பசி: உடல் மாற்றமும், உணவு முறையும்!

ஆரோக்கியமாக இருக்கும் ஒரு மனிதனுக்கு ஏற்படும் பசி, ஹார்மோன்கள் மற்றும்  நரம்புத் தூண்டல்கள் வழியாக, சரியான நேரத்தில் கொடுக்கப்பட்டு, உணவு உண்டபின்பு நிறைவடைகிறது.
பசி: உடல் மாற்றமும், உணவு முறையும்!
Published on
Updated on
4 min read


ஆரோக்கியமாக இருக்கும் ஒரு மனிதனுக்கு ஏற்படும் பசி, ஹார்மோன்கள் மற்றும்  நரம்புத் தூண்டல்கள் வழியாக, சரியான நேரத்தில் கொடுக்கப்பட்டு, உணவு உண்டபின்பு நிறைவடைகிறது. இதில் வேறெந்த விதமான செயற்கைத் தூண்டுதல்களோ அல்லது, பசி நேரத்தில் மாறுதல்களோ அல்லது பசி உணர்வு நிறைவடையாத நிலையும், பசியே இல்லாத நிலையும் ஏற்படுவது கிடையாது. பசிக்கும் செரிமானத்திற்கும் உள்ள ஹார்மோன்கள் மற்றும் நொதிகளில் ஏற்ற இறக்கமும் இருப்பதில்லை. ஆனால், ஆரோக்கியக் குறைபாடு உள்ளவர்கள், ஒன்று அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட நோயுள்ளவர்கள், குறுகிய கால நோய் அல்லது நீடித்த நோய்க்கு மருந்து எடுத்துக்கொள்பவர்கள் இந்த பசியில் பல்வேறு வேறுபாட்டை உணர்வார்கள். ஒரே நோய் கூட, ஒவ்வொரு நோயாளியின் உடலின் தன்மைக்கேற்பவும், எடுத்துக்கொள்ளும் மருந்துகளுக்கு ஏற்பவும்   பசியின் அளவையும், நேரத்தையும், உணர்வையும் மாற்றிவிடும். 

உடலின் அமிலத்தன்மையை அல்லது இரைப்பையின் அமிலத்தன்மையை குறைக்கும் மருந்துகளை நீண்ட நாட்களுக்குத் தொடர்ச்சியாக எடுத்துக் கொள்பவர்கள், நீடித்த மன அழுத்தத்திற்கு உள்ளானவர்கள், Helicobactor pylori என்னும் வயிற்றுப்புண்ணை ஏற்படுத்தும் கிருமித் தொற்று உள்ளவர்கள், தொடர்ச்சியாக மது அருந்துபவர்கள், பல்வேறு நோய்களுக்கு ஆன்ட்டிபயாடிக்ஸ் மருந்துகளை தொடர்ச்சியாக உட்கொள்பவர்கள், வளரிளம்பருவ வயதில் ஏற்படும் உணவு சார்ந்த உளவியல் நோய்களுக்கு உள்ளானவர்கள், நீடித்த ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் போன்றோருக்கு, இரைப்பையில் சுரக்கும் செரித்தலுக்கு உதவும் அமிலத்தின் அளவு குறைந்துவிடுகிறது. இதனால், பசியின் அளவும் குறைந்து, செரிமான சிக்கல்களும் ஏற்படுகின்றன. கூடுதலாக, ஊட்டச்சத்து குறைபாடுகள் மற்றும் செரிமான மண்டலம் தொடர்பான நோய்களும் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. 

