பார்ப்பவை எல்லாம் கதையாக மாறுவதில்லை! - எழுத்தாளர் சிவசங்கரி

இலக்கியத்திற்கும் மானுட வாழ்க்கைக்கும் வளம் சேர்க்கும் பயணமாக ஏறத்தாழ அரை நூற்றாண்டுகள் கடந்தது இவரது இலக்கியப் பயணம்.
பார்ப்பவை எல்லாம் கதையாக மாறுவதில்லை! - எழுத்தாளர் சிவசங்கரி

இலக்கியத்திற்கும் மானுட வாழ்க்கைக்கும் வளம் சேர்க்கும் பயணமாக ஏறத்தாழ அரை நூற்றாண்டுகள் கடந்தது இவரது இலக்கியப் பயணம். இவரது எழுத்துக்கள் ஒரு தோழியோடு உரையாடுவது போன்ற ஆனந்தத்தில் நம்மை ஆழ்த்தும். தன் கதைகளால் பெண்களின் வாழ்வில் ரசவாதங்களை நிகழ்த்திய பெருமை இவருக்கு உண்டு. வாழ்க்கைப்பாடுகளை தன்னுடைய வசீகரமான எழுத்தால் முன்வைத்து பெண்களுக்கு மரியாதையை அங்கீகாரத்தை ஏற்படுத்தித் தந்தவர். ஆண் பெண் உறவில் புதிய பரிமாணத்தைத் தமிழ் உலகுக்குக் காட்டின இவரது கதைகள். எண்பதுகளில் பலர் தங்கள் வீட்டுப் பெண் குழந்தைகளுக்கு இவரது பெயரைச் சூட்டி மகிழ்ந்தார்கள். திரைப்படங்களாக இவரின் கதைகள் உருப் பெற்றிருக்கின்றன. தமிழர் மனங்களில் நேர்மறை சிந்தனைகளை எழுத்துகளால் ஏற்படுத்திய சிவசங்கரியின் வாழ்க்கை அனுபவங்கள் "சூரிய வம்சம்'  என்று புத்தகமாக வெளிவந்திருக்கிறது. அந்த நிகழ்வின் நிறைவோடு இருந்தவரை நாமும் ஓர் அழகான மழைநாளில் சந்தித்தோம். மென்மையும் இனிமையும் தோய்த்து தன் கருத்துக்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார்:

உங்கள் முதல் தொகுப்பு ஜெயகாந்தன் அணிந்துரையோடு வந்தது பற்றி?

பரவசமாய் இருந்தது. வானத்தை வில்லாய் வளைத்தது போன்ற சந்தோஷம். ஜெயகாந்தன் அன்று நான் மிக உயரத்தில் அண்ணாந்து பார்த்த எழுத்தாளர். என் முதல் தொகுப்புக்கு அவர் அணிந்துரை தர ஒத்துக் கொள்வார் என்று நான் நினைக்கவில்லை. மணியன் சார்தான் என்னைப்பற்றிச் சொல்லி இந்த அணிந்துரையை பெற்றுத் தந்தவர். முதல் புத்தகம் வெளியானது ஒரு சந்தோஷம் என்றால் அதற்கு மிகப்பெரிய எழுத்தாளுமை அணிந்துரை தந்தது பெரியதாக எதையோ சாதித்துவிட்ட  மகிழ்ச்சி.

உங்கள் கதைகளில் குழந்தை பாத்திரங்கள் அதிகம் இடம் பெறுகின்றன, காரணம் என்ன? 

குழந்தை பாத்திரம் என்று இல்லை எந்தவொரு கதாபாத்திரத்தையும் நான் வலிந்து திணிப்பதில்லை. கதையின் போக்கில் என்னென்ன பாத்திரங்கள் தேவைப்படுகின்றன அவற்றை அப்படியே எடுத்துக்கொண்டு எழுதுகிறேன். மரியாதை கலந்த ஈர்ப்பு இருப்பதாக கணவன் மனைவி உறவை நீங்கள் காட்டுகிறீர்கள். உறவு நட்பு உறவு கலந்ததாக இருக்கிறது பெண் கதாபாத்திரங்கள் மாறுபட்டு இருக்கிறார்கள் என்றெல்லாம் கேட்பதுண்டு. ஆனால் இவை எதையுமே நான் தீர்மானிப்பதில்லை. மனதில் தோன்றும் கதையின் கரு தான் தீர்மானிக்கிறது. 

