சமையல்! சமையல்!

முருங்கைப் பூ கட்லட், வாழைப் பூ உசிளி, வேப்பம் பூ துவையல், ஆவாரம் பூ அப்பளக் கூட்டு 

முருங்கைப் பூ கட்லட்

தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு - 3, முருங்கைப் பூ - 1 கிண்ணம்,பெரிய வெங்காயம் - 1, நறுக்கிய மல்லித் தழை - சிறிது,மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி, தூள் உப்பு - தேவைக்கேற்ப, மைதா மாவு - 1தேக்கரண்டி, பொட்டுக்கடலை பொடித்தது - அரை கிண்ணம், எண்ணெய் - தேவைக்கேற்ப.
செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து மசித்துக்கொள்ளவும். அதனுடன் சுத்தம் செய்து வைத்துள்ள முருங்கைப் பூ, மல்லித்தழை, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து பிசையவும். வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய்விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கி, அதில் மசாலாவையும் போட்டு சூடு வரக் கிளறி ஆற வைக்கவும். மைதாவை ஒரு கரண்டி நீர் விட்டு கரைத்து கொள்ளவும். மசாலாவை வேண்டிய வடிவில் செய்து, கரைத்த மாவில் நனைத்து பொட்டுக்கடலை மாவில் புரட்டி வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் அதில் போட்டு பொரித்தெடுக்கவும்.

வாழைப் பூ உசிளி

தேவையான பொருட்கள் :
வாழைப் பூ - 1, துவரம் பருப்பு - 100 கிராம் ,கடலை பருப்பு - 1 கைப்பிடி, வர மிளகாய் (நீள மிளகாய்) - 8, சீரகம் - தேக்கரண்டி, பெருங்காயம் - 1 சிட்டிகை, உப்பு - தேவைக்கேற்ப, நல்லெண்ணெய் - தேவைக்கேற்ப, கடுகு, உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி.
செய்முறை: வாழைப் பூவை, ஆய்ந்து சுத்தம் செய்து பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாழைப் பூவை, சிறிது உப்பு சேர்த்து வேக வைக்கவும். பின்னர் தண்ணீரை வடிக்கவும். துவரம் பருப்பு, கடலைப் பருப்பு இரண்டையும் ஒன்றாகப் போட்டு, ஊற வைக்கவும். ஊறிய பருப்பில் தண்ணீர் வடித்து, உப்பு, வர மிளகாய், பெருங்காயம் சேர்த்து கர கரவென்று அரைக்கவும். அரைத்த பருப்பை பத்து நிமிடங்களுக்கு, குக்கரில் விசில் போடாமல் வேக வைக்கவும். வேக வைத்த பருப்பை உதிர்த்து விடவும். வாணலியில் 4 தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு, சூடேறியதும், கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்து, உளுத்தம் பருப்பு சிவந்ததும், சீரகத்தையும் போட்டு பொரிக்கவும். உதிர்த்து வைத்த பருப்பை வாணலியில் போட்டு, நன்கு கிளறவும். பருப்பு ஓரளவிற்கு உதிரியானதும், வாழைப் பூவை துளி கூட தண்ணீர் இல்லாமல் ஓட்ட பிழிந்து, பருப்போடு சேர்த்து கிளறவும். பொல பொல வென்று வரும் வரை கிளற வேண்டும். மூன்று நிமிடங்கள் கிளறினாலே பொல பொல வென வந்து விடும். அடுப்பை அணைத்து இறக்கவும். வாழைப்பூ பருப்பு உசிலி ரெடி.

வேப்பம் பூ துவையல்

தேவையானவை:
வேப்பம்பூ - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 2, உளுத்தம் பருப்பு - 4 தேக்கரண்டி,
புளி - நெல்லிக்காய் அளவு, எண்ணெய் - 2 தேக்கரண்டி,உப்பு - தேவையான அளவு, தேங்காய் - 2 துண்டுகள்.
செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு வேப்பம் பூவை வறுத்து கொள்ள வேண்டும். காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பையும் வறுத்துக் கொள்ளவும். வேப்பம் பூ, வறுத்த மிளகாய், உளுத்தம்பருப்பு, புளி, உப்பு ஆகியவற்றுடன் தேங்காய் துண்டுகளைச் சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு கொர, கொரப்பாக அரைத்துக் கொள்ளவும். வேப்பம் பூ துவையல் தயார்.

ஆவாரம் பூ அப்பளக் கூட்டு

தேவையானவை:
ஆவாரம் பூ - 1 கிண்ணம், துவரம் பருப்பு அல்லது பயத்தம் பருப்பு - கால் கிலோ, வெங்காயம் - 2, தக்காளி - 1, மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி, மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி, பச்சை மிளகாய் - 1, உப்பு - தேவைக்கேற்ப, அப்பளம் - 10.
தாளிக்க:
கடுகு - 1 தேக்கரண்டி, சீரகம் - 1 தேக்கரண்டி, மிளகாய் வற்றல் - 2, பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை, கறிவேப்பிலை, கொத்து மல்லித் தழை - சிறிது.
செய்முறை: துவரம் பருப்பை களைந்து குக்கரில் இட்டு தேவையான தண்ணீர்விட்டு, அத்துடன் மஞ்சள் தூள், பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம், தக்காளி, சிறிது சீரகம் சேர்த்து வேக விடவும். பருப்பு வெந்ததும், அத்துடன் ஆய்ந்து சுத்தம் செய்து வைத்துள்ள ஆவாரம் பூவை சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிடவும். பின்னர், தாளிக்க கொடுத்துள்ளவற்றை ஒவ்வொன்றாக தாளித்து வேக வைத்துள்ள பருப்புடன் சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து லேசாக கொதிக்க விடவும். இதற்கிடையில் அப்பளத்தை துண்டுகளாக உடைத்து தனியாக வாணலியில் பொரித்து எடுத்து கூட்டுடன் சேர்க்கவும். சுவையான ஆவாரம் பூ அப்பளக் கூட்டு தயார்.
- எஸ். சரோஜா சண்முகம்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com