தாய்ப்பால் குறைவா? காலடியில் கிடக்குது பாலாடை...

நமது நாட்டில் இன்னமும் வளங்கள் குறையாமல் கொட்டிக்கிடக்கிறது.. அவற்றை பாதுகாக்கத்தான் நமக்கு தெரியவில்லை என்று சொன்னால் மறுக்க இயலாது.
தாய்ப்பால் குறைவா? காலடியில் கிடக்குது பாலாடை...
Updated on
2 min read

நமது நாட்டில் இன்னமும் வளங்கள் குறையாமல் கொட்டிக்கிடக்கிறது.. அவற்றை பாதுகாக்கத்தான் நமக்கு தெரியவில்லை என்று சொன்னால் மறுக்க இயலாது. எதை பாதுகாப்பது? பாதுகாப்பதற்கு நமது வளங்களையும் அவற்றை பற்றியும் நமக்கு தெரிந்திருந்தால் தானே பாதுகாப்பது.. அதிலும் அதன் பயன்கள், அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பது நமக்கு தெரிந்திருந்தால் மட்டுமே பாதுகாப்போம். அவற்றை தெரிந்து கொள்வோம் மேலும் அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்றும் தெரிந்து கொள்வோம். அந்த வகையில் இன்று நாம் பார்க்கப் போவது ஒரு மூலிகையைப் பற்றி..
 இன்று பிரசவித்த பெண்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்னை குழந்தைக்கு பால் போதவில்லை என்பது தான். பால் பற்றாக்குறையைப் போக்க சித்திரப் பாலாடை என்ற மூலிகையே போதும்.. அது என்ன சித்திரப் பாலாடை என்கிறீர்களா.. அது வேறொன்றுமில்லை அம்மான் பச்சரிசி கீரை தான். சித்திரப் பாலாடை என ஒரு பெயரையும் கொண்டிருக்கும் அம்மான் பச்சரிசி கீரை.
 இது ஒரு கீரை வகையை சேர்ந்தது. இதன் இலைகள், பூக்கள், வேர், விதை என அனைத்து பாகமும் மருத்துவகுணம் கொண்டது. துவர்ப்பு கலந்த இனிப்பு சுவை கொண்ட இந்த கீரை குளிர்ச்சித் தன்மை கொண்டது. இந்த கீரையை எங்கு கிள்ளினாலும் பால் வடியும். சாதாரணமாக எல்லா இடங்களிலும் வளரக்கூடியது இந்த சிறு செடி. சொரசொரப்பான எதிர் அடுக்கு கொண்ட இலைகளைக் கொண்ட கீரையிது.
 சிறு பூண்டு இனத்தைச் சேர்ந்த இது வெண்ணிறமும் செந்நிறமும் சேர்ந்து காணப்படும் மூலிகை. சிறு அம்மான் பச்சரிசி, பெரு அம்மான் பச்சரிசி என இரு வகைகளும் உண்டு. இதன் விதைகள் தோற்றத்திலும், சுவையிலும் அரிசி குருணை போலிருப்பதால் பச்சரிசி கீரை என்றும் அம்மான் பச்சரிசி என்றும் அழைக்கப்படுகிறது.
 இன்று பெருமளவில் இதனை கீரையாக பயன்படுத்தும் பழக்கம் குறைந்துவிட்டது. எந்த ரசாயனமும் இன்றி தானாக வளரும் இந்த கீரையை பயன்படுவதால் கிடைக்கும் நன்மைகள் அதிகம்.
 பிரசவித்த பெண்களுக்கு கொடுக்கப்படும் ஒரே கீரை இதுதான். காரணம் தாய்ப்பால் சுரப்பை அதிகரிப்பதோடு, எந்த தொற்று கிருமிகளையும் அண்ட விடாது என்பதற்காக.
 இதன் பூக்களை மைய அரைத்து அல்லது பூக்களை நேரடியாக பசும் பாலுடன் சேர்த்து காய்ச்சி பருக தாய்ப்பால் நன்கு சுரக்கும். இதனை காலை மாலை என இரண்டு வேளை அருந்த வேண்டும். மேலும் பனங்கற்கண்டு சேர்த்து அருந்துவதால் உடலுக்கு நல்ல பலமும் தெம்பும் கிடைக்கும்.
 குழந்தைகளுக்கும் கொடுக்க உடலின் நோய் எதிர்ப்புத் திறன் அதிகரிக்கும். இதன் இலைகளை நீரில் கலந்து சிறுதீயில் கொதிக்கவைத்து அதனை அருந்த, கொடிய தொற்றுநோய்களும் விலகும்.
 அதுபோன்று முகத்தில் ஏற்படும் பரு, புண், மரு, கட்டிகள் போன்றவற்றிற்கு இதன் பாலை தொடர்ந்து பூச மருக்கள் உதிர்ந்துவிடும். மேலும் முகத்தில் தோன்றும் அனைத்து சரும தொந்தரவுகளுக்கும் இந்தபால் உதவும். கரும் திட்டுகள், கட்டிகளுக்கும் இதனை பூசலாம்.
 இந்த அம்மான் பச்சரிசி இலைகளை மைய அரைத்து மோருடன் கலந்து கொடுக்க பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் தொந்தரவுகள், வெள்ளைப்படுதல் நீங்கும்.

ஆண், பெண்களுக்கு முகத்தில் ஏற்படும் எண்ணெய்ப் பிசுக்கையும் நீக்கும். இதன் பால் காலில் ஏற்படும் கால் ஆணி, பாத பித்த வெடிப்பு நீக்கும். உதட்டில் ஏற்படும் வெடிப்புகள், நிறமாற்றத்திற்கும் இதனை பயன்படுத்த சிறந்த நிவாரணம் கிடைக்கும். வாய்ப்புண்கள் மறையும்.
 இதனை கூட்டு, துவையல், பொரியல் செய்து உண்பதால் உடலில் ஏற்படும் புண்கள், மலச்சிக்கல், நரம்பு வீக்கம், நாவறட்சி, உடல் வறட்சி நீங்கும்.
 உடலில் ஏற்படும் வீக்கங்களையும், வலிகளையும் இந்த கீரை குறைக்க உதவுகிறது.
 காசநோயினை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. குடல் சார்ந்த தொந்தரவுகள், ஆஸ்துமாவிற்கு சிறந்த மருந்து. சிறுநீர் கடுப்பு, எரிச்சலை போக்கும் தன்மை கொண்டது.
 அம்மான் பச்சரிசி துவையல் மலச்சிக்கலை போக்கும். ஒரு கையளவு அம்மான் பச்சரிசி இலைகள், கருப்பு உளுந்து, பூண்டு, சின்ன வெங்காயம் சிறிது மிளகு, புளிப்பிற்கு ஒரு தக்காளி ஆகியவற்றை நெய்யில் வதக்கி அரைக்க சுவையான அம்மான் பச்சரிசி துவையல் தயார்.
 இதனை பாசிப்பருப்பு, சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து கூட்டாகவும் செய்ய சுவையாக இருக்கும். இதனுடன் தூதுவளை இலைகளையும் சேர்த்து துவையல் செய்து உண்ண உடல் பலம் பெரும்.
 பிறந்த குழந்தையை தாய்ப்பால் கொடுத்து தேற்றும் இந்த அம்மான் பச்சரிசி அனைவரின் உடல் ஆரோக்கியத்திற்கும் உத்தரவாதமாக உள்ளது. இனி பயன்படுத்துவோம், பாதுகாப்போம் நமது காலடியில் இருக்கும் பொக்கிஷங்களை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com