தாய்ப்பால் தானம் வழங்கும் கொங்கு மகளிர்!

ஒவ்வொரு துளி தாய்ப்பாலும் ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்றும். கண் தானம், ரத்த தானம், உடலுறுப்பு தானம் யார் வேண்டுமானாலும் செய்யலாம்.
தாய்ப்பால் தானம் வழங்கும் கொங்கு மகளிர்!
Published on
Updated on
3 min read


ஒவ்வொரு துளி தாய்ப்பாலும் ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்றும். கண் தானம், ரத்த தானம், உடலுறுப்பு தானம் யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், தாய்ப்பால் தானம் என்பது தாய்ப்பால் அளிக்கும் தாய்மார்களால் மட்டுமே கொடுக்க முடியும். ஒவ்வொரு தாயும் தனது வாழ்வில் ஒருமுறையாவது அந்த பாக்கியத்தைப் பெற்றுவிட வேண்டும் என உணர்ச்சிமிகுதியுடன் கூறுகிறார் அவிநாசி பகுதியைச் சேர்ந்த மென்பொறியாளரான ரூபா செல்வநாயகி. "அமிர்தம் தாய்ப்பால் தானம் குழு'வின் நிறுவனரான இவர் நம்மிடம் மேலும் பகிர்ந்ததாவது:

""எனக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை இருக்கிறாள். பாப்பா பிறந்த பிறகு எனக்கு அதிகப்படியான தாய்ப்பால் சுரப்பு இருந்தது. அப்போதுதான் கோவை அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் வங்கி இருப்பது குறித்து கேள்விப்பட்டேன். அப்போது ஒருமுறை மருத்துவமனைக்குப் போனபோது ஆதரவற்ற குழந்தைகள், குறைப்பிரசவக் குழந்தைகள், எடை குறைவான நிறைய குழந்தைகளுக்குத் தாய்ப்பால் தேவைப்படுவது தெரியவந்தது.    

தாய்ப்பால் வாரத்தின்போதுதான் நான் முதன் முதலில் தாய்ப்பால் தானம் அளித்தேன். அப்போது ஒரு குழந்தைக்கு நேரடியாக தாய்ப்பால் அளிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது எனக்கு அளித்த அந்தக் குழந்தை ரோஸ் நிற ஆடை அணிந்திருந்தது. கையில் பிடிக்க முடியாத அளவுக்கு கை, கால்கள் குச்சி குச்சியாக இருந்தன. முதன்முதலில் வேறொருவரின் பச்சிளம் குழந்தைக்கு, அதுவும் குறைப்பிரசவக் குழந்தைக்கு தாய்ப்பால் அளித்த அந்த நிமிடத்தை என்னால் விவரிக்கவே முடியாது. அவ்வளவு உணர்ச்சிப்பூர்வமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது.       

மருத்துவர்கள் அளிக்கும் சிகிச்சை ஒருபுறம் இருந்தாலும், இந்த மாதிரியான குழந்தைகளுக்கு நாம் அளிக்கும் ஒவ்வொரு துளி தாய்ப்பாலும் அதன் உயிரைக் காப்பாற்றும் ஒரு விஷயமாக மாறும். இந்த ஒரு விஷயம்தான் மீண்டும் மீண்டும் தாய்ப்பாலை சேகரித்து அந்தக் குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தை எனக்கு ஏற்படுத்தியது.   

சில குழந்தைகள் மிகவும் மோசமான சூழ்நிலையில் இருப்பார்கள். அந்தக் குழந்தைகள் அடுத்தநாள் உயிரோடு இருப்பதற்கு காரணமே நீங்கள் சேகரித்து அளித்த தாய்ப்பால்தான் என மருத்துவர்கள் கூறும்போதெல்லாம் மெய்சிலிர்த்துவிடுவேன். தாய்ப்பால் என்பது எவ்வளவு  அழகான விஷயம், அதனால் எவ்வளவு குழந்தைகள் பயனடைகின்றனர் என்பது மருத்துவர்கள் மூலம் தெரியவந்தது.

குழந்தைகள் பிறந்த 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே அளிக்க வேண்டும். தண்ணீர்கூட கொடுக்கத் தேவையில்லை. எல்லா சத்துகளும் தாய்ப்பாலிலேயே உள்ளது. தேன், சர்க்கரை, தண்ணீர் போன்றவை கொடுப்பதால் குழந்தைகளுக்கு எவ்வளவு ஆபத்து ஏற்படுகிறது என்பதெல்லாம் போகப்போகத் தெரியவந்தது.

இந்த நல்ல விஷயத்தை எல்லாரிடமும் பகிரலாம் என நினைத்து என்னுடைய குடும்பத்தினர், தோழிகளிடம் பகிர ஆரம்பித்தேன். பின்னர், கட்செவி அஞ்சலில் குழு ஆரம்பித்து இதுகுறித்து தெரிவிக்க ஆரம்பித்தேன். 

நான் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் தானம் அளித்து வருகிறேன். நீங்களும் கொடுக்க முயற்சி செய்யுங்கள் என அவர்களை ஊக்கப்படுத்தத் தொடங்கினேன். ஆதரவற்ற குழந்தைகள், குறைப்பிரசவக் குழந்தைகள் தாய்ப்பால் கிடைக்காததால் எப்படியான பிரச்னைகளுக்கு உள்ளாகிறார்கள் என்பது குறித்து எல்லோருக்கும் புரியவைக்க ஆரம்பித்தேன். அதுதான் எனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. நாம் சொல்லும்போது எல்லோரும் சரிசரி என்று கேட்டுக் கொள்வார்கள். 

