சங்குப் பூவின் மகத்துவம்! - நாச்சாள்

உடல் பருமன், நீரிழிவு, சோர்வு, மறதி, ரத்த ஓட்ட குறைபாடு, மன உளைச்சல், மன அழுத்தம், படபடப்பு, தூக்கமின்மை, கருப்பை கோளாறுகள், மலச்சிக்கல், கண்பார்வை கோளாறு, இளநரை, முகப்பொலிவின்மை,
சங்குப் பூவின் மகத்துவம்! - நாச்சாள்
Updated on
3 min read

உடல் பருமன், நீரிழிவு, சோர்வு, மறதி, ரத்த ஓட்ட குறைபாடு, மன உளைச்சல், மன அழுத்தம், படபடப்பு, தூக்கமின்மை, கருப்பை கோளாறுகள், மலச்சிக்கல், கண்பார்வை கோளாறு, இளநரை, முகப்பொலிவின்மை, அறிவாற்றல் குறைபாடு, நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடு போன்ற தொந்தரவுகளில் சிக்கியுள்ளீர்களா? இதோ உங்களுக்கான நமது பாரம்பரிய உணவு.. சங்கு புஷ்பம்.
Clitoria ternatea L.., சங்கு பூ, சங்கு புஷ்பம், கருவிளை, காக்கரட்டான், காக்கணம், மாமூலி, கன்னிக் கொடி, சங்கங்குப்பி, சங்க புஷ்பி என பல பெயர்களால் அழைக்கப்படுகிறது இந்த கொடி வகை செடி. இவற்றின் பூ, இலை, வேர், விதை என அனைத்துமே மருத்துவகுணங்கள் நிறைந்தது. 
வெள்ளை நிற பூக்கள் கொண்ட சங்குப்பூ செடிகள் வேரை கொண்டு கஷாயமாக உட்கொள்ள வெட்டை, தலை நோய், சுரம், பேதி, புண்கள் ஆகியவற்றை போக்கலாம்.
ஊதாநிற பூக்கள் உள்ள சங்குப்பூ வேர்களைக் கொண்டு கிருமிகளால் ஏற்படும் தொற்றுநோய், மூட்டு வலி முடக்குவாதம், தலை பாரம், மலச்சிக்கல் ஆகியவற்றை போக்கலாம்.
மருத்துவகுணங்கள் கொண்ட இவற்றின் விதைகள் நல்ல மணமுடையதாகவும், புளிப்பு சுவையையும் கொண்டவை. விதைகளுக்கு சிறுநீரை பெருக்கும் ஆற்றல் உண்டு. மேலும் குடலில் உள்ள பூச்சிகளையும் போக்கும். இலைகள் துவர்ப்பு சுவையை அளிக்கிறது.
ஆங்கிலத்தில் இந்த சங்குப்பூ மலர்களை Butterfly Blue Pea என்று அழைக்கின்றனர். இந்த மலர்கள் பெண்களுக்கு ஏற்படும் கருப்பை கோளாறுகள், குழந்தையின்மை தொந்தரவுகள், மலட்டு தன்மை, மாதவிடாய் கோளாறுகள், சிறுநீர் தொற்றுகள் ஆகியவற்றிற்கு சிறந்த மருந்தாகவும் உள்ளது. பால்வினை, வெள்ளைப்படுதல் பிரச்னைகளுக்கும் மருந்தாகிறது. ஒற்றை தலைவலிக்கும் இது மருந்தாக பயன்படுகிறது.
படபடப்பு, ரத்தக்கொதிப்பை கட்டுக்குள் வைக்க உதவும் இந்த சங்குப் பூக்கள் புற்றுநோய்க்கு மருந்தாகிறது.
உடலில் உள்ள கொழுப்புகளை கரைக்க கூடிய இவை இதயத்திற்கு பலத்தை அளிப்பதோடு, ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பைக் குணமாக்கும். சமீபத்திய ஆய்வுகள் மாவுச்சத்து உணவுகளை ஜீரணிக்க இந்த சங்குப் பூக்கள் உதவுகிறது என வெளியிட்டுள்ளது. 
பொலிவான முகமும், கருகருவென்று கூந்தலும் பெற வேண்டுமானால் அதற்கும் உதவுகிறது சங்குப் பூக்கள். அதுமட்டுமல்ல என்றுமே இளமையாக உற்சாகமாகவும் இருக்க சங்குப்பூக்கள் உணவுகள் உதவுகிறது.
உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் அபார சத்துக்கள் இந்த சங்குப்பூக்களில் உள்ளது. இன்சுலின் சுரப்பையும் சீராக வைக்க உதவுகிறது.
