பெயிண்டிங் செய்யும் 100 வயது பாட்டி!

பெயிண்டிங் செய்யும் 100 வயது பாட்டி!

50 வயதைத் தாண்டியதுமே முதுமை அடைந்து விட்டதாகப் பலர் நினைத்துக் கொள்கிறார்கள்.  "குனிய முடியவில்லை; நிமிர முடியவில்லை; அங்கே வலிக்கிறது; இங்கே வலிக்கிறது'  என ஒரே புலம்பல்.

50 வயதைத் தாண்டியதுமே முதுமை அடைந்து விட்டதாகப் பலர் நினைத்துக் கொள்கிறார்கள். "குனிய முடியவில்லை; நிமிர முடியவில்லை; அங்கே வலிக்கிறது; இங்கே வலிக்கிறது' என ஒரே புலம்பல்.

100 வயதான பாட்டி ஒருவர் துணிகளில் விதவிதமான டிசைன்களில் பெயிண்டிங் செய்து தருகிறார் என்றால் நம்ப முடிகிறதா? அவர் பத்மம் நாயர்.

சமீபத்தில்தான் அவருடைய 100 - ஆவது பிறந்தநாளை அவருடைய மகள்கள், மகன்கள், பேரப் பிள்ளைகள், கொள்ளுப் பேரன்,பேத்திகள் என எல்லாரும் ஸþம் மீட்டிங் மூலமாகக் கொண்டாடியிருக்கிறார்கள்.

பத்மம் நாயர் பிறந்தது கேரளாவின் திரிச்சூர் மாவட்டத்தில் உள்ள வயநாட்டில். திருமணம் ஆனவுடன் கணவர் கே.கே.நாயருடன் மும்பைக்குப் பயணம். கணவருக்கு ஃபோர்ட் மோட்டார் நிறுவனத்தில் வேலை. தற்போது மகள் லதாவுடன் புணேயில் வாழ்கிறார்.

சிறுவயதில் இருந்தே பெயிண்டிங்கில் பத்மம் நாயருக்கு ஆர்வம். தையல், எம்பிராய்டரி ஆகியவற்றிலும். குழந்தைகள், பேரப் பிள்ளைகளின் உடைகளைத் தைத்துத் தருவது அவருடைய வேலையாக இருந்திருக்கிறது.

""அம்மா தன் இளம் வயதில் மீன் தொட்டியில் மீன்களை வளர்ப்பதில் மிகவும் ஆர்வமுடையவராக இருந்தார். மீன்களுக்கு உணவளிப்பது அவருக்கு மிகவும் பிடிக்கும். வயதாக ஆக மீன் தொட்டிகளைக் கழுவ அவரால் முடியவில்லை. அதனால் மீன்கள் வளர்ப்பதை அவர் விட்டுவிட்டார். பெயிண்டிங்கில் ஆர்வம் இருந்தாலும் இடையில் அவர் விட்டுவிட்டார். தையலில், எம்பிராய்டரியில் கவனம் செலுத்தினார். ஆனால் பெயிண்டிங் அவரை விடவில்லை. தற்போது புடவைகளில், துப்பட்டாக்களில் விதவிதமாக அவர் பெயிண்டிங் செய்து தருவது எல்லாருக்கும் பிடிக்கிறது'' என்கிறார் அவருடைய மகள் லதா.

100 வயதானாலும் எப்போதும் பிஸியாக இருப்பது பத்மம் நாயரின் வழக்கம். காலையில் எழுந்ததும் தன் வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு 10.30 மணியளவில் பெயிண்டிங் வேலைகளைத் தொடங்கினார் என்றால் பகல் 1.30 வரை மூன்று மணிநேரங்கள் அதிலேயே மூழ்கிவிடுகிறார். மாலையில் சிறிது நேரம் தையல் வேலை. அப்புறம் டிவி பார்க்க உட்கார்ந்துவிடுகிறார். மம்மூட்டி, மோகன்லால் அவருக்குப் பிடித்த நடிகர்கள்.

