கற்பூரவள்ளியின் மருத்துவக் குணங்கள்!

கற்பூரவள்ளி ஒரு கிருமி நாசினியாகும். இதனால்தான் நம் முன்னோர்கள் வீட்டின் முன்புறம் துளசியுடன் கற்பூர வள்ளியும் நட்டு வளர்த்தனர். இரண்டும் விஷக் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது.
கற்பூரவள்ளியின் மருத்துவக் குணங்கள்!
Updated on
2 min read

கற்பூரவள்ளி ஒரு கிருமி நாசினியாகும். இதனால்தான் நம் முன்னோர்கள் வீட்டின் முன்புறம் துளசியுடன் கற்பூர வள்ளியும் நட்டு வளர்த்தனர். இரண்டும் விஷக் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. கற்பூரவள்ளியை தென்னை மரத்தைச் சுற்றி நட்டு வைத்தால் எந்த வகையான பூச்சிகளும் தென்னையைத் தாக்காது.
 கற்ப மூலிகையில் கற்பூரவள்ளிக்கு சிறந்த இட முண்டு. இதனால்தான் இதன் பெயரும் கூட கற்பூர வள்ளி என்று அழைக்கப்படுகிறது.
 குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற மருந்தாக கற்பூரவள்ளி அமைகிறது. இந்தியாவில் தமிழகம், கேரளா, கர்நாடகா பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. இதன் இலை வட்ட வடிவமாக பஞ்சு போன்று காணப்படும். இதில் காரத்தன்மை கொண்ட நீர்ச் சத்து நிறைந்துள்ளது.
 கற்பூரவள்ளி இலைகளை காயவைத்துப் பொடி செய்து அதனுடன் காய்ந்த தூதுவளை, துளசி பொடிகளை சம அளவு எடுத்து புட்டியில் அடைத்து வைத்துக் கொண்டு தினமும் காலை வேளையில் குழந்தைகளுக்கு 1 சிறு தேக்கரண்டி அளவு தேனில் குழைத்து ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் கொடுத்து வந்தால், குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல், ஈளை போன்றவை நீங்கும். சளியின் அபகாரம் குறையும்.
 கற்பூர வள்ளி இலையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி அதனுடன் காய்ந்த வேப்பிலை, வில்வம், அத்தி இலை, துளசி இலை, தும்பை இலை, தூதுவளை, ஆடாதொடை, நெல்லி, கீழாநெல்லி இவற்றை சம அளவு எடுத்து அதனுடன் சுக்கு, மிளகு, மஞ்சள்தூள், தனியாப் பொடி கலந்து ஒரு பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு தினமும் மூன்று வேளையும் வேளைக்கு இரண்டு தேக்கரண்டி அளவு எடுத்து நீரில் கொதிக்க வைத்து அருந்தி வரவேண்டும். இவ்வாறு அருந்தி வந்தால், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
 மூச்சுக் கிளைக்குழல்களில் தொற்றுநோய்களின் தாக்குதல் ஏதுமின்றி பாதுகாக்கும். சுருங்கியுள்ள மூச்சுக் குழல்களை விரிவடையச் செய்து சீராக செயல்பட வைக்கும். ஆஸ்துமாவுக்கு இது நல்ல மருந்து.
 குழந்தைகளுக்கு உண்டான மார்புச்சளி நீங்க சிறு குழந்தைகளுக்கு மார்பில் சளி கட்டிக் கொண்டு இறுகிப் போயிருக்கும். இதனால், குழந்தைகளுக்கு அடிக்கடி மூச்சு விட முடியாமல் திணறுவார்கள். சில சமயங்களில் இது ஆஸ்துமா, காசநோயாக கூட மாற நேரிடும். இவர்களுக்கு கற்பூர வள்ளி இலையையும், துளசி இலையையும் சம அளவு எடுத்து சுத்தம் செய்து, லேசாக வதக்கி சாறு எடுத்து, 5 மி.கி. அளவு தினமும் காலை வேளையில் கொடுத்து வந்தால், மார்புச்சளி அறவே நீங்கும்.
 கற்பூரவள்ளி இலை, தூதுவளை, வல்லாரை, இவற்றை சம அளவு எடுத்து பொடியாக்கி அதில் 1 தேக்கரண்டி அளவு எடுத்து 100 மி.லி. தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து 50 மி.லியாக சுண்டக் காய்ச்சி, அதனுடன் சிறிது பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால், நுரையீரல் பாதிப்பு நீங்கும். மூச்சுக்குழல் அடைப்பு சீராகும்.
 கற்பூரவள்ளி சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து, காலை வேளையில் அருந்தி வந்தால் மூக்கில் நீர்வடிதல், சளி, இருமல், தொண்டைக் கட்டு, தொண்டைக் கம்மல் குணமாகும்.
 கற்பூரவள்ளி உடலை நோயின்றி காப்பது போல், வீட்டையும் விஷப் பூச்சிகளிலிருந்து காப்பாற்றும். இதனை தொட்டிகளில் வளர்த்து அதன் முழுமையான பயன்களைப் பெற்று நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வோம்.
 - கவிதா பாலாஜிகணேஷ்
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com