மாற்றத்திற்கான மங்கை "கிரேட்டா தன்பர்க்'

2003-இல் பிறந்த இவர், 2018-இல் உலகின் மிகச்சிறந்த 25 இளைஞர்களில் ஒருவர் (டைம், டிசம்பர் 2018), 2019-இல் மிக முக்கியப் பெண்மணி (உலக மகளிர் தினம், ஸ்வீடன், 2019), 2019-இல் மிகப் பிரபலமான 100 பேரில் ஒருவ
மாற்றத்திற்கான மங்கை "கிரேட்டா தன்பர்க்'

2003-இல் பிறந்த இவர், 2018-இல் உலகின் மிகச்சிறந்த 25 இளைஞர்களில் ஒருவர் (டைம், டிசம்பர் 2018), 2019-இல் மிக முக்கியப் பெண்மணி (உலக மகளிர் தினம், ஸ்வீடன், 2019), 2019-இல் மிகப் பிரபலமான 100 பேரில் ஒருவர் (டைம், ஏப்ரல் 2019), அடுத்த தலைமுறைத் தலைவர்களில் ஒருவர் (16-ஆவது வயதில் முகப்பு அட்டையில் புகைப்படம், டைம் இதழ், மே 2019) என்ற சிறப்புகளைப் பெற்றவர். பிரிட்டனிலிருந்து வெளிவரும் "வோக்' இதழின் செப்டம்பர் இதழ் முகப்பு அட்டையில் "மாற்றத்திற்கான சக்திகள்' என்ற தலைப்பில் இடம் பெறவுள்ள 15 நபர்களில் இவரும் ஒருவராவார். யார் இவர் கிரேட்டா தன்பர்க்.
 நோபல் அமைதிப் பரிசுக்காக ஸ்வீடன் பாராளுமன்ற இரு உறுப்பினர்களும், நார்வே பாராளுமன்ற மூன்று உறுப்பினர்களும் இவரது பெயரை பரிந்துரைக்கின்றனர். அப்பரிசினை அவர் பெறுவாரேயானால் உலகில் மிக இளம் வயதில் அதைப் பெற்ற பெருமையை அடைவார் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பள்ளி மாணவியான கிரேட்டா தன்பர்க். தன் 15 -ஆம் வயதில், புவி வெப்பமயமாதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி ஸ்வீடன் பாராளுமன்றத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தி உலகை தன் பக்கம் ஈர்த்ததன் மூலம் முதல் பருவ நிலை ஆர்வலராகக் கருதப்படுகிறார்.
 இளைஞர்களுக்கான ஃப்ரைஷுசெட் மாதிரி விருது (ஸ்டாக்ஹோம், நவம்பர் 2018), ஜெர்மனின் கோல்டன் காமரா சிறப்பு பருவநிலை பாதுகாப்பு விருது (ஜெர்மனி, 31 மார்ச் 2019), 15 முதல் 25 வயது இளைஞருக்கான விடுதலை விருது (நார்மாண்டி, பிரான்ஸ், 1 ஏப்ரல் 2019), பேச்சு சுதந்திரத்திற்கான ஃப்ரிட் ஆர்ட் விருது (பிறிதொரு அமைப்புடன் இணைந்து, நார்வே, 12 ஏப்ரல் 2019), லாடாடோ சி விருது (மிலேரேப்பா பவுன்டேஷன், சிலி, ஏப்ரல் 2019), மனசாட்சிக்கான தூதுவர் விருது (பன்னாட்டு மன்னிப்பு அவை, லண்டன், 7 ஜுன் 2019), மதிப்புறு முனைவர் பட்டம் (மோன்ஸ் பல்கலைக்கழகம், பெல்ஜியம், ஜுன் 2019), கெட்டிஸ் சுற்றுச்சூழல் விருது (ராயல் ஸ்காட்டிஷ் ஜியாபிரபிகல் சொசைட்டி, ஸ்காட்லாந்து, 12 ஜுலை 2019) உள்ளிட்ட பல விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.
 பிப்ரவரி 2018- இல் அமெரிக்காவில் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டின்போது இவருக்கு பருவ நிலையின் பாதுகாப்பு குறித்து போராட்டம் மேற்கொள்ளவேண்டும் என்ற எண்ணம் வர, அதன் விளைவாக அப்போதே சில மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல மறுத்தனர். அதுமுதல் அவருடைய கவனம் பருவ நிலையைக் காப்பாற்றுவதில் ஈடுபட்டது.
