12 நிமிடங்கள்: 151 ஆசனங்கள்!

பாண்டிச்சேரி ரெயின்போ நகரில் வசித்து வரும் வி.வெங்கடேசன்,க.சசிகலா தம்பதியரின் மகள் அபூர்வ விந்தனா(5) தனியார் பள்ளி ஒன்றில் முதலாம் வகுப்பு படித்து வருகிறார்.
12 நிமிடங்கள்: 151 ஆசனங்கள்!

பாண்டிச்சேரி ரெயின்போ நகரில் வசித்து வரும் வி.வெங்கடேசன், க.சசிகலா தம்பதியரின் மகள் அபூர்வ விந்தனா(5) தனியார் பள்ளி ஒன்றில் முதலாம் வகுப்பு படித்து வருகிறார். பெற்றோர் தினசரி யோகாசனம் செய்வதைப் பார்த்து இவருக்கும் யோகாசனம் பழகலாம் என்ற ஆர்வம் வந்திருக்கறது. இரண்டு வயதில் 20 யோகாசனங்களும், நான்காவது வயதில் 52 ஆசனங்களையும் கற்றுத் தேர்ச்சியடைந்துள்ளார். 

இவர் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட முதல் நாளே தனது தாயார் சசிகலாவுடன் காஞ்சிபுரம் பங்காரு ஏசப்பன் தெருவில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு வந்திருக்கிறார். பள்ளிகள் திறக்கப்படாமல் வீட்டில் இருந்ததால் பாட்டி வீட்டிலிருந்த பெரியம்மாவும்,யோகா மாஸ்டருமான ரஞ்சனா ரிஷி, அபூர்வ விந்தனாவுக்கு மேலும் பல யோகாசனங்களை கற்றுக் கொடுத்திருக்கிறார்.

யோகாமாஸ்டர் ரஞ்சனா ரிஷி இருமுறை யோகாவில் கின்னஸ் சாதனை புரிந்தவர். கின்னஸ் சாதனை செய்யும் இடங்களுக்கு அபூர்வ விந்தனாவும் சென்று அதைப் பார்த்திருக்கிறார். பலரும் கைதட்டிப் பாராட்டிய போது நானும் இதே போல கைதட்டல்களும், பாராட்டுகளும் பெற என்ன செய்ய வேண்டும் என்று அவரிடமே கேட்டிருக்கிறார். யோகாவில் தேசிய சாதனை, உலகசாதனைகள் நிகழ்த்தலாம் என்றும் கூறியவுடன் அன்றைய தினத்திலிருந்தே யோகாசனங்களை கற்றுக்கொள்வதில் அதீத ஆர்வம் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. 

இதன் விளைவாக கடந்த ஜூன் மாதம் 21-ஆம் தேதி சர்வதேச யோகா தினத்தன்று காஞ்சிபுரத்திலேயே தேசிய சாதனைக்கான முயற்சிகளில் இறங்கினார். 15 நிமிடங்களில் 150 யோகாசனங்கள் செய்து தேசிய சாதனை நிகழ்த்துவது என முடிவு செய்தார். ஆனால் 12 நிமிடங்களில் 151 யோகாசனங்களை செய்து சாதனை புரிந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் இருவர் நடுவர்களாக இருந்தனர். இச்சிறுமி யோகாசனம் செய்யும் சாதனை நிகழ்வை காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி.பா.சாமுண்டீஸ்வரி நேரில் பார்வையிட்டு பாராட்டியதோடு மகாயோகம் அமைப்பு வழங்கிய பாராட்டுச் சான்றிதையும் வழங்கினார்.

சிறுமி அபூர்வ விந்தனாவிடம் பேசினோம்...

""எனது பெரியம்மா கின்னஸ் சாதனை செய்யும் போது நானும் போயிருந்தேன். பலரும் கைதட்டிப் பாராட்டிய போது என்னையும் பலரும் கைதட்டிப் பாராட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டேன். கரோனாவுக்காக பள்ளிகள் விடுமுறை விடப்பட்டிருந்ததால் ஓய்வு நேரமும் இருந்தது. அந்த ஓய்வு நேரத்தில் இரண்டே மாதத்தில் 165 யோகாசனங்களை கற்றுக் கொண்டேன். சர்வதேச யோகா தினத்தன்று தேசிய சாதனைக்கு முயற்சித்தேன். அப்போது பலரும் எனக்கு கைதட்டி உற்சாகப்படுத்தியதை என்னால் மறக்கவே முடியவில்லை.

தேசிய சாதனைக்கான சான்றிதழ் ஓரிரு நாட்களில் வந்து விடும். விரைவில் யோகாவில் உலக அளவில் சாதனை புரிவேன். பள்ளி திறந்தவுடன் காஞ்சிபுரத்திலிருந்து மீண்டும்  பாண்டிச்சேரிக்குப் போய் விடுவேன். அங்கிருந்து கொண்டே உலக சாதனைக்கு முயற்சித்துக் கொண்டே இருப்பேன்'' என்று தனக்கே உரிய மழலை மொழியில் அபூர்வ விந்தனா பேசினார்.

அபூர்வ விந்தனாவின் தாயார் க.சசிகலா நம்மிடம் கூறியது..

""யோகா செய்தால் உடம்பில் நெகிழ்வுத்தன்மை ஏற்படும். ஞாபக சக்தி, கவனிப்புத் திறன், மன உறுதி, நல்ல மனநலம் ஆகிய அத்தனையும் கிடைக்கும். முக்கியமாக உடல் எப்போதும் பரிபூரண ஆரோக்கியத்துடன் இருக்கும். நல்ல ஞாபக சக்தியும், கவனிப்புத்திறனும் அபூர்வ விந்தனாவுக்கு அதிகமாக இருந்ததால் தான் 165-க்கும் மேற்பட்ட யோகாசனங்களின் பெயர்களை நினைவில் வைத்துக் கொள்ள முடிந்தது. ஆசனங்களின் பெயரை சொல்லச் சொல்ல ஒவ்வொன்றாய்  உடனுக்குடன் செய்ய முடிந்தது.

தூய நெறி வாழ்வைக் காட்டும் அற்புத் கலையே யோகா கலை. மனிதனை வாழ்வின் லட்சியத்தோடு இணைப்பதும் யோகா கலையாகவே இருக்கிறது. யோகா கற்றுக் கொண்டால் கரோனா நோய்த்தொற்று நமக்கும் வந்து விடுமோ என்ற பயம் சிறிதும் இருக்காது. ஆரோக்கியமான, அமைதியான, ஆனந்தமயமான வாழ்வை அமைத்து தரும் அற்புத கற்பகத்தருவே யோகா எனலாம். நானும், எனது கணவரும் தினமும் பல ஆண்டுகளாக யோகாசனம் செய்து வருகிறோம். இதுவரை எந்த நோய்க்கும் மருந்து சாப்பிட்டதில்லை'' என்றும் க.சசிகலா தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com