சின்னத்திரை: திண்டாட்டத்தில் வெளிமாநில நாயகிகள்!

கரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த சில மாதங்களாக சின்னத்திரை தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளின் படப்பிடிப்புகளை மேற்கொள்ள முடியாமல் அனைத்து தொலைக்காட்சிகளும் முடங்கிப் போயிருந்தன.
சின்னத்திரை: திண்டாட்டத்தில் வெளிமாநில நாயகிகள்!


கரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த சில மாதங்களாக சின்னத்திரை தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளின் படப்பிடிப்புகளை மேற்கொள்ள முடியாமல் அனைத்து தொலைக்காட்சிகளும் முடங்கிப் போயிருந்தன. இந்நிலையில், பொது முடக்கத்தில் தளர்வுகள் ஏற்பட்டு உள்ளதால் மீண்டும் சின்னத்திரை தொடர்களின் படப்பிடிப்பு துவங்கி உள்ளன.

அதே சமயம், படப்பிடிப்புகள் தொடங்கிவிட்டாலும், பல்வேறு சிக்கல்களை குழுவினர் சந்தித்து வருகின்றனர். அதில் முக்கியமானது நடிகர், நடிகைகளை மீண்டும் ஒன்றிணைத்து ஷூட்டிங் நடத்துவதில் உள்ள சிக்கல் தான். பெரும்பாலான தமிழ் சின்னத்திரை தொடர்களில் கேரளா, கர்நாடகா போன்ற வெளிமாநில நடிகைகள்தான் நாயகிகளாக நடித்து வருகின்றனர்.

கரோனாவால் அவர்கள் தங்களது சொந்த ஊருக்குச் சென்று விட்டதால் மீண்டும் சென்னை வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாம்.

இதனால் பல முன்னணி தொடர்களில் நடிக்கும் நடிகர், நடிகைகள் அதிலிருந்து விலக்கப்பட்டுள்ளதாகவும் சின்னத்திரை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

அந்த வகையில், சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வந்த "அக்னி நட்சத்திரம்' தொடரில் வில்லியாக அகிலா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த மெர்ஷினா "தான் கேரளாவில் இருப்பதால் சென்னை வர முடியவில்லை என்றும் அதனால் வேறு ஒரு நடிகை அந்த ரோலில் இனி நடிப்பார்' எனவும் அறிவித்து இருந்தார்.

மேலும் ராதிகாவின் "சித்தி 2' சீரியலில் நான்கு நடிகர்கள் மாற்றப்பட்டு உள்ளனர் என்றும், பொன்வண்ணனுக்கு பதில் இனி நிழல்கள் ரவி நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.

விஜய் டிவியில் இரு வேடங்களில் மிர்ச்சி செந்தில் ஹீரோவாக நடித்து வரும் "நாம் இருவர் நமக்கு இருவர்' தொடரில் இரண்டு நாயகிகளில் ஒருவரான ரக்ஷா பெங்களூரில் இருந்து வர முடியாததால், அவருக்குப் பதிலாக ரச்சிதா ஒப்பந்தமாகியிருக்கிறராம். மற்றொரு நாயகியான ரேஷ்மியும் பெங்களூருவைச் சேர்ந்தவர்தான். எனவே ரக்ஷாவைப் போல் அவரும் தொடரில் இல்லை என்றே சொல்லப்படுகிறது.

"பகல் நிலவு', "கடைக்குட்டி சிங்கம்' ஆகிய தொடர்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்திருந்த ஷிவானி முதன் முதலாக நாயகி மற்றும் வில்லியாக இரட்டை வேடத்தில் நடித்து வரும் தொடர் "இரட்டை ரோஜா' இவரும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாததால், இவருக்கு பதிலாக "சித்து ப்ளஸ் 2' படத்தில் நடித்திருந்த சாந்தினி நாயகியாக நடிக்கவுள்ளார்.

அதுபோன்று, நடிகை ரேவதி நடித்த "அழகு', சஞ்சீவ் நடித்த "காற்றின் மொழி' உள்ளிட்ட பல தொடர்கள் அப்படியே நிறுத்தப்பட்டுள்ளதாம்.

இது குறித்து ரக்ஷா கூறுகையில், ""பொதுமுடக்கம் அறிவிச்சதும் பெங்களூரு கிளம்பி வந்தேன். இரண்டரை மாதம் கழித்து ஷூட்டிங் இருக்கிறது என்று கூப்பிட்டார்கள். அப்போது பெங்களூரு, சென்னை இரண்டு இடத்திலும் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததால் பயத்தில் எங்கள் வீட்டில் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள வேண்டாம் என்றார்கள். சென்னையில தங்கியிருந்தால் கூட எப்படியாவது ஷூட்டிங்கில் கலந்து கொள்ள முயற்சித்திருப்பேன். மாநிலம் விட்டு மாநிலம் என்பதால், இ-பாஸ் மாதிரியான நடைமுறைகளினால் என்னால் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியவில்லை எனவே கொஞ்சம் அவகாசம் கேட்டேன். ஆனால், தற்போது என்னுடைய கதாபாத்திரத்தில் "சரவணன் மீனாட்சி' புகழ் ரச்சிதா நடித்துக் கொண்டிருப்பதாக கேள்விப்பட்டேன். இதில் எனக்கு எந்தக் கோபமும் இல்லை. சூழ்நிலை சரியில்லாமல் இருந்தால் யார் என்ன செய்ய முடியும்? ஆனால் எனக்கு ஒரேயொரு வருத்தம் என்னவென்றால், இதுதான் சூழல், என்று தகவல் சொல்லியிருக்கலாம். இருந்தாலும் பரவாயில்லை, நாயகி ரச்சிதாவுக்கு என்னோட வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்கிறார் ரக்ஷா.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "இரட்டை ரோஜா' தொடரில் ஷிவானிக்கு பதிலாக ஒப்பந்தமாகியிருக்கும் சாந்தினி கூறுகையில்,""இது எனக்கு இரண்டாவது தொடர். சில மாதத்திற்கு முன்புதான் "தாழம்பூ' தொடர் மூலம் சின்னத்திரைக்குள் வந்தேன். அது எதிர்பார்த்த வரவேற்பை தரவில்லை. அந்த வருத்தத்தை இந்த தொடர் சரி செய்துவிடும் என நம்புகிறேன். ஏனென்றால், பொதுவாக சீரியல்களில் இரண்டு கதாபாத்திர ரோல் அவ்வளவு எளிதில் வாய்ப்பு கிடைக்காது. அதுவும் பாசிட்டிவ், நெகட்டிவ் ரோல் என இரண்டுமே கிடைக்கும்போது நடிக்க "ஸ்கோப்' இருக்கும் என்பதால் சம்மதித்துள்ளேன்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com