
மருத்துவத் துறையில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் மிக்கவர் குமுதா லிங்கராஜ். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஓன்றரை ஆண்டாக முதல்வராகப் பணியாற்றிய இவர் கடந்த ஏப்ரல் மாதம் பணி ஓய்வு பெற்றார். இதன் பின் இதே மருத்துவமனையில் கரோனா சிறப்பு அலுவலராகப் பணியாற்றி, ஜூன் 30-ஆம் தேதி பணி நிறைவு செய்தார். இதனிடையே, மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் அச்சுறுத்தி வரும் கரோனா தீநுண்மிக்கு எதிரான போர் பெரும் சவாலாக இருந்து வருகிறது. இந்த சவால்களை எப்படி எதிர்கொண்டோம் என்பதை நம்மிடம் பகிர்ந்து கொண்ட அவர் தெரிவித்தது:
""தொடக்கத்தில் கோவிட் 19 தீநுண்மி குறித்து யாருக்குமே தெரியாது. அதை புளு, எச்1என்1 போன்றே அனைவரும் நினைத்தோம்.
எனவே, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலில் 10 படுக்கைகள் போதும் என அரசுத் தரப்பில் கூறப்பட்டது. அடுத்த 24 மணிநேரத்தில் 10 படுக்கைகள் போதாது; 30 படுக்கைகள் ஏற்பாடு செய்யுமாறு உத்தரவு வந்தது. அதன் பிறகு 100 படுக்கைகளைத் தயார் நிலையில் வைக்குமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இந்த முயற்சிகளுக்கு மாவட்ட ஆட்சியரும் முழு ஒத்துழைப்புக் கொடுத்தார். அதனால், எங்களுக்கு உடனடியாக எல்லா ஏற்பாடுகளையும் செய்ய முடிந்தது.
இதையடுத்து, கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக மட்டுமே மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திலுள்ள 3 அடுக்குகள் கொண்ட ஒரு கட்டடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் பிறகு 1,000 படுக்கைகள் வரை குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதுபோன்ற தொற்றுநோயை என் வாழ்வில் பார்த்ததில்லை. எல்லோருக்குமே இது புதிதாகவே இருக்கிறது. என்றாலும், இதன் மூலம் நிறைய புதிய அனுபவங்
களும் கிடைத்தன. காணொலி காட்சி, ஜூம் செயலி வழியாகக் கலந்தாய்வுக் கூட்டம் உள்ளிட்டவை புதிதாகவே இருந்தன.
தொடக்கத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள், செவிலியர்கள் என எல்லோருக்குமே உயிர் பயம் அதிகமாகவே இருந்தது. குறிப்பாக, மருத்துவர்கள், செவிலியர்கள் மனதளவில் மிகுந்த இறுக்கத்துடன் இருந்தனர். எனவே, தொடக்கத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிப்பது, பெரும் சவாலாகவே இருந்தது. என்றாலும், அவர்களுக்குச் சிகிச்சை அளிக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் இருக்கிறது என்பதால், முதலில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோரிடம் அச்சத்தைப் போக்க மனநல ஆலோசனை, யோகா பயிற்சி உள்ளிட்டவை வழங்கப்பட்டன. மேலும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பாதுகாப்பான முறையில் சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
கரோனா வார்டில் மருத்துவர்கள், செவிலியர்கள் ஒரு வாரம் பணியாற்ற நியமிக்கப்பட்டனர். அதன் பிறகு அவர்களுக்கு ஒரு வாரம் ஓய்வு வழங்கப்படும். பின் அவர்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்லமுடியாது. அவர்களை மருத்துவமனை வளாகத்திலேயே தங்க வைத்து, கரோனா பரிசோதனை செய்யப்படும். அதில் கரோனா தொற்று இல்லாவிட்டால் மீண்டும் கரோனா வார்டில் பணியாற்ற அவர்கள் அனுமதிக்கப்படுவர். இதன் மூலம், மருத்துவர்கள், செவிலியர்களிடையே இருந்த அச்சம் குறைந்தது. இப்போது, கரோனா வார்டில் பணியாற்ற தாமாகவே முன் வருகின்றனர்.
இதேபோல, தொடக்கத்தில் கரோனா வார்டில் சேர்க்கப்பட்ட நோயாளிகளும் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் போல காணப்பட்டனர். மருத்துவப் பணியாளர்கள் உள்ளே செல்வதற்கும் அச்சப்பட்டனர். இந்நிலையில், சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் வழங்கிய ரோபோ சாதனங்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, மருந்துகள் உள்ளிட்டவற்றை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இச்சாதனங்கள் தற்போது வரை மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது.
தொடக்கத்தில் வந்த நோயாளிகளுக்குச் செய்யப்படும் பரிசோதனையில் ஒரு முறை பாசிட்டிவ் என வந்தால், அடுத்த முறை நெகட்டிவ் என வந்தது. இதுபோன்று, மாறி மாறி வந்ததால் நோயாளிகளும் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டனர். ஊருக்குள் எங்களை மீண்டும் சேர்க்கமாட்டார்கள் என பல விதங்களில் அவர்களிடையே அச்சம் நிலவியது. எனவே, அவர்களுக்கும் மன நல மருத்துவர்கள் மூலம் மன நலன் குறித்த ஆலோசனை வழங்கப்பட்டது. பிறகு அவர்களும் குணமடைந்து வீட்டுக்குச் சென்றனர்.
இதுபோன்று, பல சவால்களை எதிர்கொண்டோம். இனி, எந்தத் தொற்று நோய் வந்தாலும் எவ்வாறெல்லாம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை முழுமையாகத் தெரிந்து கொண்டோம். எனவே இனிமேல் எந்த நோய் வந்தாலும் சமாளித்து விடலாம்.
இந்த கரோனா நோய்க்குப் பிறகு நம்முடைய வாழ்க்கை முறையே மாறிவிட்டது. முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது, சோப்பு போட்டு கை கழுவது உள்ளிட்டவை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கரோனா நோயைக் கண்டு அச்சப்படுவதை விட இதையெல்லாம் கடைப்பிடித்தாலே இந்நோயிலிருந்து தப்பிக்கலாம்'' என்றார் குமுதா லிங்கராஜ்.
படம் - எஸ். தேனாரமுதன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.