நாற்பது ஆண்டுகளில் பெண் உருவாக்கிய காடு!
By DIN | Published On : 03rd July 2019 11:21 AM | Last Updated : 03rd July 2019 11:21 AM | அ+அ அ- |

நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் நாட்டில் "மழை இல்லை' என்ற பிரச்னை கிடையாது...தண்ணீர் பற்றாக்குறை இல்லை... பகல் இரவு வேளைகளில் வெப்பம் இல்லை... அனல் பறக்கும் காற்றில்லை...அதனால் புவி வெப்பமாதல் குறித்துப் பேசப்படவில்லை. மரங்கள் வளர்ப்பது... காடுகளை உருவாக்குவது குறித்து யாரும் அழுத்தம் கொடுத்து பேசவில்லை. அந்த சூழ்நிலையிலும் தேவகி அம்மா எண்பதுகளில் தனது வீடு அமைந்திருந்த விரிந்த இடத்தில் காடு ஒன்றினை உருவாக்கி வளர்த்து வந்திருக்கிறார். இப்போது தேவகி அம்மாவுக்கு எண்பத்தைந்து வயதாகிறது. ஆலப்புழைக்கு அருகே முத்துகுளம் என்ற ஊரில் தேவகி வாழ்ந்து வருகிறார்.
அன்று வீட்டிற்கு வரும் உறவினர்கள் விருந்தாளிகள் அனைவரையும் மரக் கன்றுகளை நடச் சொல்லியிருக்கிறார். இந்த அணுகுமுறையால் கவரப்பட்ட உறவினர்கள்.. "நான் நட்ட கன்று வளருகிறதா..' என்று அடிக்கடி தேவகியிடம் கேட்க ஆரம்பித்தார்கள். நட்ட கன்றைப் பார்க்க வரவும் ஆரம்பித்தார்கள். இதனால் "பந்தம்.. உறவு' பலப்பட்டதுடன் மரங்களின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டேயிருந்தது. தேவகி அம்மா தொடர்கிறார்.
"பரம்பரை பரம்பரையாக எங்கள் குடும்பம் உழவர் குடும்பம். படித்தவர்கள் அரசாங்க வேலைக்குப் போவார்கள். வேலைக்குப் போகாத ஆண்கள், வீட்டிலிருக்கும் பெண்கள் அனைவரும் நெல் சாகுபடியில் ஈடுபடுவோம். திருமணம் ஆனபின்பு புகுந்த வீட்டிலும் நெல் சாகுபடி வேலைகளை செய்து வந்தேன். நடுவில் காலில் அடிபட்டதினால், மருத்துவர் அறிவுரையின்படி சில ஆண்டுகள் வயலில் இறங்கவில்லை. மாமியாருக்கும் வயதாகிவிட்டதால் நெல் பயிரிடுவதை முழுமையாக நிறுத்திவிட்டோம். நான் ஓய்வு எடுக்கும் போது விளையாட்டாக மரக்கன்று ஒன்றை வீட்டின் பின்புறத்தில் நட்டேன். பிறகு ஒன்றுக்குப் பிறகு ஒன்றென்று மரக் கன்றுகளை நட ஆரம்பித்தேன். இப்படி எங்களுக்குச் சொந்தமாக இருந்த ஐந்து ஏக்கர் நிலத்தில் நட்டு முடித்தேன். கொஞ்ச நாளில் அந்த நிலம் முழுவதும் மரக் கன்றுகள் தழைத்து வளர்ந்து பச்சைப் போர்வை போர்த்தியது மாதிரியானது. கணவர் கோபால கிருஷ்ண பிள்ளை ஆசிரியராகப் பணி புரிந்தார். மரங்களுடன் எனக்கிருக்கும் ஆர்வத்தைப் புரிந்து கொண்டு விதம் விதமான மரக்கன்றுகளை அவர் வாங்கிக் வீட்டிற்கு கொண்டு வருவார். வாரிசுகளும், உற்றார் உறவினர்களும் எனக்கு உற்சாகம் தந்தனர். அவர்களும் தங்கள் பங்கிற்கு மரக்கன்றுகள் வாங்கி எனக்கு அன்பளிப்பு செய்தனர். நான் அவர்களை நடச் சொன்னேன். இப்படித்தான் தோப்பு காடானது. பலவித பறவைகளின் கூடாரமாகியது. அயல்நாட்டு பறவைகளும் சீசன் சமயத்தில் வந்து போகும். தேவகி அம்மா காட்டில் தேக்கு, மகாகனி, மா, புளி, மூங்கில் மரங்கள் மட்டுமல்ல அலங்காரச் செடிகளும் உண்டு. மரங்களுக்கு, மருந்துச் செடிகளுக்கு இயற்கை உரம் மட்டுமே போடுகிறேன். ஓரத்தில் காய்கறி தோட்டமும் உண்டு.
இப்போதுதான் சுற்றுப்புறச்சூழல் குறித்த விழிப்புணர்வு அதிகமாக இருக்கிறது. இன்று புவி வெப்பமாதல் எத்தகைய பாதிப்புகளை தொடர்ந்து தந்து வருகிறது என்பதை அனுபவத்தால் உணர்ந்து வருகிறோம். காலநிலை, பருவ மழை எல்லாம் மாறிவிட்டது. இப்படியெல்லாம் மாற்றம் வரும் என்று நினைக்கும் முன்பே ஒரு காட்டை என்னால் உருவாக்க முடிந்திருக்கிறது என்பது கடவுள் கொடுத்த வரம். இதுபோல் அனைவரும் தங்களால் முடிகிற அளவுக்கு மரங்களை நட்டு வளர்க்க வேண்டும். மரங்கள் புவி வெப்பமாவதைத் தடுக்கும். மழையை வரவழைக்கும். சுவாசிக்கும் ஆக்சிஜனின் அளவைக் கூட்டும். மழைக் காலங்களில் மழை நீரை சேமிக்கும் முறையையும் கடைப்பிடித்து வருகிறேன்.
வயோதிகம் காரணமாக காட்டைப் பராமரிக்க வேலைக்கு ஆட்களை வைத்திருக்கிறேன். இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறை காட்டை சுற்றி மேற்பார்வை செய்வதை விட்டுவிடவில்லை. எனக்கு பெண் சக்தி விருதினை அளித்து ஜனாதிபதி கெளரவித்திருக்கிறார். இதற்கு முன் இந்திரா பிரியதர்ஷினி விருக்ஷமித்ரா விருதினை மத்திய அரசு வழங்கியிருந்தது. எனது பேத்தி பேரன்கள் வீட்டிற்கு வரும் போது அவர்கள் பிஞ்சு கைகளை பிடித்துக் கொண்டு காட்டை சுற்றி வருவதையும் ஒரு விருதாகவே கருதுகிறேன்'' என்கிறார் தேவகி அம்மா.
- சுதந்திரன்
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G