முத்துச் சிப்பிகளை வீட்டிலும் வளர்க்கலாம்!

வீட்டில் பொதுவாக காய்கறி செடிகள், கொடிகள், முருங்கை, மா மரங்கள் வளர்ப்பார்கள். ஆடு கோழி வளர்ப்பார்கள். அந்த வரிசையில் புதிதாகச் சேர்ந்திருப்பது' முத்து'.
முத்துச் சிப்பிகளை வீட்டிலும் வளர்க்கலாம்!


வீட்டில் பொதுவாக காய்கறி செடிகள், கொடிகள், முருங்கை, மா மரங்கள் வளர்ப்பார்கள். ஆடு கோழி வளர்ப்பார்கள். அந்த வரிசையில் புதிதாகச் சேர்ந்திருப்பது' முத்து'.

வைரம், தங்க நகைகளுக்கு அடுத்தபடியாகப் பெண்கள் விரும்பி அணிவது முத்து மாலைகள், தோடுகள், ஜிமிக்கிகள், வளையல்கள். மேல்நாடுகளில் முத்து நகைகளுக்கு மிகப் பெரிய சந்தை உள்ளது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் முத்துக்கள் பெரும்பாலும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

சங்க காலத்திலிருந்து அறுபதுகள் வரை தென்கோடி தூத்துக்குடியில் முத்து குளிப்பு நடந்தது. அன்று கிரேக்கர்கள், அரபியர்கள் முத்துக்களை வாங்கிச் சென்றனர். தற்போது கடலில் முத்து குளிப்பது நிறுத்தப்பட்டுள்ளது. கடல் முத்து வளர்ப்பது தமிழ்நாட்டில் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம், ஸ்பிக், தமிழ்நாடு மீன்வள வளர்ச்சி கழகம் போன்ற நிறுவனங்கள் ஈடுபட்டிருந்தாலும், அவைகள் இப்போது முழுமையாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

வெளிநாடுகளில் முத்துக்கள் கடல் அல்லாத ஏரி குளங்களில் முத்துக்கள் வளர்க்கப்படுகின்றன. இந்தியாவிலும் நன்னீரில் முத்துக்கள் வளர்க்கும் தொழில்நுட்பம் செயற்பாட்டில் உள்ளது. தொடக்கத்தில் சிக்கலாக இருந்த தொழில் நுட்பம் இன்று ஆர்வம் இருந்தால் யாரும் ஏரி குளம் தேடிப் போக வேண்டியதில்லை. வீட்டில், தொட்டியில், சிறிய குளத்தில், ஏன் வாளிகளில் கூட முத்து உற்பத்தி செய்யலாம். அந்த அளவுக்கு முத்து வளர்ப்பு எளிமையாக்கப்பட்டுள்ளது. அத்துடன் நல்ல வருமானத்தையும் ஈட்டலாம்..!

அப்படி வீட்டில் முத்து வளர்த்து அசத்தி வருபவர் ஆக்ராவைச் சேர்ந்த ரஞ்சனா யாதவ்.

""சம்பிரதாயமான தொழில்களைச் செய்யாமல் வித்தியாசமான அதே சமயம் அனைவரின் கவனத்தை ஈர்க்கும் முத்து வளர்ப்பு தொழிலை வீட்டிலிருந்து செய்து வருகிறேன். எல்லா தொழிலும் இருக்கும் அபாயம் இந்தத் தொழிலும் உண்டு. துணிந்து இறங்கினால் வெற்றி நிச்சயம். "விதிவானி முத்து வளர்ப்பு' நிறுவனத்தை ஆக்ராவில் நிர்வகித்து வருகிறேன்.

முத்து வளர்ப்பு தொடங்கி மூன்று ஆண்டுகள் ஆகின்றன. முத்து சிப்பிக்குள் மணல் துகள் அல்லது வேறு ஏதாவது துகள் சிப்பி சுவாசிக்கும் போது தற்செயலாக உள்ளே நுழைந்துவிடும். சிப்பிக்குள் போன துகளால் சிப்பிக்குள் இருக்கும் மென்மையான சதை திசுக்களுக்கு தாங்கமுடியாத அசெளகரியம் ஏற்படும். அந்த அசெளகரியத்தைப் போக்க துகள் தசையைத் தொடாமல் படாமல் இருக்க ஒரு திரவத்தைச் சுரந்து அந்த துகளை மூடும். அந்த திரவம்தான் நாளடைவில் திடநிலை அடைந்து முத்தாக மாறுகிறது. முத்து வளர்ந்ததும் சிப்பி முத்தை வெளியே உமிழாது. நாம்தான் சிப்பியைத் திறந்து முத்தை வெளியே எடுக்க வேண்டும்.

