பெண்கள் சொந்த காலில் நிற்க வேண்டும்!

"நபார்டு' என சுருக்கமாக அழைக்கப்படும் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட  ஒரு  பிரத்யேக சட்டத்தின்படி 1982-ஆம் ஆண்டு ஜூலை 12- ஆம் தேதி உருவாக்கப்பட்டது.
பெண்கள் சொந்த காலில் நிற்க வேண்டும்!

"நபார்டு' என சுருக்கமாக அழைக்கப்படும் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட  ஒரு  பிரத்யேக சட்டத்தின்படி 1982-ஆம் ஆண்டு ஜூலை 12- ஆம் தேதி உருவாக்கப்பட்டது. அகில இந்திய அளவில் விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சியே இதன் இலக்கு. இதன் மூலமே மத்திய அரசின் விவசாய, ஊரக மேம்பாட்டுத் திட்டங்களுக்கான மானியம் வழங்கப்படுகிறது. நபார்டு வங்கியின் தமிழ்நாடு மண்டல அலுவலகத்தின் தலைமைப் பொது மேலாளராக இருந்து வருபவர் பத்மா ரகுநாதன். சொந்த ஊர் திருச்சி. சுமார் 30 ஆண்டு பணி அனுபவம் 
கொண்டவர். அவருடன் ஒரு சந்திப்பு:

தங்களின் வங்கிப்பணி அனுபவம் குறித்து?

"மும்பையில் கல்லூரிப் படிப்புக்குப் பின், சார்ட்டர்டு அக்கவுண்டன்ட் முடித்துவிட்டு, நான் பேங்க் ஆஃப் மகாராஷ்டி ராவில் சில ஆண்டுகள் பணியாற்றிவிட்டு, அதன் பிறகு நபார்டில் சேர்ந்தேன். மும்பையில் நபார்டு தலைமை அலுவலகத்தில் பல்வேறு துறைகளிலும், பணியாற்றி இருக்கிறேன். கடந்த 30 ஆண்டுகளில் திட்டமிடுதல், வங்கிகளை மேற்பார்வையிடுதல்,  நுண்கடன்,  மறுநிதி உள்ளிட்ட துறைகளில் பெற்ற அனுபவப் பின்னணியுடன், 2018-இல் தமிழ்நாடு மண்டல அலுவலகத்துக்கு பொறுப்பேற்றுக் கொண்டேன்.

இன்று விவசாயம் சந்தித்துக் கொண்டிருக்கும் சவால்கள் என்னென்ன?

தமிழ் நாட்டில் விவசாயிகள், அடிக்கடி வறட்சி, வெள்ளம், தண்ணீர் தட்டுப்பாடு,  வேளாண் உற்பத்தி பாதிப்பு என்று பலவகையான  சவால்களை எதிர்கொள்கிறார்கள். நம் விவசாயம் 60சதவிகிதம்  மழையை நம்பியே இருக்கிறது.  இது வேளாண் உற்பத்தியையும், விவசாயிகளின் வருவாயையும் கடுமையாக பாதிக்கிறது. இயற்கை விவசாயத்துக்கு வரவேற்பு இருக்கிறது என்றாலும், ரசாயன உரங்கள் பயன்பாடு இன்னமும் அதிகமாகவே காணப்படுகிறது.  இவற்றைத் தவிர, பருவநிலை மாறுபாடுகள் சமீபகாலமாக விவசாயத்தின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இவற்றைத் தவிர,  விவசாயிகளுக்கு தேவையான நேரத்தில், தேவையான அளவுக்குக் கடன் கிடைப்பது இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. 

