திரையுலகில் ஆண்டுகள்!

1971-ஆம் ஆண்டு முதன்முதலாக "ஹங்காமா' என்ற ஹிந்தி படத்தின் மூலம் ஜீனத் அமன் அறிமுகமானாலும், அவருக்கு பெரும் புகழைத் தேடி தந்தது "ஹரே கிருஷ்ணா ஹரே ராமா' திரைப்படமாகும்.
திரையுலகில் ஆண்டுகள்!

1971-ஆம் ஆண்டு முதன்முதலாக "ஹங்காமா' என்ற ஹிந்தி படத்தின் மூலம் ஜீனத் அமன் அறிமுகமானாலும், அவருக்கு பெரும் புகழைத் தேடி தந்தது "ஹரே கிருஷ்ணா ஹரே ராமா' திரைப்படமாகும். தொடர்ந்து 70 மற்றும் 80-களில் "யாதோன் கி பாராத்' "தோஸ்தானா' , "தரம் வீர்', "சத்தியம் சிவம் சுந்தரம்', "டான்' என பல வெற்றிப் படங்களில் நடித்து பாலிவுட்டையே கலக்கிய ஜீனத் அமன், "ஹரே கிருஷ்ணா ஹரே ராமா' படத்திற்கு தேர்வானது தனி கதையாகும்.
 தேவ் ஆனந்த், "ஹரே கிருஷ்ணா ஹரே ராமா' படத்திற்கான திரைக்கதையை உருவாக்கியவுடன், அதில் வரும் ஜானிஸ் என்ற பாத்திரத்தில் நடிக்க பொருத்தமான நடிகையை தேடிக் கொண்டிருந்தார். இந்திய தோற்றத்தில் மேல்நாட்டு நாகரீகத்துடன் கூடிய பெண்ணை தேடியபோது, அழகுப் போட்டியொன்றில் "மிஸ் ஆசியா பசிபிக்காக' தேர்வு செய்யப்பட்ட ஜீனத் அமன் பற்றி கேள்விப்பட்ட தேவ் ஆனந்த், உடனே ஜானிஸ் பாத்திரத்திற்கு அவரை ஒப்பந்தம் செய்தார். அப்படத்தில் இடம் பெற்ற "தம் மாரோ தம்' பாடலுக்கு ஜீனத் அமன் ஆடிய நடனம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதுவே ஜீனத் அமனின் திரையுலக வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உதவியானது.
 தற்போது 67 வயதாகும் ஜீனத் அமன், இன்னமும் படங்களில் நடிக்கும் வாய்ப்புகளை பெற்று வருகிறார். இந்த ஆண்டுடன் திரையுலகத்திற்கு வந்து 48 ஆண்டுகள் பூர்த்தி செய்துள்ள ஜீனத் அமன் தன் அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொள்கிறார்:
 "1971-ஆம் ஆண்டு தொடங்கிய என் திரையுலக பயணம் மகிழும் இனிமையாகவே உள்ளது. கடந்த காலத்தை திரும்பி பார்க்கும்போது, அருமையான வாய்ப்புகள் கிடைத்ததை போலவே, இன்றும் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைப்பது என்னுடைய அதிர்ஷ்டம்தான் என்று நினைக்கிறேன். நான் நடிக்க வந்துபோது இருந்த நடிகைகள், பாத்திரங்களை தேர்ந்தெடுப்பதில் கவனமுடன் இருந்தனர். ஆனால் எனக்கு வித்தியாசமான பாத்திரங்கள் கிடைத்ததோடு நவீன உடைகளிலும், நீச்சல் உடையிலும் நடிக்கும் வாய்ப்புகளும் எதிர்பாராமல் வந்தன. இதற்காக நான் ஏதும் திட்டமிடவில்லை. உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் உங்கள் தோற்றத்தை அழகாக பிரதிபலிப்பதாக உள்ளது என்று ரசிகர்கள் பாராட்டினர்.
 நான் நடித்த காலத்தில் நடிகைகள் வயதுக்குப் பொருத்தமாக கதைகளை உருவாக்குவார்கள். அதற்காகவே காத்திருந்ததும் உண்டு. சமூகத்தில் உள்ள பெண்களின் சக்தியை பிரதிபலிப்பது போலிருக்கும். அந்த காலகட்டத்திற்கு அது அழகாகவும், தேவையாகவும் இருந்தது. இன்றைய திரையுலக நடைமுறைகள் காலத்திற்கேற்ப மாறியுள்ளது.
 ஒவ்வொரு படமும் வெற்றி பெறவும், வியாபாரமாகவும் புரமோஷன் தேவைப்படுகிறது. இதற்காக நடிக - நடிகைகள் ஒத்துழைக்க வேண்டியுள்ளது. நாங்கள் நடிக்கும்போது இது போன்ற புரமோஷன் நிகழ்ச்சி
 முறை ஏதுமில்லை. நடித்து முடிப்பதோடு சரி. ஆனால் அன்றைய சூழ்நிலையே வேறு. மொபைல் போன், விரல்களுக்கு வேலை கொடுக்கும் பொழுது போக்கு சாதனங்கள், டிஜிட்டல் முறை போன்ற நவீன வசதிகள் இல்லை. தங்கள் அபிமான நட்சத்திரங்கள் நடித்த படங்களை தியேட்டரில் பார்க்க ரசிகர்கள் காத்திருந்தனர். இன்றைய நிலைமையே வேறு. புரமோஷன் ஏதுமின்றி என்னால் வாழ முடியும். ஆனால் இன்றைய இளம் தலைமுறையினருக்கு புரமோஷன் தேவைப்படுகிறது.
 நாங்கள் திரையுலகில் இருந்தபோது எங்கள் பிரச்னைகளையோ, உரிமைகளையோ வெளிப்படையாக கூற முடியாது. ஆனால் இன்றைய பெண்கள் தங்கள் பிரச்னைகளை வெளிப்படுத்துவது அவசியமாகிவிட்டது. உலகம் முழுவதுமே இன்று இளம் பெண்கள் தங்கள் உரிமைகளை கூற முன் வருவது வரவேற்கதக்கது. இது அவர்கள் உரிமை. இதனால் என்னை பெண்ணியவாதியாக நினைக்க வேண்டாம். மனிதாபிமானம் உள்ளவள். யாராக இருந்தாலும் தங்கள் உரிமையை வெளிப்படுத்துவதை வரவேற்கிறேன். திரையுலகில் மட்டுமல்ல எந்த துறையாக இருந்தாலும் சரி.
 நடிகர்- நடிகைகளின் வாரிசுகள் தொடர்ந்து திரையுலகுக்கு வருவது இன்று சகஜமாகிவிட்டது. என்னுடைய மகன்களில் ஒருவரான ஜஹான்கானை கதாநாயகனாக அறிமுகப்படுத்த பலர் அழைத்தனர். ஆனால் அவர் நடிப்பதைவிட இசையமைப்பாளராக ஆசைப்பட்டார். இன்னொருவர் கதாசிரியராகவும், இயக்குநராகவும் உள்ளார். மொத்தத்தில் இருவருமே பொழுது போக்குத் துறையை தேர்ந்தெடுத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது'' என்கிறார் ஜீனத் அமன்.
 - பூர்ணிமா
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com