குழந்தை இலக்கியத்தையும் நீங்கள் விட்டுவைக்கவில்லை அது பற்றிச் சொல்லுங்கள்?

"அம்மா சொன்ன கதைகள்' என்ற பெயரில் ஒரு புத்தகம் வெளியிட்டிருக்கிறேன். என்னுடைய அம்மா எனக்கு சொன்ன ஆறு கதைகளை அப்படியே கோபுலுவின் ஓவியங்களோடு புத்தகமாகவும் என்னுடைய குரலில் ஒலி புத்தகமாகவும் கொண்டு வந்தேன். தமிழின் முதல் பேசும் புத்தகம் என்னுடைய  "அம்மா சொன்ன கதைகள்' தான். 

உங்கள் கதாபாத்திரங்கள் அன்பும் நம்பிக்கையும் கொண்ட நேர்மறை பாத்திரங்களாகவே இருக்கின்றனவே?

வாழ்க்கையில் எனக்கு அமைந்த நல்ல உறவு, நல்ல குடும்பம், நல்ல நண்பர்கள், நல்ல கணவர் இதனால் என் பாத்திரங்களும் அப்படி அமைந்திருக்கலாம். அர்த்தமுள்ள வாழ்க்கையை நேர்மறையான வாழ்க்கையை வாழ்வதற்கான சாத்தியம் எல்லாருக்கும் இருக்கிறது. எனக்கு கிடைத்திருக்கும் இந்த வாழ்க்கையும் வாய்ப்பும் என் வாசகர்களையும் சென்றடையும் என்றால் அதைவிட எனக்கு என்ன வேண்டும்? சுய அலசல், சுயவிமர்சனம் செய்து கொள்வது நம் வாழ்க்கையையே ஒரு நேர்மறையான சந்தோஷமான வாழ்க்கையாக மாற்றிவிடும். கண்டிஷனல் லவ் என்று சொல்வார்களே அப்படியான எதிர்பார்ப்பில்லாத அன்பை நான் நாய்களிடம் தான் கற்றுக்கொண்டேன் என்று சொல்லுவேன். எல்லா ஜீவன்களிடமும் நாம் கற்றுக் கொள்வதற்கு விஷயங்கள் இருக்கின்றன. அப்படி நான் கற்றுக்கொள்வதை என் வாசகர்களோடு பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பு அமைந்தது பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த நீங்கள் வறுமையோடு போராடும் பெண்கள் பற்றி நிறைய எழுதி இருக்கிறீர்கள் இது எப்படி சாத்தியமாயிற்று?

இந்த கேள்வி எனக்கு மிகுந்த மன நிறைவைத் தருகிறது. நான் அந்தக் கண்ணோட்டத்தையும் வளர்த்துக் கொண்டிருக்கிறேன் என்பதை ஒத்துக்கொண்டு நீங்கள் இதைக் கேட்கிறீர்கள். இதை நான் அங்கீகாரமாக கருதுகிறேன். விழுப்புரத்தில் வாழ்ந்த 14 ஆண்டுகள் எனக்கு விழிப்புணர்வை தந்தது என்று சொல்லுவேன். ஒரு பட்டாம்பூச்சியின் வாழ்க்கைப் போல என் வாழ்க்கையிலும் மிகப்பெரிய மாற்றத்தை அங்கேதான் நான் பெற்றேன். உயர்நிலையில் இருந்து ஜன்னல் வழியாக உலகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த சிவசங்கரி அடிமட்ட நிலைக்கு சென்று இல்லாதவர்கள் கிராமத்தவர்கள் வாழ்க்கை அங்கே நான் அடைந்த அனுபவங்கள் என்னை ஒரு மனுஷியாக கன்னத்தில் அறைந்து உருவாக்கின. சாட்டையால் அடிப்பதைப் போல சில சம்பவங்கள் என்னை பாதித்திருக்கின்றன. இதுதான் உலகம் என்று எனக்குக் காட்டின. ஒரு மனுஷியாக சிவசங்கரியின் வளர்ச்சி எழுத்தாளர் சிவசங்கரியின் கண்ணோட்டத்தை விரிவுபடுத்தியது. 

கதைகள் சொந்த அனுபவங்களிலிருந்து பிறக்கும் என்கிறார்கள். பார்க்கும் விஷயங்களில் இருந்தெல்லாம் கதைகள் வந்துவிடுகிறதா?

