அசத்தும் மாமியார்..மெச்சும் மருமகள்..

சென்னை திருமங்கலத்தைச் சேர்ந்த மாமியார் வெண்ணிலா, மருமகள் சந்தியா இருவரும் வீட்டில் இணைந்து இயங்குவதுடன் இருவரும் சேர்ந்து
அசத்தும் மாமியார்..மெச்சும் மருமகள்..

சென்னை திருமங்கலத்தைச் சேர்ந்த மாமியார் வெண்ணிலா, மருமகள் சந்தியா இருவரும் வீட்டில் இணைந்து இயங்குவதுடன் இருவரும் சேர்ந்து "தமிழ் பாட்டி வைத்தியம்' என்னும் "யூ- டியூப்' சேனலையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள். வருவாய்க்கு வருவாய்... உடல்நல விரும்பிகளுக்கு எளிய பாரம்பரிய மருத்துவ முறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் குறிப்புகளையும் வழங்கி வருகிறார் மாமியார் வெண்ணிலா. உடல் ஆரோக்கியத்தை காக்க வழிமுறைகளை சொல்லும் இந்த சேனல் உள்நாட்டு, வெளிநாட்டு தமிழ் மக்களிடையே பிரபலமாகி வருகிறது. "தமிழ் பாட்டி வைத்தியம்' சேனல் துவங்கக் காரணம் என்ன? அனைத்து தொழில் நுட்பங்களைக் கையாளும் சந்தியா சேதுராமன் செய்கிறார்:

 "இப்போதெல்லாம் மருந்துகளே உணவாகிவிட்டன. அந்த நிலைமையைத் தவிர்க்க உணவை மருந்தாக்கிப் கொள்ளலாம் என்ற சிந்தனையில் பிறந்ததுதான் இந்த சேனல். பாரம்பரிய உணவை நாங்கள் வீட்டில் பின்பற்றுவதால்.. அதை மக்களிடமும் கொண்டு சேர்க்கலாம் என்று நானும் மாமியாரும் தீர்மானித்தோம். உடலுக்கு ஏதாவது அசெளகரியம் ஏற்பட்டால் "டாக்டரைப் பார்க்கலாம்.. ஊசி போட்டு மாத்திரை வாங்கிக் கொள்ளலாம்..' என்று கிளம்புகிற பழக்கம் எங்களுக்கு கிடையாது.

 முதலில் பாரம்பரிய நாட்டு மருந்தை உட்கொள்வோம். அதில் குணமாகவில்லையென்றால் டாக்டர் உதவியை நாடுவோம். எனது மாமியார் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருப்பார். அவருக்கு 68 வயதாகிறது. அதிகாலையில் எழுந்துவிடுவார். சுக்கு, மிளகு, மல்லிவிதை, ஓமம், சோம்பு, சீரகம், ஏலக்காய், லவங்கப்பட்டை, சதகுப்பை கலந்த பொடியில் தயாரிக்கப்படும் காபியைத்தான் மாமியாரும் நாங்களும் குடிக்கிறோம்.

 இந்த காபியில் காபிப் பொடியோ பாலோ சேர்ப்பதில்லை. நீரில் இந்தப் பொடியைப் போட்டு கொதிக்க வைத்துக் குடிக்கிறோம். இது குடித்தால் சளி.. தூசி அலர்ஜி வராது. ஜீரண சக்தி கூடும். வீட்டில் கீரை.. காய்கறிகள் கலந்த சரிவிகித உணவுதான்.

 மாமியார் சமையலில் கெட்டி. நூறு பேருக்கு சமைக்கும் திறமை அவருக்கு உண்டு. தனக்கு அனுபவத்தில் தெரிந்தது போக, குடியிருக்கும் பகுதியில் பெண்களிடம் பேசிப் பழகி அவர்களின் கை மருத்துவ ஆலோசனைகளையும் தெரிந்து வைத்துக் கொண்டு சின்ன வயதிலேயே "பாட்டி வைத்தியம்' டிப்ஸ் கொடுக்கும் அளவுக்கு திறமையை வளர்த்துக் கொண்டார். பாரம்பரிய மருத்துவம், பாரம்பரிய உணவுப் பழக்கம் அவரைப் பார்த்து குடும்பத்தில் அனைவருக்கும் தொத்திக் கொண்டன.

