வேத காலத்தில்  பெண்  கவிஞர்கள்! 

வேத காலத்தில் குறிப்பாக ரிக் வேத காலத்திய சமுதாய அமைப்பில் ஆணும், பெண்ணும் சம உரிமை பெற்று வாழ்ந்தார்கள்.
வேத காலத்தில்  பெண்  கவிஞர்கள்! 

வேத காலத்தில் குறிப்பாக ரிக் வேத காலத்திய சமுதாய அமைப்பில் ஆணும், பெண்ணும் சம உரிமை பெற்று வாழ்ந்தார்கள். அப்போது பெண் கல்வி மிகவும் ஏற்றம் பெற்றிருந்தது. அன்றைய பெண் கல்வியில் வேதப் பயிற்சியும், நுண்கலைப் படிப்பும், போர் விஞ்ஞானமும் இடம் பெற்றிருந்தன.

அன்றைய பெண்ணின் திருமணத்திற்குரிய முக்கிய தகுதிகளில், கல்வியறிவும் ஒன்றாக வற்புறுத்தப்பட்டிருந்தது. அவர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் ஆன்மிக வாழ்வை மேற்கொள்ளவும் வாய்ப்பளிக்கப்பட்டது.

சுபலா, திரிதவ்ரதா, ஸ்துருதவதி - ஆகிய பெண்கள் இவ்வாறு ஆன்மிக வாழ்வை மேற்கொண்டதாக அதர்வன வேதம் குறிப்பிடுகின்றது.

உபநிடத காலத்தில் யாக்ஞவல்கியரின் மனைவி மைத்ரேயியும், ஜனகனுடைய அரசவையில், யாக்ஞவல்கியருடன் தத்துவச் சொற்போரில் வித்தகம் காட்டிய கார்க்கி வாசக்னவியும், பெண்களின் கல்வி முதிர்ச்சிக்கு அணிகலன்களாய்த் திகழ்ந்தார்கள்.

வேத காலத்தில் ஏராளமான பெண் கவிஞர்களும் இருந்தார்கள். பல பெண் கவிஞர்களின் பாடல்கள் ரிக் வேதத்திலும், மூன்று பெண் கவிஞர்களின் பாடல்கள் அதர்வன வேதத்திலும் இடம் பெற்று இருக்கின்றன.

ரிக் வேத காலத்தில் இருபது பெண் கவிஞர்கள் இருந்ததாக, "ஆர்ஷானுக்ரமணி' என்ற நூல் குறிப்பிடுகிறது.

வேத காலத்தில் இருபத்தேழு - பெண் கவிஞர்கள் இருந்ததாக, "ப்ருஹத்தேவதா' என்ற நூல் கூறுகிறது.

வேதங்கள் குறித்து ஆழ்ந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு, வேத ரிஷிகளின் கலைக் களஞ்சியத்தை உருவாக்கிய மூதறிஞர் கா. ஸ்ரீ.ஸ்ரீ - தயாரித்தளித்த ரிக் வேதப் பெண் கவிஞர்களின் பட்டியலில் 24- பெண் கவிஞர்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

ராதா குமுத முகர்ஜி என்ற பேரறிஞர் தாம் எழுதிய "இந்தியப் பெண்கள்' என்ற நூலில், நோதா, அக்ரிஷ்ட பாஷா, சிகாத நிவாவரி, கம்பாய்னா என்ற நான்கு பெண் கவிஞர்களின் பாடல்கள் சாம வேதத்தில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

வேதகாலப் பெண் கவிஞர்களின் பெரும்பாலான பாடல்களில் அரிய பல விஷயங்களும் அறிவியற் செய்திகளும் இருக்கின்றன. அவற்றில் அவர்களுடைய சொந்த வாழ்க்கைப் பிரச்னைகள் எதிரொலிக்கின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வேத காலத்தில் கல்வி பயின்ற மாணவியருள் இரு வகையினர் இருந்தார்கள். அவர்களில் பிரம்ம வாதினிகள் என்பவர்கள் சமயம் தத்துவங்களை, வாழ்நாள் முழுவதும் பயின்றார்கள். "சத்யோதவஹாஸ்' என்பது திருமணம் ஆகும் வரை கல்வி கற்கும் பெண்களைக் குறித்தது.

வேத காலத்தில் தலைவன் வேள்வி செய்யும்போது தலைவியும் உடனிருப்பாள். மந்திரத்திலாதல், சுரத்திலாதல், தலைவன் ஏதேனும் பிழை நிகழ்த்துவானேல், உடனே திருத்தமாகத் தலைவி அதைச் சொல்லி ஒழுங்கு செய்வது வழக்கம். இதனால் ஆண் மக்களைப் போலவே பெண்மக்களும் கல்வியிலும், வேதப் பயிற்சியிலும் சிறந்து, பெண்ணுரிமையைப் போற்றி வளர்த்தார்கள் என்று பேரறிஞர் திரு.வி.க கூறுகிறார்.