""வயதாகிவிட்டால், நவீன வாழ்க்கையில் இருந்து விலகி சிலர் ரொம்ப தூரத்தில் பின்தங்கிக் கிடப்பார்கள். அம்மா அப்படியில்லை. வாட்ஸ் ஆப் - இல்தான் அவருடைய புடவை டிசைனுக்கான ஆர்டர்கள் வருகின்றன. உலகின் பல இடங்களில் வாழும் குடும்பத்தினருடன் வாட்ஸ்ஆப் வீடியோ கால் மூலமாகத் தொடர்பு கொண்டு பேசுவது அம்மாவுக்கு மிகவும் பிடிக்கும். இ - மெயிலில் தகவல்களை அனுப்புகிறார். முகநூலில் மட்டும் அவர் இல்லை. தொடர்பு கொள்ள நிறைய ஃபிரண்ட்ஸ் எனக்கில்லை. அதான் பேஸ்புக்கில் கணக்குத் தொடங்கவில்லை என்பார் அம்மா'' என்கிறார் லதா.

பெயிண்டிங், தையல், எம்ப்ராய்டரி எல்லாம் அவருக்குப் பிடித்திருந்தாலும், எதையும் முறையாக அவர் யாரிடமும் இதுவரை கற்றுக் கொண்டதில்லையாம். கற்றுக் கொண்டது எல்லாம் சுயதேடலின் மூலமாகத்தான். யாரைப் பார்த்தாலும் அவருக்குத் தெரியாத எதைப் பற்றியும் கேட்டுத் தெரிந்து கொள்கிறார்.
""காலையில் எழுந்து தேநீர் அருந்திவிட்டு, செய்தித்தாள்களைப் படிப்பார். அதிலும் அவருக்குப் பிடித்தமான பெயிண்டிங், தையல், எம்ப்ராய்டரி தொடர்பான எந்த விஷயம் வந்தாலும் உடனுக்குடன் தெரிந்து கொள்வார். இந்த வயதிலும் அவருடைய கற்றுக் கொள்ளும் ஆர்வம் எங்களை ஆச்சரியப்படுத்துகிறது'' என்கிறார் லதா.

புடவை, துப்பட்டா என்ற எந்தத் துணியாக இருந்தாலும், முதலில் அவுட் லைன் வரைந்து கொள்கிறார் பத்மம் நாயர். பிறகு பொருத்தமான வண்ணங்களால் அவற்றை நிரப்புகிறார். துணிகள், வண்ணங்கள், பிரஷ்கள் எல்லாம் வாங்கிக் கொடுப்பது லதாவின் கணவர். பெயிண்டிங் செய்யப்பட்ட புடவை ஒன்றை ரூ.11 ஆயிரம் வரையும், துப்பட்டாவை ரூ.3 ஆயிரம் வரையும் விற்பனை செய்கிறார் இந்த 100 வயதுப் பாட்டி. கிடைக்கும் பணத்தை பேரக் குழந்தைகள் மற்றும் கொள்ளுப் பேரக் குழந்தைகளுக்குச் செலவழிக்கிறார்.

தன் வேலைகளைத் தானே செய்து கொள்கிறாராம். பாத்ரூமுக்குச் செல்வதற்கும் கூட யார் உதவியும் அவருக்குத் தேவையில்லை. கண் பார்வை தெளிவாக இருக்கிறது. கைகளில் நடுக்கமில்லை.

அவருடைய உடல்நலனுக்கான ரகசியம் என்னவென்று கேட்டால், ""எப்போதும் பிசியாக இருப்பது; ஆர்வமுள்ள விஷயங்களில் மேலும் அறிந்து கொள்ள தொடர்ந்து தேடலில் ஈடுபடுவது; பிறருடைய வாழ்க்கையில் குறுக்கிடாமல் இருப்பது'' என்கிறார் பத்மம் நாயர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com