பார்ப்பவை எல்லாம் கதையாக மாறுவதில்லை. ஐம்புலன்களையும் சிந்தனையையும் பாதிக்கும் விஷயங்கள் நான் பார்த்து, உணர்ந்து, சுவாசித்து, சாப்பிட்டு, அனுபவித்து உணர்ந்த விஷயங்கள் அவை நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் கோபம் ஊட்டுவதாக வருத்தம் தருவதாக கண்ணீர் வர வைப்பதாகவும்  இருக்கலாம்.  என்னைப் பரவசப்படுத்தியதாகவும் இருக்கலாம். அதனுடைய விளைவு தான் என்னுடைய எழுத்துகள்.  யாருக்கும் அறிவுரை சொல்வதற்கோ, தீர்வுகளைச் சொல்வதற்கோ நான் கதைகள் எழுதியதில்லை. என்னுடைய நோக்கம் என்னை பாதித்த சிந்திக்கவைத்த தீர்வு நோக்கி என்னை நகர்த்திய விஷயங்களை உளப்பூர்வமாகப் பகிர்ந்து கொள்வது அவ்வளவுதான்.

உங்கள் கதைகள் தனித்துவம் கொண்ட தலைப்பு கொண்டவையாக இருக்கின்றன. அதற்கு என்ன முயற்சி மேற்கொள்கிறீர்கள்?

அது என்னவோ எனக்குத் தெரியவில்லை. மனதில் கதைக்கான கரு தோன்றியவுடன் தலைப்பைப் பற்றி தான் யோசிப்பேன். தலைப்பு சிறப்பாக அமைந்த பின்னர் தான் கதையை எழுதத் தொடங்குகிறேன். தலைப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்று கருதுகிறேன் நல்ல தலைப்பு அமையும் வரை என் சிந்தனை தலைப்பை சுற்றியே இருக்கிறது. சில நேரங்களில் இந்தத் தலைப்புக்கும் கதைக்கும் என்ன தொடர்பு என்று பல வாசகர்கள் தொடர்கதை எழுதும் பொழுது கேள்வி கேட்டதும் ஆனால் அது எங்கோ ஓரிடத்தில் பொருத்தமானதாக அமையும் பொழுது அப்படி கேள்வி எழுப்பியவர்கள் கூட மீண்டும் கடிதம் மூலமாகவோ நேரிலோ என்னை சந்தித்து கதைக்கான தலைப்பை சிலாகித்ததும் உண்டு. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் "நண்டு' கதையைச் சொல்லலாம். நண்டுகள் கடற்கரையோரத்தில் விளையாடிக் கொண்டு வளையில் இருந்து வெளியேறுவதுமாக இருப்பதை நாயகி சீதா பார்ப்பது போல காட்சி இருக்கும். ஆனால் கதைக்கும் இதற்கும் என்ன தொடர்பு என்று பலரும் கேட்டிருக்கிறார்கள். ஏறத்தாழ 22 வாரங்களுக்குப் பிறகு தான் "நண்டு' என்பது புற்றுநோயை குறிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது என்று தெரியவந்தது. இப்படிப் பல கதைகளைச் சொல்ல முடியும்.

சிறுகதை, நாவல், புதினம், தொடர்கதை, கட்டுரை, பேட்டிகள், பயண இலக்கியம் என்று எதையுமே நீங்கள் விட்டுவைக்கவில்லை எல்லாவற்றிலும் சிறப்பான எழுத்து சாத்தியமாக என்ன செய்கிறீர்கள்?

கதையோ கட்டுரையோ எதையும் திட்டமிட்டு குறிப்புகளோடு எழுத ஆரம்பிக்கிறேன். ஒரு தொடர்கதை என்பது அதன் போக்கில் போய்க் கொண்டிருக்க முடியாது. ஒரு முழு கதையையும் தீர்மானித்த பிறகுதான் எழுதத் தொடங்குகிறேன். பயண இலக்கியமும் அப்படித்தான். நான் எதைப் பார்த்து இன்பமுற்றேனோ அதை அப்படியே என் வாசகர்களின் கண்களுக்கு மாற்றிவிடத் தவிக்கிறேன். அதனால் அது எளிதாக படிப்பவர்களைப் போய்ச் சேர்ந்திருக்கலாம் இதில் பெருமைப்பட்டுக் கொள்வதற்கு எனக்கு ஒன்றும் இல்லை. வரமாக வாய்த்திருக்கிறது வேறென்ன சொல்ல?