 மே 2018-இல் ஸ்வீடனின் "ஸ்வென்ஸ்கா டாக்லாடெட்' இதழ் நடத்திய கட்டுரைப் போட்டியில் வென்றவர்களில் இவரும் ஒருவர். கட்டுரை வெளியான பின் பருவநிலை மாற்றத்துக்காகப் பாடுபடும் குழுவினர் இவரோடு தொடர்பு கொள்ளவே, அவர்களுடைய கூட்டங்களில் கலந்து கொண்டார். அவர்கள், பள்ளி மாணவர்கள் பருவநிலை மாற்றத்திற்காக போராட்டம் செய்யலாம் என்றபோது இவர் பலரை அம்முயற்சியில் ஈடுபடுத்த முயன்றார். எவரும் முன்வராத நிலையில் தானே களத்தில் இறங்கினார்.
 ஆகஸ்ட் 2018 -இல், ஒன்பதாம் வகுப்பு படித்தபோது அவருடைய தனிப்பட்ட ஈடுபாடு தொடங்கியது. ஸ்வீடனில் தேர்தல் நடைபெறவிருந்த 9 செப்டம்பர் 2018 வரை பள்ளி செல்வதில்லை என முடிவெடுத்தார். அப்போது ஸ்வீடன் 262 ஆண்டுகளில் மிகக்கொடிய வெப்பத்தை எதிர்கொண்டது. அக்காலகட்டத்தில் பாராளுமன்றக் கட்டடத்தின் முன்பாக தனியாக, போராட்டத்தை ஆரம்பித்து, பாரிஸ் பருவ நிலை ஒப்பந்தத்தில் குறிக்கப்பட்டுள்ள அளவு கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கவேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார்.
 மூன்று வாரங்கள் தினமும் பள்ளி நேரத்தில் பருவநிலையைக்காக்க பள்ளிப் போராட்டம் என்ற பதாகையுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர், ஏழு கண்டங்களில் 95 நாடுகளில் நடைபெற்றபோது புருஸ்úஸல்சில், ஐரோப்பிய பாராளுமன்றத்தின்முன்பாக நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டார்.
 21 பிப்ரவரி 2019-இல் ஐரோப்பிய பொருளாதார மற்றும் சமூகக் குழுவின் மாநாட்டிலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவரிடமும் அவர், "பாரிஸ் பருவநிலை ஒப்பந்தப்படி உலக வெப்பமயமாதலை 2 டிகிரி செல்ஷியஸுக்கு மிகாமல் கட்டுப்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் கார்பன்டை ஆக்ûஸடு உமிழ்வினை 2030-க்குள் 80 விழுக்காட்டிற்கு அதாவது பாரிஸ் ஒப்பந்தத்தில் குறிக்கப்பட்ட இலக்கான 40 விழுக்காட்டின் இரு பங்காகக் குறைக்கவேண்டும். அதில் நாம் தவறினால் நம் அரசியல் தலைவர்களின் மரபார்ந்த கொள்கைகள் மனிதகுல வரலாற்றின் பெரும் தோல்வியாகக் கருதப்படும்" என்றார்.
 மார்ச் 2019-இல் தொடர்ந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஸ்வீடன் பாராளுமன்றத்தின் முன் போராட்டத்தைத் தொடர்ந்தார். அவ்வப்போது சில மாணவர்கள் அவருடன் சேர்ந்துகொண்டனர்.
 15 மார்ச் 2019-இல் 112 நாடுகளைச் சேர்ந்த 1.4 மில்லியன் பள்ளி மாணவ மாணவியர்கள் பருவ நிலை மாற்றத்தைத் தடுக்க அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி தம் வகுப்புகளைப் புறக்கணித்து அடையாளப் போராட்டம் நடத்தினர்.
 இதனையடுத்து, பெர்லினில் பிரான்டென்போர்க் வாயிலின்முன்பு கூடியிருந்த 25 ஆயிரம் பேருக்கு முன் "எதிர்காலம் அழியப்படுவதை எதிர்ப்பதற்காக குழந்தைகள் தம் படிப்பையே தியாகம் செய்யவேண்டிய ஒரு வித்தியாசமான உலகில் வாழ்கிறோம் என்று பேசினார்.