துகள் சிப்பிக்குள் நுழைவது அரிதாக நடக்கும் செயல். அதனால் முத்து எல்லா சிப்பியில் உருவாகும் அன்று உறுதியாகச் சொல்ல முடியாது. அதனால், துகளை பலவந்தமாக சிப்பிக்குள் நுழைப்பதுதான் நவீன முத்து வளர்ப்பு. இதற்காக முத்து சிப்பியை மிக எச்சரிக்கையாக அதே சமயம் மென்மையாக திறந்து பிளாஸ்டிக் துகளை உள்ளே வைப்பார்கள். கிட்டத்தட்ட ஒரு அறுவை சிகிச்சை என்று சொல்லலாம். இப்படி செய்வதால் எண்பது சதவீத முத்து சிப்பிகளில் முத்து வளர்த்து அறுவடை செய்ய முடியும். இயற்கையாக அரிதாக வளரும் முத்திற்கும், வளர்ப்பு முத்திற்கும் எந்த தர வேறுபாடும் இருக்காது. ஒரே தரமுள்ளதாக இருக்கும்.

"வீட்டில் முத்து வளர்க்க முடியுமா' என்று சந்தேகத்துடன் என்னைப் பார்த்தார்கள். "போகப் போகப் பாருங்கள்' என்று தொடங்கினேன். முதலில் முத்து வளர்ப்பில் ஒடிசா புவனேஷ்வரில் இருக்கும் ஒரு மத்திய அரசின் நிறுவனத்தில் பயிற்சி பெற்றேன். 2018 ஜனவரி மாதம் வீட்டில் சும்மா கிடந்த பிளாஸ்டிக் வட்டாக்களை (பமஆ ) எடுத்து அதில் பச்சை தண்ணீரை நிரப்பி முத்து சிப்பிகளை வளர்க்க ஆரம்பித்தேன். பத்து மாதத்தில் கிட்டத்தட்ட எல்லா சிப்பிகளிலும் இரண்டு முத்துக்கள் வீதம் முத்துக்கள் வளர்ந்தன. இதை பார்த்ததும் வீட்டில் எனது முயற்சிகளுக்கு ஆதரவு தரத் தொடங்கினார்கள். நான் வளர்த்த முத்துக்களை ஹைதராபாத்தில் விற்றதில் செலவு போக லாபம் எண்பதாயிரம் ரூபாய் கிடைத்தது. முத்து சிப்பிகளை அகமதாபாத்திலிருந்து வாங்குகிறேன். பாசி தான் சிப்பிகளுக்கு உணவு. தினமும் இரண்டு மணி நேரம் சிப்பிகளை பராமரிப்பதில் செலவிடவேண்டும்.

"முத்து வளர்க்கும் முறையில் முத்தை எந்த வடிவத்திலும் வளர்க்க முடியும். துகள் எந்த வடிவில் உள்ளதோ அந்த வடிவத்தில் முத்து வளரும். ஒரு சிப்பியில் இரண்டு முதல் ஆறு முத்துக்களை வளர்க்கலாம். சிப்பியில் ஒரு முறை மட்டுமே முத்து வளர்க்க முடியும். அறுவடை முடிந்ததும், வேறு புதிய சிப்பிகளில் துகள்களை செலுத்தி முத்து வளர்க்க வேண்டும். இன்னும் சில மாதங்களில் முத்துக்களை சிப்பியிலிருந்து வெளியே எடுப்பேன். சுமார் நான்கு லட்சம் லாபம் கிடைக்கும் என்று எதிர் பார்க்கிறேன். இதுவரை 16 பேர்களுக்கு முத்து வளர்க்கும் பயிற்சியை வழங்கியிருக்கிறேன்'' என்கிறார் 27 வயதாகும் ரஞ்சனா யாதவ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com