சமையல்! சமையல்!

உருளைக்கிழங்கு சூப், முருங்கை காம்பு சூப், வெண்டைக்காய் சூப், பீட்ரூட் சூப்

சுவையான சூப் வகைகள்..
உருளைக்கிழங்கு சூப்

தேவையானவை :
உருளைக் கிழங்கு - கால் கிலோ 
பெரிய வெங்காயம் - 1 
பால் - 100 மில்லி
மைதா மாவு - ஒரு தேக்கரண்டி
மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி 
பாலேடு - 2 தேக்கரண்டி 
கொத்துமல்லி - சிறிது
தேவையான அளவு - உப்பு 
செய்முறை: உருளைக் கிழங்கை தோல் நீக்கி, வெங்காயம், உப்பு சேர்த்து வேகவைத்து பின்னர் மிக்சியில் அரைக்கவும். இதனுடன் மைதா மாவு, பால், மிளகுத் தூள் சேர்க்கவும். வாணலியில் இந்த கலவையை ஊற்றி நன்றாக சூடாக்கவும். இது கெட்டியாக வரும் வரை கிளறிவிடவும். பின் இதனுடன் பாலேட்டை சேர்த்து உருகும் வரை கிளறி தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து பின் கொத்துமல்லி இலை தூவி பரிமாறலாம். 
(குழந்தைகள் விரும்பி 
அருந்தும் சுவையான சூப்)

முருங்கை காம்பு சூப்

தேவையானவை :
முருங்கை காம்பு - 200 கிராம்
தக்காளி, பெரிய வெங்காயம் தலா - 50 கிராம்
மிளகு - 6, மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
லவங்க பட்டை - சிறிது, பச்சை மிளகாய் -1
பாசி அல்லது துவரம் பருப்பு - 50 கிராம்
உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை: முருங்கை காம்பை சிறிது சிறிதாக நறுக்கி அலசி வைத்து கொள்ளவும். தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை நீள வாக்கில் பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பருப்பை வேக வைத்து மசிக்கவும். பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி லவங்க பட்டை, இலை, மிளகு, வெங்காயம், தக்காளி, முருங்கை காம்பு, பச்சை மிளகாய் சேர்த்து லேசாக வதக்கி அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக விடவும். நன்றாக வெந்தவுடன் மஞ்சள் தூள், உப்பு, மசித்த பருப்பு ஆகியவற்றை அதில் சேர்த்து கலவையை நன்றாக கொதிக்க விட்டு இறக்கி மிதமான சூட்டில் சூப்பை அருந்தலாம்.
குறிப்பு: இதில் முருங்கை காம்புக்கு பதிலாக முருங்கைக் கீரையையும் பயன்படுத்தி சூப் செய்யலாம். டேஸ்டுக்கு டேஸ்ட், நரம்புப் பலத்திற்கும் ஏற்றது. 

வெண்டைக்காய் சூப்

தேவையானவை:
வெண்டைக்காய் - கால் கிலோ
தக்காளி -1, பெரிய வெங்காயம் -2
மிளகு - 6, நீண்ட பச்சை மிளகாய் -1
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
கொத்துமல்லி - ஒரு கொத்து 
லவங்கபட்டை - சிறிது
துவரம் பருப்பு - 50 கிராம்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை: வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை, மிளகு, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து லேசாக வதக்கவும். பின்னர் நறுக்கிய வெண்டைக்காயை அதனுடன் சேர்த்து நன்றாக வதக்கி அதில் 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி, வேக விடவும். வெந்தவுடன் மஞ்சள் தூள், தக்காளி, உப்பு சேர்த்து கலவையை நன்றாக கொதிக்க விடவும். பின்னர் வேக வைத்து மசித்த துவரம் பருப்பை அதில் சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு இறக்கி கொத்துமல்லி இலையை தூவி பரிமாறவும். வெண்டைக்காயை வதக்கும்போது ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்தால் சீக்கிரம் வதங்குவதுடன் சுவை தூக்கலாக இருக்கும்.
(இது மூளையை பலப்படுத்தும். 
ஞாபக சக்தியை அதிகரிக்கும்)

பீட்ரூட் சூப்

தேவையானவை :
பீட்ரூட் }கால் கிலோ
பல்லாரி வெங்காயம்,
உருளை கிழங்கு - தலா 100 கிராம்
எலுமிச்சை பழம் - பாதி
புதினா - ஒரு கொத்து
மிளகுத்தூள் -அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தாளிப்பதற்கு தேவையான அளவு
கிரீம் - அரை கிண்ணம்
செய்முறை: பீட்ரூட், உருளைக்கிழங்கை தோல் சீவி வேக வைக்கவும். வெங்காயத்தை சிறியதாக நறுக்கி எண்ணெய்யில் தாளித்து வேக வைத்து கொள்ளவும். பின்னர் பீட்ரூட், உருளைக்கிழங்கு, வெங்காயம் ஆகியவற்றை மிக்சியில் அரைத்து பின்பு அதில் எலுமிச்சை பழத்தை பிழிந்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். அதில் மிளகுத் தூள், உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதி வந்ததும், அடுப்பில் இருந்து இறக்கி கிரீம், புதினா சேர்த்து பருகலாம்.
(உடலுக்கு வலுவை தருவதுடன்
புதிய ரத்தத்தை உற்பத்தி செய்யும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com