வயிற்றுப்புண் உள்ளவர்களுக்கு,  வயிற்றில் அமிலத்தன்மை அதிகரித்தல், ஏற்படும் நெஞ்செரிச்சல், நெஞ்சுப்பகுதியில், விலா எலும்பிற்குக் கீழே ஏற்படும் வலியுடன் பிசைந்தெடுப்பது போன்ற ஒரு உணர்வு, குத்துவது போன்ற வலி ஆகியவை பசி வரும்போது ஏற்படுவது போலவே இருப்பதால், பசியையும், இந்த வலியையும் பிரித்தறியத் தெரியாமல் குழப்பமடைந்துவிடுவதுண்டு. அமிலத்தன்மை அதிகரிப்பது என்பதைவிட, எப்போதும் சுரக்கும் அமிலம் சரியான முறையில், அடுத்த வேதிவினைகளுக்கும், உணவு செரித்தல் நகர்வுகளுக்கும் பயன்படுத்திக்கொள்ளப் படுவதில்லை என்பதே உண்மை. சிலருக்கு குமட்டலும், வாந்தியும் கூட சேர்ந்து கொள்ளும்.  போதுமான அளவு உணவு உண்டபின்னர், இந்த வலி உணர்வுகள் சற்றே குறைந்து ஒரு நிம்மதியான நிலையை அடைகின்றனர். இதுபோன்ற நிலைகளில், மருந்துகள் மட்டுமே துணை என்று அடிமைப்பட்டுக்கிடக்காமல், உணவிலும் சிறுசிறு மாறுதல்களைக் கடைப்பிடித்தால்,  இரைப்பை சுரப்புகளையும், பசியையும்  சமநிலைப்படுத்தி, நோயிலிருந்து விடுபடலாம். 

இதற்கு வாழைப்பழம், தேன், துளசி நீர், மோர் போன்றவை பெரிதும் உதவி செய்கின்றன.  வயிற்றுப்புண் உள்ளவர்கள், பசி அதிகரித்து வலி ஏற்படும்போது, அல்லது அதற்கு முன்பாகவே ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழங்களை உண்பதால், அமிலத்தன்மை ஓரளவு சரிசெய்யப்படுகிறது. 

பாக்டீரியா அல்லது வைரஸ் நுண்கிருமிகளின் தொற்று காரணமாக ஏற்படும் நோய்களான சுவாச மண்டல உறுப்புகளில் தொற்று, நுரையீரல் அழற்சி, நிமோனியா, கல்லீரல் அழற்சி, பித்தப்பை அழற்சி,  இரைப்பை குடல் அழற்சி, பெருங்குடல் புண், தோல் வியாதிகள், மூளைக்காய்ச்சல் போன்றவைகள் இருப்பின், பசியெடுக்கும் உணர்வு குறைந்து காணப்படும். எனினும், குறுகியகால காய்ச்சலுடன் கூடிய இந்நோய்கள், சரியான மருந்துகளுடன், மருத்துவர் மற்றும் உணவியல் வல்லுநர்கள் பரிந்துரைக்கப்படும் உணவுகளையும் பின்பற்றினால், நோயின் தீவிரம் குறைந்து, பசியெடுத்தலும் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும்.  அதுவே, உடலின் மிக முக்கிய உள்ளுறுப்புகளில் நோய் ஏற்பட்டு, அதற்கான சிகிச்சைகளை எடுத்துக்கொள்பவர்களுக்கு, நீண்ட நாட்களுக்கு மிகக் குறைவான பசியெடுக்கும் நிலையே காணப்படும். இதற்கு எடுத்துக்காட்டாக, நாட்பட்ட கல்லீரல் நோய்கள், சிறுநீரக நோய்கள், இதயம் தொடர்பான நோய்கள், ஹெபடைட்டிஸ், எய்ட்ஸ், முதுமை நோய்கள், தைராய்டு குறைபாடு நோய்கள் போன்றவற்றைக் கூறலாம். இந்நோய் நிலைகளில், மிதமான உடற்பயிற்சி, முறையான உணவு நேரத்தைக் கடைப்பிடித்தல், உடலின் தன்மைக்கும், நோய்க்கும் ஏற்றவகையில் உணவுகளைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்துதல் போன்றவை பசி நிலையை சமன் செய்து, ஊட்டச்சத்து உடலில் சேர்வதற்குத் துணைபுரியும். 