 நான் தகவல் தொழில் நுட்பத்துறையில் கல்லூரியில் பணி புரிந்து வந்தேன். மாணவர்கள் தொழில்நுட்பக் கல்லூரியில் சேருவது குறைந்ததினால் என்னால் வேலையில் தொடர இயலவில்லை. இதனால் எனக்குத் தெரிந்த தொழிநுட்ப அறிவு... மாமியாருக்கு இருக்கும் பாரம்பரிய உணவு மற்றும் மருத்துவ அனுபவத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க சேனல் தொடங்கினோம். ஓர் ஆண்டு ஆகிறது. நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

 இதுவரை 820 காணொளிகளைப் பதிவேற்றம் செய்திருக்கிறோம். ஆண்டராய்ட் அலைபேசி கையாளுவதைக் கற்றுக் கொண்டு வாய்ஸ் மெசேஜ், வாட்ஸ்ஆப் மெசேஜ், முகநூல்.. யூ டியூப் என்று மாமியார் வலம் வருகிறார். காணொளி காண்பவர்கள் சந்தேகத்தை மெசேஜ் மூலம் தீர்த்து வைக்கிறார்.
 ஆன்லைனில் வரும் ஆர்டர்களின்படி பொடிவகைகளை தயாரிக்கிறோம். முன்னமே தயாரித்து வைப்பதில்லை. எங்கள் தயாரிப்பிற்கு ‘ஊநநஐ' தரச் சான்றிதழ் பெற்றுள்ளோம். கூரியர் மூலமாக ஆரோக்கிய காபி பொடி, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கும் பொடி.. பல்பொடி, குளியல் பொடி, சீயக்காய் பொடி, சளி போக்கும் பொடி, சத்துமாவு போன்றவற்றை அனுப்பி வைக்கிறோம். இந்தப் பொடிகளை எப்படி தயாரிக்க வேண்டும் என்பதை காணொளியில் மாமியார் விளக்குவார். மாமியாருக்கென்று ஒரு வலைதள ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது'' என்கிறார் சந்தியா.

 வெண்ணிலாவிடம் கேட்டோம்:
 "சந்தியா எனக்கு மருமகளாகி 11-ஆண்டுகள் ஆகின்றன. முதலில் எனது சம்பந்திகளைத்தான் பாராட்ட வேண்டும். பக்குவமாக வளர்த்திருக்கிறார்கள். நான் சொல்வதை புரிந்து கொள்ளும் பக்குவம் சந்தியாவுக்கு உள்ளது. நான் நேர்பட பேசுபவள். நடப்பவள்.. குற்றம், தவறு யார் செய்தாலும் அது மகன் அல்லது மகள் என்றாலும் தப்பு என்று சொல்வேன். பூசி மெழுக மாட்டேன். மருமகள் சந்தியாவிடத்தில் குறை இருந்தாலும் அதையும் வெளிப்படையாகச் சொல்லிவிடுவேன். சந்தியாவுக்கு என்மேல் கோபமோ மனத்தாங்கலோ வராது. நான் சரியாகச் சொல்கிறேன் என்று ஏற்றுக் கொள்ளும் புரிதல் சந்தியாவிடம் உள்ளது. சில சமயங்களில் என் மகனுடன், மகளுடன் விவாதம் ஏற்படும். சந்தியாவிடம் ஏற்பட்டதில்லை.

 என் மகனும் மகளும் தொழில்நுட்பக் கல்லூரியில் பேராசிரியர்களாக இருக்கிறார்கள். மகன் எப்போதும் கேலி கிண்டல் செய்வான். எங்களின் அலைவரிசை ஒன்றாக இருப்பதால் மாமியார்-மருமகள் உறவில் சிறு கீறல் கூட விழவில்லை'' என்கிறார் வெண்ணிலா.
 - பரிணாமன்
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com