மேலும் வேதகாலத்தில் பெண் கவிஞர்களின் உணர்ச்சிகரமான பாடல்களில் பல அற்புதமான செய்திகளும் நுட்பமான அறிவியல் விஷயங்களும் அகம், புறம் மற்றும் இல்வாழ்க்கை குறித்த பல செய்திகளும் நிரம்பி உள்ளன.
வேதகாலத்தில் வாழ்ந்த பெண் கவிஞர்கள் சிலரைப் பற்றி அறிந்து கொள்வோம்.

அபலா: இவள் அத்திரி முனிவரின் மகள் பிரம்மஞானி. மணமான பின்பு குஷ்ட நோய் தோன்றியதால் கணவனால் துறக்கப்பட்டவள். பிறந்த வீட்டிலிருந்து கடும் தவம் செய்தாள். தனது குறைகளை, உணர்ச்சிகளை அவள் ஏழு கவிதைகளில் வெளியிடுகிறாள்.

கோஷா: காக்சிவான் என்னும் அரசனின் மகளான கோஷா, பெண் கவிஞர்களின் பாடல்களில் அபலாவின் கவிதைகளில் உள்ள அதே உணர்ச்சிப் பெருக்கை வெளிப்படுத்தியிருக்கிறாள். இவருடைய பாடல்கள் பதினான்கு இருக்கின்றன. இவை வாழ்க்கையின் இன்ப, துன்பங்கள், ஏமாற்றங்கள் அனைத்தையும் கவிதைப் பண்புடனும் நடப்பியல் நோக்கு மிளிர இசைக்கின்றன.

சசுவதி: அங்கிரர் என்ற ரிஷியினுடைய மகள். வேத சாஸ்திரங்களில் மிக்க புலமை இருந்தது. பதிவிரதையான சசுவதி கடும் தவமிருந்து தன் கணவனுக்கு ஏற்பட்ட நோயை அகற்றுகிறாள். இவர் மிகச் சிறந்த கவிஞராகத் திகழ்ந்தாள்.

லோபமுத்திரை: மாமுனிவர் அகத்தியரின் பத்தினி. அகத்திய முனிவர் பிரம்மச் சரியத்தையும், இல்லற நெறியையும், குடும்ப வாழ்க்கையில் பயின்று வரத்தில் வல்லவர் எனப் புகழப்படுகிறார். இவரது கவிதைகள் மிகவும் உணர்ச்சி கரமானவை. காதல் ஏக்கத்தின் எதிரொலியாகத் திகழ்பவை.

ரோமஸா: இவள் பிரகஸ்பதியின் மகள். பாவயவ்யர் என்ற முனிவரின் பத்தினி. இவளது கவிதைகளில் இல்லறவியல், தாம்பத்ய உறவின் மிக நுட்பமான மனோதத்துவம், இழைந்தோடுகிறது.

இந்திராணி: இவரது பாடல்களில் கணவனின் முழு அன்பிலும், ஆதரவிலும் பிற மனைவியர் பங்கு பெறுவதைப் பொறுக்கமுடியாத ஒரு பெண்ணின் இயல்பான மனநிலையை எடுத்துக் காட்டுகிறது.

சூர்யா: என்னும் பெண் கவிஞர் தனது கவிதைகளில் சடங்குகள், மந்திரங்களுடன் கூடிய திருமண நிகழ்ச்சியையும், பிள்ளைகள் பேரன்களுடன் கணவனுடைய குடும்பத்தில் பெருமித வாழ்க்கை நடத்துவதையும் கூறுகிறாள்.
அகஸ்திய பகிரீ: இந்தப் பெண் கவிஞரின் பாடல்களில் தாய்மையின் குணநலன்கள் போற்றப்படுகின்றன. தன் பிள்ளைகளின் நலன் குறித்து பிரார்த்திக்கிறாள்.

வாக்தேவி: வாழ்நாள் முழுவதும் தத்துவ விசாரணையில் திளைத்த வாக்தேவி என்னும் இந்தப் பெண் கவிஞரின் கவிதையைப் பிற்காலத்தில் எழுந்த வேதாந்தத்தின் மூல ஊற்றாக உரையாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். மேலும், ஜுஷு, யமி, ஊர்வசி, விஸ்வவாரா, ஆத்ரேயி, மமதா உட்பட பல பெண்புலவர்கள் சிறந்த கவிஞர்களாகப் போற்றப்பட்டார்கள்.

பெண்மையின் பல கூறுகளின் துடிப்புகளை விளக்கும் வேதகாலப் பெண் புலவர்களின் இளமை, அழகு, சிருங்காரம், அகம் -புறம், இல்லறம் வாழ்க்கை பற்றிய தத்துவங்கள் அத்தனையும் அழகிய கவிதா ரூபத்தில் அள்ளித் தெளித்திருக்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com