கரோனா: இருட்டிலிருந்து வெளிவர என்ன செய்ய வேண்டும்!: விளக்குகிறார் மருத்துவர் மீனாட்சி பரமசிவன்

கரோனாவால் உலகமே பொது முடக்கத்தில் அடங்கி கிடக்கிறது. நாள்தோறும், மணி தோறும் புது புது தகவல்கள், வதந்திகள் சமூக ஊடகங்களில் வலம் வந்து பார்ப்போர் மனதை கலங்கடித்து வருகிறது.
கரோனா: இருட்டிலிருந்து வெளிவர என்ன செய்ய வேண்டும்!: விளக்குகிறார் மருத்துவர் மீனாட்சி பரமசிவன்

கரோனாவால் உலகமே பொது முடக்கத்தில் அடங்கி கிடக்கிறது. நாள்தோறும், மணி தோறும் புது புது தகவல்கள், வதந்திகள் சமூக ஊடகங்களில் வலம் வந்து பார்ப்போர் மனதை கலங்கடித்து வருகிறது. உலக சுகாதார நிறுவனம் கூட காற்று மூலமும் கரோனா பரவுவதற்கான வாய்ப்பு இருப்பதாக ஒரு தகவலைக் கூறி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இத்தகைய இக்கட்டான நிலையில் நம் மனதை அமைதியாக வைத்திருப்பதற்கும், உண்மையை உணர்ந்து கரோனா என்ற இருட்டிலிருந்து வெளியேறி வெளிச்சத்தில் பயணிக்க நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும்? என்பது குறித்து நம்மிடம் மனம் திறந்து விவரிக்கிறார் கதிரியக்கவியல் நிபுணரும், கரு அல்ட்ராசவுண்டில் ஃபெல்லோஷிப் பெற்றவரும், பிரசித்தி பெற்ற மருத்துவமனையின் கன்சல்டன்டுமான மருத்துவர் மீனாட்சி பரமசிவன் எம்.பி.பி.எஸ், டிஎன்பி (ஆர்.டி):

""கடந்த நான்கு மாதங்களில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கைக்கு இணையாக மனநோயாளிகளும் அதிகரித்து இருக்கிறார்கள் பொதுவாக, வேதனையான நோய்க்கு ஆளாவதா? அல்லது உங்கள் உறவினர்களும் நண்பர்களும் ஒரு கொடிய நோய்க்கு ஆளாவதைப் பார்த்துக் கொண்டிருப்பதா? என கேள்வி எழுப்பினால் பெரும்பான்மையானவர் இரண்டாவதையே தேர்ந்தெடுப்பர். ஏனென்றால், நமக்கு பிடித்தவர்கள் உயிருக்காக போராடுவதைப் பார்த்துக் கொண்டு, எதுவும் செய்ய இயலாது இரு கைகளும் கட்டப்பட்ட நிலையில் நிற்பது அவ்வளவு எளிதானது அல்ல.

கரோனா ஒரு வைரஸ் மட்டுமல்ல, வாழ்க்கையின் கவனிக்கப்படாத பல அம்சங்களை நமக்குக் கற்பித்த ஒரு குரு. வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கிக் குவிப்பதில் தொடங்கி பல விஷயங்களில் நம்பி ஏமாறக்கூடாது என்கிற பாடங்களை நாம் கற்றுக்கொள்ளத் தொடங்கியிருக்கிறோம். கரோனா புத்தகத்தின் சில அத்தியாயங்கள் பலரின் முகமூடிகளைத் தாண்டி உண்மையான முகத்தை நமக்குக் காட்டியுள்ளன. கரோனாவுக்குப் பிறகு உலகம் முழுவதும் தலைகீழாக மாறிவிட்டது. வாழ்க்கையின் உண்மையான அத்தியாவசியங்கள் என்ன என்பதை நாம் புரிந்து கொண்டோம். நமது முந்தைய நடைமுறைகள் என அழைக்கப்பட்டவை இனி நடைமுறையில் இருக்காது.

ஆம். கரோனாவைக் கையாளுவது அவ்வளவு எளிதல்ல. கரோனா டெஸ்ட் பாசிட்டிவ் என்கிற வாக்கியம் நம் சுற்றம், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடையே, எதிர்மறை அதிர்வுகளை ஏற்படுத்துகிறது. எங்கு செல்ல வேண்டும், என்ன செய்ய வேண்டும், நிலைமையை எவ்வாறு கையாளவேண்டும் என்று தெரியாமல் நம்மில் பல பேர் ஏதேனும் ஒரு கட்டத்தில் தவிக்கிறோம் அல்லது எந்த வழியில் செல்வது என்று தெரியாமல் விக்கித்து நிற்கின்றோம். இந்த பொருத்தமின்மை மன அழுத்தத்தைக் கொண்டுவருவதுடன், நிலைமையை எதிர்கொள்ளும் திறனை மேலும் மோசமாக்குகிறது.

கரோனா வரும் போது மன அழுத்தம், கவலை, தூக்கமின்மை, மனச்சோர்வு, தற்கொலை போக்குகள், சித்தப்பிரமை மற்றும் மரணபயம் போன்றவை ஏற்படுவது இயல்பு.

மன அழுத்தம் (Stress):  உங்கள் மனதுக்கும் உடல் இயக்கத்திற்கும் இடையில் உருவாகும் பொருந்தா தன்மையால் பல விஷயங்களை ஒரே நேரத்தில் கையாள வேண்டியிருக்கும். அப்போது அதை செய்ய முடியாமல் போகும்போது அது மனஅழுத்தத்தில் போய் முடிகிறது.