உங்களது வாழ்க்கை அனுபவங்கள் "சூரியவம்சம்‘ பிறந்தது எப்படி?

எனக்கு மகளாய், காரியதரிசியாய், துணையாய் என்னோடு 40 ஆண்டுகாலம் பயணித்த லலிதாவின் இறுதி ஆசை நான் சுயசரிதை எழுத வேண்டும் என்பது. அப்போது நான் அதை மறுத்தேன். சுயசரிதை என்பது அப்பட்டமான உண்மைகளைப் பேசுவதாக இருக்க வேண்டும். அப்படிப் பேசும் உண்மைகள் பலரை சங்கடத்தில் ஆழ்த்தும் அதனால் வேண்டாம் என்று தவிர்த்தேன். "அப்படி எனில், உங்கள் நினைவலைகள் என்று எழுதுங்கள். நாம் விரும்பியதை எழுதலாம் வெளியில் சொல்ல விரும்பாததை விட்டுவிடலாம்' என்றாள். பார்ப்போம் என்று அப்போது அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. லலிதாவின் மரணத்திற்குப் பின் அவள் விருப்பத்தை நிறைவேற்றக் காலமும் வாய்ப்பும் அமைந்திருக்கிறது. ஒன்றரை வயது தொடங்கி இன்றைய 77 வயது வரை என்னை பாதித்த என் நினைவில் இருக்கும் எல்லா சம்பவங்களையும் தந்திருக்கிறேன்.

"சூரியவம்சம்' பெயருக்கும் காரணம் இருக்கும் அல்லவா? 

நிச்சயமாக இருக்கிறது அதை என்னுடைய புத்தகத்தின் ஆரம்பத்திலேயே எழுதி இருக்கிறேன். என் தகப்பனார் என் தாத்தா பாட்டிக்கு ஐந்தாவது குழந்தை. அவருக்கு தெய்வமே தந்த பெயர் சூரியநாராயணன். சூரியநாராயணன் என்ற பெயருக்கு மிக சுவாரஸ்யமான கதை ஒன்று இருக்கிறது. சூரியநாராயணனின் மகள் நான் சூரிய புத்திரி. அதனால் என் வரலாறு "சூரிய வம்சம்'. இதைவிடப் பொருத்தமான தலைப்பு என்ன இருக்க முடியும்! 

இலக்கியம் வழியாக இந்தியாவை இணைப்பது என்ற எண்ணம் மனதில் விதையாக விழுந்தது எப்போது?

மைசூரில் ஓர் ஆங்கில எழுத்தாளரின் எழுத்துகளை ஒரு சந்திப்பில் பல எழுத்தாளர்கள் அலசி ஆராய்ந்தோம். அப்போதுதான் இந்தியாவிற்குள் இருக்கும் இலக்கியங்களைப் பற்றி ஏன் நாம் இப்படி செய்யக் கூடாது? என எண்ணி அதை செயல்படுத்த முயன்றேன். 18 இந்திய மொழிகளை அதற்காக எடுத்துக்கொண்டு 16 ஆண்டுகள் உழைத்து நான்கு தொகுப்புகளாக வெளிவந்தது. சாகித்ய அகாடமி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் பல மொழி எழுத்தாளர்களையும் சந்தித்தேன். இந்தியர் என்று சொல்லிக்கொள்ளும் நாம் ஏன் இந்தியாவின் பிற பகுதிகளில் இருக்கும் இலக்கியங்களை நமதாகப் பார்க்கக்கூடாது? ஒவ்வொரு எழுத்தாளரையும் நேராக சந்தித்து அவர்களோடு இருந்து எழுதினேன். இந்தியர்களை இந்தியர்களுக்கு அறிமுகம் செய்வது என்பதுதான் இதன் மையக்கருத்து.

கணக்கற்ற பிரபலங்களை நீங்கள் நேர்காணல் செய்திருக்கிறீர்கள் அது பற்றி சொல்லுங்களேன்?

