகை புழுக்கள்தான் காரணம். அவை உடலுக்குள் புகுவதால் வலிப்பு நோய் வருகிறது. இது அநேகருக்குத் தெரியாது. உணவு உண்பதற்கு முன் கைகளைக் கழுவுவதும், காய்கறிகளை சமைக்கும் முன் கழுவுவதும், வலிப்பு நோய் வருவதைத் தடுக்கும். சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்'' என்கிறார் பிறப்பால் கேரளத்தவர் என்றாலும் ஆந்திராவின் நெல்லூர் வட்டார கிராம மக்களுக்கு மருத்துவ சேவை செய்து வரும் டாக்டர் பிந்து மேனன்.
- கண்ணம்மா பாரதி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.