ஆனால், யாரும் முன்வரத் தயாராக அப்போது இருக்கவில்லை. இருந்தும் நான் சோர்வடையவில்லை. நாம் முயற்சி செய்து கொண்டே இருப்போம். யாரோ ஒருவர் தந்தாலும் ஒரு குழந்தையின் ஒரு நேர பசியையாவது தீர்த்துவிடலாம் என்ற எண்ணமே என்னை மேலும் மேலும் இயங்கவைத்துக் கொண்டே இருந்தது.  தோழிகள், தோழிகளின் தோழிகள் என அப்படியே குழுவை விரிவுபடுத்திக் கொண்டே வந்தேன்.

நிறைய தாய்மார்கள் என் குழந்தைக்கே பால் போதவில்லை,  மற்ற குழந்தைகளுக்கு நான் எப்படி கொடுப்பது என்பார்கள். அப்படி எதுவுமே கிடையாது. குழந்தைகளுக்கு அளிக்க அளிக்க தாய்ப்பால் அதிகரித்துக்கொண்டே இருக்கும் என்பதற்கான ஆதாரங்களை அளித்து புரியவைத்த பின்னர் நிறையபேர் தானம் அளிக்க முன்வந்தனர். 

முதலில் தாய்ப்பால் தானம் அளிப்பதற்கு நான் அணுகும்போது சிலர் தானம் கொடுக்க வேண்டும் என ஓரளவுக்கு முன்வந்தாலும் வீட்டு சூழ்நிலைகளால் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. வீட்டிலிருப்பவர்கள் தாய்ப்பாலில் என்ன சக்தி இருக்கிறது. வெறும் தண்ணீர்தான் அதில் இருக்கிறது. அதைக் குடித்தால் குழந்தைக்கு வயிறு நிறையாது. ஃபார்முலா பால், பாக்கெட் பால், மாட்டுப் பால் கொடுங்கள். நாங்கள் உங்களுக்கு மாட்டுப் பால் கொடுத்து நீங்கள் வளர
வில்லையா என கேட்பார்கள். 

முதல் ஓராண்டுக்கு குழந்தைகளுக்கு எந்த ஒரு விலங்குகளின் பாலும் அளிக்கக் கூடாது. பெரியவர்களின் ஜீரணத் திறன் குழந்தைகளுக்கு இருக்காது என புரியவைப்பேன். அதை எல்லாம் தாண்டி சிலர் தானம் அளிக்க முன்வருவார்கள். சிலர் குடும்பத்துக்குத் தெரியாமல்கூட தானம் அளிக்கின்றனர். சில வீடுகளில்தான் இதை எதிர்க்கிறார்கள். பல பெரியவர்கள் தாய்ப்பால் தானத்தை ஊக்குவிக்கவே செய்கிறன்றனர்.

கடந்த இரண்டரை வருடமாக தாய்ப்பால் தானம் செய்து வருகிறோம். 2020-ஆம் ஆண்டு ஆரம்பத்திலிருந்து இப்போதுவரை 365 லிட்டர் தானம் கொடுத்திருக்கிறோம். 

எங்களது குழுவில் கோவை, திருப்பூர், அவிநாசி, ஈரோடு பகுதிகளைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட தாய்மார்கள் இருக்கிறோம். எப்போதும் மாதக் கடைசியில் தாய்ப்பாலை ஒவ்வொருவரின் வீடுகளில் இருந்தும் சேகரிக்க ஆரம்பிப்போம். மாதத் தொடக்கத்தின்போது மருத்துவமனையில் ஒப்படைத்துவிடுவோம். நாங்கள் கொண்டுபோய் பாலைக் கொடுத்தால்தான் அங்குள்ள குழந்தைகளின் வயிறே நிறையும் என்று சொல்லலாம். 

ஏப்ரல் மாதம் முழுவதும் தாய்ப்பாலை சேகரிக்க முடியவில்லை. ஆனால், கோவை அரசு மருத்துவமனையில் தாய்ப்பாலின் தேவை அதிக அளவில் இருந்தது. நிறைய பேரை வீடுகளுக்கு அனுப்ப முடியவில்லை. 

அப்போது, அரசு மருத்துவமனை மருத்துவர் செந்தில்குமார் திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று தாய்ப்பாலை சேகரித்து மருத்துவமனைக்கு அளித்தார்.  கடந்த ஜூலை மாதம் மட்டும் 82 தாய்மார்கள் தாய்ப்பால் தானம் அளித்துள்ளனர். 

தாய்ப்பால் அளிக்கும் ஒவ்வொரு தாய்மார்களும் தாய்ப்பால் அளிக்கும் காலத்தில் கண்டிப்பாக ஒருமுறையாவது தாய்ப்பால் தானம் அளிக்க முன்வர வேண்டும்.  இதுதான் எங்களின் ஆசை. அதற்கான பணியைத் தொடர்ந்து அயராது செய்து வருவோம்'' என்று நம்பிக்கையுடன் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com