இந்திராகாந்தி அம்மையார் தொடங்கி அப்துல் கலாம் ஐயா வரை பலரோடு தனி மனிதர்களாக அவர்களிடம் உரையாடி இருக்கிறேன். அரசியல் சார்ந்தோ அவர்களின் பொது வாழ்க்கை குறித்தோ நான் கேள்விகளை எழுப்பியது இல்லை. மனம் திறந்து உரையாடுவதே என்னுடைய நோக்கமாக இருந்தது. 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நட்பு பற்றி?

என்னுடைய "சூரியவம்சம்' புத்தகத்தில் நான் இந்த நினைவுகளை எழுதியிருக்கிறேன். அவர் வாழ்க்கையின் மேடு பள்ளங்கள் விருப்பங்கள் ரகசியங்கள் எல்லாம் எனக்குத் தெரிந்திருந்தது. அப்படியான ஆத்மார்த்தமான நட்பு எங்களுக்கு இருந்தது. நான் நாட்டியம் கற்றுக் கொண்ட  ஆசிரியரிடமே ஜெயலலிதாவும் நாட்டியம் கற்றுக் கொண்டார். ஏறத்தாழ ஒன்பது வயது சிறுமியாக ஜெயலலிதா இருந்த காலத்திலிருந்து நாங்கள் இருவரும் உளப்பூர்வமான நட்போடு இருந்தோம். என் வீட்டுக்கு வந்து அடுக்களை மேடையில் ஏறி அமர்ந்து கொள்வார்.  நான் அவருக்கு முறுகலான தோசை சுட்டுத் தருவேன். இருவரும் அந்த நேரத்தில் எத்தனையோ விஷயங்களை பரிமாறிக் கொள்வோம். எனக்குக் கிடைத்த அற்புதமான நட்பு அம்மு என்று அழைக்கும் ஜெயலலிதா.

சூர்யவம்சம் எழுதிய பிறகு எப்படி உணர்கிறீர்கள்?

மிகுந்த மனநிறைவோடு இருக்கிறேன். என் வாழ்க்கையை, என் குடும்பத்தாரை, என் மூதாதையர்களை பற்றி நான் எல்லாவற்றையும் பதிவு செய்து இருக்கிறேன் என்ற திருப்தியோடு இருக்கிறேன். என்னை உருவாக்கியவர்கள் என் அற்புதமான கணவர் என் நட்பு என எல்லாவற்றையும் ஒளிவுமறைவற்றுப் பதிவு செய்வதற்கு வாய்ப்பு அமைந்திருப்பது என்னை பரவசத்தோடு நிறைவடைய செய்திருக்கிறது.

சமூக வலைத்தளங்களில் சிக்கல்களில் மாட்டிக் கொள்ளும் பெண்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

மரியாதை கலந்த அன்பு என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். அது கிடைக்காதபோது அந்தக் கூட்டுக்குள் அடைந்து விடாதீர்கள் என்று பல கதைகளை எழுதிவிட்டேன். இன்றைய பெண்கள் சுதந்திரம் என்பதன் பொருளை உணர வேண்டும். ஆண் செய்வதையெல்லாம் நாமும் செய்வதற்குப் பெயர் சுதந்திரம் அல்ல. நான் எதை விரும்புகிறேனோ நான் என்னவாக விரும்புகிறேனோ அதைச் செய்வதற்கான சுதந்திரம் எனக்கு இருக்க வேண்டும். உங்கள் செயல்கள் உங்களுக்கு மரியாதையை பெற்றுத் தரவேண்டும். அதை கவனத்தில் கொள்ளுங்கள். பயத்தோடு கூண்டுக்குள் அடைந்து விடக்கூடாது. கட்டற்றும் போய்விடக்கூடாது. உங்கள் தனித்தன்மையைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். நீங்கள் நீங்களாக இருங்கள்.

அரை நூற்றாண்டுக்கும் மேலாக எழுதி வருகிறீர்கள் இன்னும் எழுதுவதற்கு  இருப்பதாக நினைக்கிறீர்களா?

எழுதியதுவரை நிறைவாய் உணர்கிறேன். எழுதி இருப்பதே போதும் என்று தோன்றிவிட்டது. இனி எழுதுபவர்களுக்கு ஊக்கம் தருவோம். நம்மை வாழவைத்த இலக்கிய உலகுக்கும் பத்திரிகைகளுக்கு உதவுவது, போட்டிகள் நடத்துவது என்று நம்மால் இயன்றதை செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருக்கிறது.

சந்திப்பு -
படங்கள்- ப.ராதாகிருஷ்ணன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com