கவலை (Anxiety): கரோனா பற்றி ஊடக தகவல்கள் மற்றும் வாட்ஸ்-ஆப் வழியாக நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ளும்போது உங்கள் ஆர்வம் அதிகரித்து அதுவே கவலையாக மாறுகிறது. இதயம் வேகமாக துடிக்கத் தொடங்குவதுடன் துடிப்பு விகிதம் அதிகரிக்கத் தொடங்குகிறது.

ஸ்டெதாஸ்கோப்பின் உதவியின்றி இதயத் துடிப்பை கேட்கும் நிலைக்கு கூட தள்ளப்படுவீர்கள்.

தூக்கமின்மை (Insomnia): கரோனா உருவாக்கும் பல காரணிகளைப் பற்றி உங்கள் மனம் மீண்டும் மீண்டும் நினைத்து மற்றும் அசைபோட்டுக் கொண்டு மிகவும் பிஸியாக இருக்கும்போது எவ்வளவு முயற்சித்தாலும் தூங்குவதற்கு வழி என்பதே இருக்காது.

மனச்சோர்வு (Depression): கரோனா வால் எதிர்காலத்தைப் பற்றியும், நண்பர்கள் மற்றும் உறவினர்களை இழப்பதில் இருந்து பொருளாதார நெருக்கடி காரணமாக வேலையை இழப்பது வரை பல விஷயங்களை உங்கள் மனம் யோசிக்கத் துவங்கும். வருமானம் இல்லாமல் குடும்பத்தை எவ்வாறு நடத்துவது,  குழந்தையின் கல்வி மற்றும் அவர்களின் எதிர்காலம் என்னவாகும் என்று கவலைப்படும் போது  மனம் சோர்வடையும். தவிர பொது முடக்க காலத்தில் பல நாள்களாக வீட்டிற்குள் இருப்பது என்ற ஒரு விஷயமே மனச்சோர்வு அடைய ஒரு முக்கிய காரணியாகும்.

தற்கொலை போக்குகள்: கரோனா காரணமாக துன்பப்படுவோமோ? என்ற பயம், தனிமைப்படுத்தப்படுவது குறித்த பயம் மற்றும் கரோனாவுடன் தொடர்புடைய சமூக களங்கம்  (social stigma) குறித்த பயம், ஆகியவை மனச்சோர்வின் தீவிர கட்டத்தில் கொண்டு போய் சேர்த்து தங்கள் உயிரை தானே மாய்த்துக் கொள்வது என்கிற தவறான முடிவுகளை எடுக்க வைக்கிறது. இது சற்றே ஆபத்தான நிலை. தற்கொலை குறித்த எண்ணங்கள் உங்களை தாக்கினால், நீங்கள் கட்டாயம் மனநல மருத்துவரை அணுகுங்கள். அவர் உங்களுக்கு தேவையான மருந்துகளையும் ஆலோசனைகளையும் வழங்குவார்.

எண்ணச் சுழற்சி நோய் (Obscessive compulsive disorder) : எந்தவொரு பொருளையும் அல்லது மேற்பரப்பையும் தொடாமலேயே உங்கள் கைகளை மீண்டும் மீண்டும் கழுவுதல், கரோனா வைரஸ் உங்கள் கைகளில் சிக்கி, எந்த நேரத்திலும் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்று நினைத்தும் உங்கள் முகமூடியை சரியான நிலையில் இல்லை என்று நினைத்தும் பல முறை சரிசெய்தல் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

மரணபயம் (Thanatophobia): பல நாடுகளில், பலர் உயிரை இழந்ததால், கரோனா தொற்று கண்டால் நாமும் மரணித்து விடுவோமோ என்பதே அனைவரின் இறுதியான பயமாக உள்ளது. நோய் அறிகுறிகளை முதல் நிலையிலேயே அறிந்து கொண்டு ஆரம்ப நிலையிலேயே மருத்துவமனையை அணுகினால் மரணத்தை எளிதில் வெல்லலாம்.

உளவழி உடற்கோளாறு (Psychosomatic disorder): நாம் ஒவ்வொருவரும் நீண்ட கால ஊரடங்கின்போது இந்த அறிகுறிகளில் எவற்றையாவது ஒன்றை அனுபவித்திருப்போம் அல்லது அனுபவிப்போம். இதுபோன்ற ஒரு தொற்று நோய் நம் சமூகத்தை ஆட்கொள்ளும்போது மன ஆரோக்கியம்  என்பது மிகவும் முக்கியம். ஏனெனில் மனநல பிரச்னைகளால் ஏற்படும் உடல்நோய்கள் என்று பொருள்படும் உளவழி உடற்கோளாறு என்று ஒரு தனிப்பிரிவே மனநல மருத்துவத்தில் உள்ளது. வயிற்றுப்புண் முதல் மாரடைப்பு போன்ற பல உடல் நோய்கள் மனநலகோளாறுகளின் அடிப்படையில் வரும் உடல்நல குறைபாடுகள் ஆகும்.

கூடுதலாக, நீடித்த கவலை உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்து, உங்களை கரோனா நோய்க்கு ஆட்பட அதிகவாய்ப்புள்ளவர்களாக ஆக்குகிறது.

மேற்கொண்ட  அனைத்துமே அதிர்ச்சிக்கு பிறகான மனஅழுத்த பாதிப்பு (Post traumatic stress disorder) ஆகும். கரோனா எனும் உலகையே ஆட்கொண்ட வைரஸினால் ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் கரோனா வால் ஏற்பட்ட இறப்பு ஆகியவற்றைப் பார்த்த பின் ஏற்பட்ட விளைவே இது.

(அடுத்த இதழில்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com