மன அழுத்தம், மன உளைச்சல், சோர்வு ஆகியவற்றை போக்கும் மாமருந்தாக பூக்கள் உள்ளது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் மன ரீதியான பதிப்புகளில் இருந்து நம்மை காக்கிறது.
உடலில் ஏற்படும் நெறி கட்டிகள், மூட்டுவலிக்கு, வாத நோய் வீக்கங்களை சங்கு பூ இலை போக்கும் தன்மை கொண்டது. 
மலச்சிக்கல், மூலம் உள்ளவர்கள் தொடர்ந்து சங்குப்பூக்களை பயன்படுத்த சிறந்த நிவாரணம் பெறலாம். விளக் கெண்ணெய்யுடன் சங்குப் பூ இலைகளை அரைத்து விழுதை காய்ச்சி தைலமாக தயாரித்துக் கொண்டு மூலத்திற்கு மேல்பூச்சாகவும் பயன்படுத்தலாம். 
குழந்தைகளுக்கு பிடித்த உணவுகளில் சங்குப்பூக்களை அவ்வப்பொழுது சேர்ப்பதால் குழந்தைகளுக்கு நல்ல நினைவாற்றலும், அறிவாற்றலும் அதிகரிக்கும். அதிலும் தேர்வு நேரங்களில் குழந்தைகளுக்கு ஏற்படும் சோர்வினையும் போக்கும் சிறந்த Memory Plus மருந்து. அதே சமயம், குழந்தைகளுக்கு மாதம் இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே இந்த சங்குப்பூக்களில் தயாரிக்கப்படும் உணவுகளை அளிப்பது போதுமானது. 
சுவாச சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல நிவாரணத்தை சங்குப்பூக்களின் தேநீர் அளிக்கும். இதனை வீட்டில் வளர்க்க சுவாச ரீதியான தொந்தரவுகள், மன ரீதியான தொந்தரவுகள் அகலும். இலைகளை விளக்கெண்ணெய்யில் வதக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் கட்ட வீக்கம் கட்டுப்படும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் இருமலுக்கு சங்குப்பூ, இலை கஷாயம் சிறந்த நிவாரணம் அளிக்கும்.
அதிகமாக சங்கு பூக்கள் கிடைக்கும் காலங்களில் அவற்றை நிழலில் உலர்த்தி காயவைத்து எடுத்துவைத்துக் கொள்ளலாம். தேவைக்கேற்ப நீரிழிவு, இருதய தொந்தரவுகள் உள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
யானைக்கால் நோய்க்கு சிறந்த மருந்தாக உள்ளது இந்த சங்குப் பூ செடிகள். சங்குப்பூ செடியின் மூலம் அதாவது பூ, இலை, வேர், கொடி, விதை ஆகியவற்றை அரைத்து பூசிவர யானைக்கால் வீக்கம் குறையும், அதனுடன் இதன் தேநீரை அருந்த விரைவில் நல்ல பலனை அடையலாம். சங்குப் பூ செடியின் இலைகளை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி காலில் கட்டி வைத்தால் யானைக்கால் நோயினால் ஏற்படும் வீக்கம் குறையும்.
தேநீர் தயாரிக்க : சங்குப் பூ செடியின், பூ, இலை ஆகியவற்றை தண்ணீரில் போட்டு காய்ச்சி, அதனுடன் இஞ்சி சாறு சேர்த்து பருகலாம். இதில் சுவைக்காக பனை வெல்லம், பனங்கற்கண்டு சேர்த்துக்கொள்ளலாம்.
சங்குப்பூக்களின் வேர்கள் குடல், வயிறு ஆகியவற்றில் உள்ள பூச்சிகளை அழிக்கவல்லது. வேர்களை கஷாயமாக வைத்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அருந்த பூச்சிகள் வெளியேறும்.
நெய்யில் வறுத்த விதைகளை தேநீராக வைத்து குழந்தைகளுக்கு கொடுக்க இரப்பை நோய் குணமாகும்.
வெள்ளைப்படுதல் உள்ளவர்கள் இதன் இலைகளை நீரில் காய்ச்சி அதனைக்கொண்டு உள்ளுறுப்புகளை நாளொன்றிற்கு இரண்டு முறை கழுவ விரைவில் சரியாகும். 
நீண்ட நாட்களாக இருக்கும் கபநோய்கள், சிறுநீர் பாதையில் வரும் நோய்களுக்கு இந்த சங்குப் பூ செடியின் பட்டையை நன்கு இடித்து சாறு எடுத்துக்கொண்டு அதனுடன் பால் சேர்த்து அருந்த விரைவில் நிவாரணம் பெறலாம். 
கருவுற்றிருக்கும் பெண்களை தவிர குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த சங்குப் பூ தேநீரை அவ்வப்பொழுது பருகலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com