நீடித்த தீவிர நோய்கள் என்னும் வகைப்பாட்டில், புற்றுநோய்கள், அதிலும் இறுதிநிலையில் இருக்கும் குடல், இரைப்பை, சினைப்பை மற்றும் கணைய புற்றுநோய் போன்றவை உள்ளவர்களுக்கு பசியற்ற அல்லது பசி குறைந்த நிலையே காணப்படும். மேலும், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் கீமோதெரபி மருந்துகளும், ஆன்ட்டிபயாடிக் மருந்துகளும் இந்நிலையை மேலும் அதிகப்படுத்திவிடுகின்றன.  இதனாலேயே, பசியை ஓரளவிற்குத் தூண்டும் அல்லது, செரித்தல் நிகழ்வினை மெதுவாக ஏற்படுத்தத் துணைபுரியும் மருந்துகள் மருத்துவர்களால்  பரிந்துரைக்கப்படுகின்றன. இதுபோன்ற நீடித்த நோயுள்ளவர்கள், பசியைத் தூண்டி, உணவைச் செரிக்க வைக்கும் பொருட்களான இஞ்சி, புதினா, சீரகம், சோம்பு, கொத்துமல்லி, எலுமிச்சை போன்றவற்றை சிறிதளவு நீருடன் கலந்து குடிப்பது,  உணவை சிறிது சிறிதாக உண்பது, பிடித்த உணவை ரசித்து உண்பது, உணவு உண்ணும் சூழலை மகிழ்ச்சியுடன் அமைத்துக்கொள்வது, தங்களுடன் மிகவும் நெருக்கமானவர்கள் மற்றும்  பிடித்தவர்கள் என்று நலனில் அக்கறையுள்ளவர்களை அருகில் வைத்துக்கொண்டு உணவை எடுத்துக்கொள்வது போன்ற உளவியல்ரீதியான அணுகுமுறைகளைக் கையாளுவதால், மனமும் இலகுவாகி, உணவும் உட்சென்று உடல் நலனில் முன்னேற்றம் ஏற்படுவதற்கு வழிவகுக்கும். 

உடலில் ஏற்படும் நோய் அல்லது வயதிற்கேற்ற மாற்றங்கள், பசியைக் குறைப்பதுபோல், பசியை அதிகரிக்கும் சில உடல்நிலை மாற்றங்களும், நோய்களும் இருக்கின்றன. எவ்விதமான உடல்நலக் குறைபாடும் இல்லாத ஒரு மனிதன், அன்றாடம் உடற்பயிற்சி தவறாது செய்யும் நிலையிலும், ஏதோ ஒரு வேளை மட்டும் மிகக் கடுமையான உடலுழைப்பைக் கொடுக்கும் நிலையிலும் பசியின் அளவு அதிகரிக்கிறது. இதற்குக் காரணம், உடலுக்குத் தேவையான ஆற்றல் அதிகரிப்பதை, பசியைத் தூண்டும் செரிமான மண்டல ஹார்மோன்களின் வாயிலாகத்  தெரியப்படுத்தி, அதற்கேற்றவாறு உணவையும் அதிகப்படுத்தி எடுத்துக் கொண்டால்தான், உடலின் வளர்சிதை மாற்றங்களும், உடல் எடை மற்றும் உள்ளுறுப்புகளின் செயல்பாடுகளும் சீரான அளவில் இருக்கும் என்பதே. பசி அதிகமாகக் காணப்படும் வேறொரு முக்கிய நிலை, மனநலம் பாதிக்கப்பட்டிருக்கும் நிலை. மனநோயாளிகளின் நரம்புத்தூண்டல்கள் மாறுபட்டு சிதைவடைந்த நிலையில், பசியின் கட்டுப்பாடும் மாறுபட்டிருக்கும். 

எப்போது பசிக்கிறது, எவ்வளவு உணவு உண்ணவேண்டும் என்று எந்த ஒரு வரைமுறையும் இல்லாமல் உணவின் தன்மை, சுவை, நிறம் என்று எவற்றையும் கண்டுகொள்ளாமல் உண்பார்கள். பசி  அடங்கியதும் தெரியாது. உணவின் அளவும் தெரியாது. சில மனநோயாளிகளுக்கு, இந்நிலைக்கு எதிரான நிலையும் உண்டு என்றாலும், பெரும்பாலும் மெலிந்த உடல்வாகையும், ஊட்டச்சத்து குறைபாட்டையுமே பெற்றிருப்பார்கள். 

இவர்களுக்கு, முறையான மருத்துவ சிகிச்சையுடன் கூடிய கலந்தாலோசனைகள் மற்றும் ஊட்டச்சத்தினை கூட்டும் சிறப்பு உணவுகளைக் கொடுக்கும் நிலையில் ஓரளவிற்கு முன்னேற்றம் காணலாம். 

