காஷ்மீர் டூ கன்னியாகுமரி...

ஜம்மு காஷ்மீர் லடாக் பகுதிகளில் இன்றைய சூழ்நிலையில் சுற்றுலா செல்பவர்கள் குறைவாக இருந்தாலும் தனியே பைக்கில் போய் வருபவர்கள் மிகக் குறைவு. தவிர குளிர் காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில் இரண்டு
காஷ்மீர் டூ கன்னியாகுமரி...
Updated on
1 min read

ஜம்மு காஷ்மீர் லடாக் பகுதிகளில் இன்றைய சூழ்நிலையில் சுற்றுலா செல்பவர்கள் குறைவாக இருந்தாலும் தனியே பைக்கில் போய் வருபவர்கள் மிகக் குறைவு. தவிர குளிர் காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில் இரண்டு இளம் பெண்கள் பைக்கில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரை சுமார் 6000 கிமீ பயணத்தை 27 நாட்களில் முடித்திருக்கிறார்கள். இந்தச் சாதனையை நிகழ்த்தியிருப்பவர்கள் ஸ்ருதி , ரம்யா ரகுநாத்.
 "தொடக்கத்தில் ஒரு குழுவாகப் பெண்கள் போகலாம் என்றுதான் முடிவு செய்திருந்தோம். பலரும் பதிவு செய்திருந்தார்கள். பயண நாள் நெருங்க நெருங்க ஒவ்வொருவராகக் கழன்று கொண்டார்கள். கடைசியில் நாங்கள் இருவரும்தான் மிஞ்சினோம். ஆகஸ்ட் 30-இல் பயணத்தைக் தொடங்கலாம் என்று முடிவு செய்திருந்தோம். அதற்குள் காஷ்மீரில் நிலைமை மாறியது. மணாலியில் வெள்ளப் பெருக்கு இவற்றால் பயணத்தைத் தள்ளிப் போட்டோம். அக்டோபர் 27-இல் பயணத்தைத் தொடங்கினோம்.
 கொச்சியிலிருந்து டில்லிக்கு விமானப் பயணம். பைக்கை கொச்சியிலிருந்து டில்லிக்கு வாகனம் மூலம் அனுப்பிவிட்டோம். டில்லியிலிருந்து ஜம்மு, காஷ்மீர் பைக்கில் பயணித்தோம். அக்டோபர் 28-இல் அமிர்தசரஸ் வழியாக ஜம்மு நோக்கி பைக்கில் கிளம்பிவிட்டோம். ஜம்மு சாலைகளை மேடு பள்ளமும் அதிகம் இருந்ததால் இருவரும் ஸ்ரீநகரில் ஒரு நாள் தங்கி, கார்கில் நோக்கி ஒரு பைக்கில் பயணம் செய்தோம். மாறி மாறி பைக்கை ஒட்டினோம்.
 லடாக்கின் "லே', பிறகு "கார்டுங் லா' பகுதியைத் தொட்டோம். ஜம்மு முதல் "லே' வரை அலைபேசியில் தொடர்புகள் கிடைப்பது அரிது. அதனால் உள்ளூர் பயண ஆர்வலர்களை அணுகி வழிகேட்டு பயணத்தைக் தொடர்ந்தோம். இடை இடையே ராணுவத்தில் பணி புரியும் கேரள வீரர்களையும் சந்தித்தோம். "கார்டுங் லா' பகுதியிலிருந்து இறங்கி இந்திய மாநிலங்களைக் கடந்து கன்னியாகுமரிக்கு நவம்பர் 3-இல் வந்து சேர்ந்தோம்.
 "இந்தப் பயணத்தில் மிகப் பெரிய தடை கடுங்குளிர்தான். ஸ்வெட்டர், டீ ஷார்ட், ஜாக்கெட் என்று ஏழு உடைகளை அணிந்திருந்தோம் என்றாலும் மைனஸ் எட்டு டிகிரி குளிரைத் தங்க முடியவில்லை. செய்தித் தாள்களையும் இடுப்பிற்கு மேல் சுற்றிக் கொண்டு ஜாக்கெட் அணிய வேண்டிவந்தது. சுவாசிக்க ரொம்பவும் சிரமப்பட்டோம். பெருங்குளிர், மூச்சு விட சிரமம் போன்றவற்றை மறக்க, பழைய பாடல்களை பாடிக் கொண்டு பைக்கை ஒட்டினோம். கார்கிலிலிருந்து லே போகும் சாலை மனதை கொள்ளை கொள்ளும். எங்கும் பனி படர்ந்த மலைகள்... வாழ்க்கையில் ஒருமுறையாவது இந்தத் தடத்தில் பயணிக்க வேண்டும். அத்தனை ரம்மியம்... கர்நாடகாவில் சின்ன விபத்து ஏற்பட்டது. சிறு சிறு காயங்கள். அவ்வளவுதான்... அடுத்தது பூட்டான் போக திட்டமிட்டுள்ளோம்...பைக்கில்தான் போவோம்'' என்கிறார்கள் ஸ்ருதி, ரம்யா.
 - கண்ணம்மா பாரதி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com