 24 மே 2019-இல் 125 நாடுகளைச் சேர்ந்த மாணவர்களைக் கொண்ட போராட்டம் நடைபெற்றது. மே 2019-இல், பாரிஸ் பருவ நிலை ஒப்பந்தத்தை துரிதப்படுத்த ஆஸ்திரியாவில் நடத்தப்பட்ட, 30 நாடுகளைச் சேர்ந்த 17 ஆயிரம் பேர் கலந்துகொண்ட மாநாட்டில் கால நிலை மாற்றம் தொடர்பான இடை அரசின் இடைக்கால அறிக்கையை மேற்கோள் காட்டிப் பேசும்போது, "தோராயமாக 2030-க்குள் எதிர்பார்த்த மாற்றங்களைச் செய்யாவிடில், மனித சக்தியால் கட்டுப்படுத்த முடியாத பேரழிவினைச் சந்திக்கும் நிலைக்கு ஆளாவோம்" என்றார்.
 ஆகஸ்டு 2019-இல் ஜெர்மனியில் உள்ள ஹம்பாச் காடுகளுக்குப் பயணித்த இவர், நிலக்கரிச் சுரங்கத்திற்காக அங்கு மரங்கள் வெட்டப்பட்டு அக்காடு அழிக்கப்படுவதை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று குரலெழுப்பினார்.
 14 ஆகஸ்டு 2019-இல் அமெரிக்காவிற்குப் படகில் புறப்பட்டு செல்ல ஆயத்தமாகியுள்ளார் தன்பர்க். 23 செப்டம்பர் 2019-இல் நியூயார்க்கிலும், 2-13 டிசம்பர் 2019-இல் சான்டியாகோவிலும் நடைபெறவுள்ள பருவநிலை மாநாடுகளில் கலந்துகொள்ள அமெரிக்கா செல்கிறார். விமானப்பயணத்தைத் தவிர்க்க இவர் படகில் செல்கிறார்.
 தன்பர்க்கும் அவரது சகோதரியும் அஸ்பெர்கர் சின்ட்ரோமால் பாதிக்கப்பட்டவர்கள் என்று அவர்களுடைய தாயார் கூறியுள்ளார். இக்குறைபாடு உள்ளோர் மற்றவர்களை புரிந்து கொள்வதிலும் மற்றவர்களுடன் பேசுவதிலும் எதிர்வினையாற்றுவதிலும் துன்பமுறுவர் என்றும், தங்கள் செயல்களில் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் இருப்பர் என்றும், இது ஓர் வளர்ச்சிக் குறைபாடே யின்றி நோயல்ல என்றும், இக்குறைபாடு உள்ளவர்களால் பின்னர் நண்பர்களை ஏற்படுத்திக் கொள்ளவும், பயனுள்ள பணிகளை ஆற்றவும் வெற்றிகரமான வாழ்க்கை மேற்கொள்ளவும் இயலும் என்றும் கூறுவர்.
 நிறமற்றதையும், காற்றில் வெளிப்படுத்தப்படுகின்ற கண்ணுக்குப் புலனாகாத கார்பன் டை ஆக்ûஸடை கண்களால் காணும் அரிய சக்தி இவருக்குள்ளதாகவும், புகைபோக்கியிலிருந்து வெளியே வந்து அது சுற்றுச்சூழலை குப்பைமயமாக்குவதையும் இவளால் பார்க்க முடிவதாகவும், அதனால்தான் இவர் பருவநிலை மாற்றத்திற்கு பங்களிக்கிறார் என்றும் அவருடைய தாயார் கூறுகிறார்.
 பல பள்ளி மாணவர்கள் பருவநிலைப் போராளிகளாக ஆவதற்கு தூண்டுகோலாக அவர் ஏற்படுத்திய தாக்கத்தை, கிரேட்டா தன்பர்க் விளைவு என்று கூறுகின்றனர். பலவித சோதனைகளை எதிர்கொண்டு தன் பயணத்தை தொடர்கிறார்.
 -பா.ஜம்புலிங்கம்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com