இது தவிர, நீரிழிவு மற்றும் தைராய்டு குறைபாடு நிலைகளிலும், அதிகமான பசி ஏற்படுவதுண்டு. தைராய்டு குறைபாடு நிலை, உடலுக்குத் தேவையான அடிப்படை ஆற்றலின் அளவைக் குறைத்து, ஆற்றலைச் சேமித்து, உடல் எடை கூடுவதற்கு வழிவகுத்துவிடுகிறது. ஆனால்,  தைராய்டு மிகை சுரப்பு நிலை , உடலிலிருந்து செலவிடப்படும் ஆற்றலின் அளவை அதிகரித்து, உடலின் எடை குறைவதற்கு வாய்ப்பளித்துவிடுகிறது. இதனாலேயே, தைராய்டு மிகை சுரப்பு நிலை உள்ளவர்களுக்கு அதிக பசி எடுத்துக் கொண்டே இருந்து, அவர்களும் உணவை சாப்பிட்டுக் கொண்டே இருந்தாலும், மெலிந்த உடல்வாகையே பெற்றிருப்பார்கள். இந்த இரு நிலையையும் சரிசெய்வதற்கு, தைராய்டு மாத்திரைகளை மருத்துவர்களின் பரிந்துரையின்பேரில் எடுத்துக்கொண்டே, தைராய்டு சுரப்பியைத் தூண்டி செயல்புரிய வைக்கும் சில யோகாசனங்களைத் தொடர்ச்சியாக செய்வதால் பலனடையலாம். 

மேலும், தைராய்டு சுரப்பிக்கு ஒவ்வாது என்று கருதப்படுகிற முட்டைகோசு, பச்சை பட்டாணி, ப்ரொக்கோலி, காலிஃபிளவர், சோயா போன்ற உணவுப்பொருட்களையும் தவிர்க்கலாம். அன்றாட உணவில் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்களை வழங்கும் பழங்கள் மற்றும் பச்சை காய்களை தவறாமல் சேர்த்து வந்தால், ஹார்மோன்களின் செயல்பாடுகள் சீரடைந்து, பசியின் அளவும் சமநிலையடைந்து, விரைவாகவே நலம் காணலாம். 

கர்ப்ப காலத்திலும், பாலூட்டும் காலத்திலும் பொதுவாகவே, பெண்களுக்குப் பசியின் அளவு அதிகரித்திருக்கும். தாயுடன் சேர்ந்து வயிற்றிலிருக்கும் குழந்தைக்கும் ஊட்டம் தேவை என்பதாலேயே, இயற்கையான உடலியங்கியல் நிகழ்வாக ஹார்மோன்கள் மூலம் பசி தூண்டப்பட்டு, உணவின் அளவும் அதிகரிக்கப்படுகிறது. ஆரம்ப காலத்தில், குமட்டல் மற்றும் வாந்தி இருப்பதால் பசி குறைந்து, உணவின் அளவும் குறைந்து ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் ஏற்பட்டுவிடும். இந்நிலை மாறி, பசி தூண்டப்பட்டு, 
சரிவிகித உணவை எடுத்துக்கொள்ள வேண்டுமெனில், சீரகம் சேர்த்த நீரை அருந்துவதால்  சிறப்பான பலனை அடையலாம்.   இதற்கு அடுத்தபடியாக இஞ்சியும் புதினாவும்,  நேரடியாக செரிமான மண்டலத்தில் செயல்புரிந்து பசியைத் தூண்டி, உணவின் அளவை சரிசெய்கின்றன. கர்ப்பிணிப் பெண்களுடன், பாலூட்டும் தாய்மார்களும், கிராம்பு நீர், பூண்டு, பெருங்காயம் போன்ற உணவுப்பொருட்களை தொடர்ச்சியாக உணவில் சேர்த்துக் கொள்வதால், சரியான அளவில் பசி ஏற்பட்டு, உடலுக்குத் தேவையான உணவும் ஊட்டச்சத்துகளும் கிடைக்கும் என்பதை உறுதியாக நம்பவேண்டும்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com