ஏழுமுறை நேஷனல் டைட்டில் பெற்றவர்!
By - பூர்ணிமா | Published On : 17th April 2019 01:12 PM | Last Updated : 17th April 2019 01:12 PM | அ+அ அ- |

கர்நாடக அரசின் தோட்டக்கலைத் துறையில் சீனியர் டைப்பிஸ்ட்டாக பணியாற்றுபவர் உமாதேவி நாகராஜ். 54 வயதாகும் இவர், அண்மையில் ஏழாவது முறையாக பில்லியர்ட்ஸ் விளையாட்டில் "நேஷனல் பில்லியர்ட்ஸ் டைட்டில்' பெற்றுள்ளார்.
தன்னுடைய 29-ஆவது வயதில் கர்நாடக அரசு தலைமை செயலக கிளப்பில் வழக்கமாக டேபிள் டென்னிஸ் ஆடும்போது, தன்னுடைய முறை வருவதற்காக காத்திருந்தார் உமாதேவி. அதுவரை பக்கத்து அறையில் பில்லியர்ட்ஸ் ஆடுபவர்களை பார்க்கச் சென்றபோது, அந்த விளையாட்டில் பயிற்சி பெற ஆர்வம் பிறந்ததாம். அப்போது முதலே பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்நூக்கர் பயிற்சிப் பெறத் தொடங்கிய உமாதேவி. 20ஆண்டுகளாக தொடர்ந்து ஆடி வந்தார். 2012-ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் பில்லியர்ட்ஸ் டைட்டில் உள்பட இதுவரை ஏழுமுறை தேசிய பில்லியர்ட்ஸ் டைட்டில் பெற்றுள்ளார்.
""29 -ஆவது வயதில் நான் தோட்டக்கலைத் துறையில் பணியில் சேர்ந்தபோது, பிற விஷயங்களில் கவனம் செலுத்த நேரம் கிடைக்கவில்லை. வீடு செல்லவும் நேரமாகும். சோர்வு வேறு. மாலையில் கிளப்பில் சிறிது நேரம் டேபிள் டென்னிஸ் விளையாடுவேன். அப்போதுதான் பில்லியர்ட்ஸில் ஆர்வம் ஏற்பட்டது. தற்போது அலுவலக நேரத்திலேயே சிறிது நேரம் விளையாட அனுமதி கிடைத்திருப்பது பெரும் உதவியாக இருக்கிறது.
சில சமயங்களில் இந்த விளையாட்டைப் பற்றி நினைக்கும்போது, கடந்த ஆண்டுகளில் எனக்குக் கிடைத்த விருதுகள் பெருமை பட வைக்கின்றன. பல போட்டிகளில் பங்கேற்க தொடங்கிய பின், இத்தனை விருதுகளைப் பெறுவேன் என்று நான் நினைக்கவே இல்லை. 20 ஆண்டுகளில் பல தடைகளை கடந்து நான் பெற்ற இந்த விருதுகளை இந்த நாட்டின் விளையாட்டு வீரர்களுக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன்'' என்கிறார் உமாதேவி.
கடந்த ஆண்டில் இந்த விளையாட்டிலிருந்து உமாதேவி ஓய்வு பெற விரும்பியபோது, இவரது கணவர் தொடர்ந்து விளையாடும்படி வற்புறுத்தினாராம். அதே சமயம் இவருக்கு "நாரி சக்தி புரஸ்கார் விருது' கிடைக்கவே, தொடர்ந்து சில ஆண்டுகள் விளையாடலாமென தீர்மானித்ததாகவும், என்னைப் போன்று விளையாட்டில் ஆர்வம் கொண்ட பெண்களுக்கு முன்னுதாரணமாக விளங்க விரும்புவதாகவும்'' கூறினார் உமாதேவி.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...