இது குறித்து நபார்டு என்ன செய்கிறது என்று நீங்கள் கேட்கலாம். முன்பெல்லாம், வங்கிகள் வழங்கும் விவசாயம் சார்ந்த கடன்களுக்கு மறுநிதி அளிப்பதுதான் நபார்டின் முக்கிய பணியாக இருந்தது. இன்று, மறுநிதி உதவி வழங்குவது வெகுவாகக் குறைந்து விட்டது. கூட்டுறவு வங்கிகள், கிராம வங்கிகள் குறுகிய மற்றும் நீண்ட கால பயிர்க்கடன்கள் வழங்குவதற்கு நபார்டு ஆண்டுதோறும் கடனுதவி வழங்குகிறது. கடந்த நிதியாண்டில் கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்கப்பட்ட குறுகிய கால பயிர்க்கடன் உதவி ரூ. 4425 கோடி. நீண்டகால கடனின் அளவு : ரூ. 11,325 கோடி. விவசாயிகள்  இவ்வங்கிகள் மூலம்  கடன் பெறலாம்.

தற்போது பருவநிலை மறுபாடு தொடர்பாக  தமிழ்நாட்டில் 13 திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.  அவற்றுள் மன்னார் வளைகுடாவில்  செயல்படுத்தப்படும் நீடித்த வாழ்வாதாரத்துக்கான திட்டமும் ஒன்று. 

விவசாயம் தவிர உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக  ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியை உருவாக்கி, அதன் மூலமாக மாநில அரசுகளுக்கு நீண்டகால கடனுதவி அளித்து வருகிறோம். இதன் மூலமாக, மாநில அரசுகள் நீர்பாசனத் திட்டங்கள், குடிநீர்த் திட்டங்கள், கிராம சாலைகள், பாலங்கள், தடுப்பணைகள், பள்ளிக்கூடங்கள், ஆரம்ப சுகாதார மையங்கள் உள்கட்டமைப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. நபார்டு உதவியுடன்,  95 கோடி ரூபாய் செலவில்  பத்தாயிரம் பண்ணைக் குட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இது  தமிழ்நாட்டிற்கு பெரும் வரப்பிரசாதம். தமிழ்நாட்டின் மீன்வளத்துறை திட்டங்களுக்காக மட்டுமே 166.48 கோடி அளவுக்கு நபார்டு நிதி உதவி செய்து உள்ளது. 

சுய உதவிக்குழுக்கள் மூலம் தயாரிக்கப்படும்  பல வகையான பொருட்களை விற்பனை செய்வது பெண்களுக்கு பெரும் சவாலாக இருக்கிறதே?

சுய உதவிக்குழுக்களை உருவாக்கி, பெண்கள் முன்னேற்றத்துக்கு பலமான ஒரு அடித்தளம் அமைத்தது நபார்டுதான். சுய உதவிக் குழுக்களை உருவாக்கி, அவர்கள் மத்தியில் சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி, அவர்களை வங்கிகளுடன் இணைக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது நபார்டு. பெண்கள்  சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்ற நோக்கத்துடன்  உறுப்பினர்களுக்கு தொழிற் திறன் பயிற்சி அளிக்கிறோம்.  தங்கள் பயிற்சிக்கேற்ப வேலை செய்து சம்பாதிக்கவும் , பொருள்களை விற்பனை செய்யவும் விற்பனை மையங்கள் அமைத்து, மானிய உதவி செய்து வருகிறோம். தவிர,  உழவர் உற்பத்தி நிறுவனங்களின் தயாரிப்புகளை விற்பனை செய்ய மாவட்ட  அளவிலும், மாநில அளவிலும் கண்காட்சிகள் நடத்துகிறோம். அண்மையில் சென்னையில் "கிராமியத் திருவிழா' என்ற பெயரில் நடந்த விற்பனைக் கண்காட்சியில், மட்டுமில்லாமல், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, குஜராத்திலிருந்து சிக்கிம் வரை பல்வேறு மாநிலங்களையும் சேர்ந்த கைவினைக் கலைஞர்கள், நெசவாளர்கள், சுய உதவிக் குழுக்கள், உழவர் உற்பத்தி நிறுவனங்கள் என பல்வேறு தரப்பினரும் பங்கேற்றனர். நான்கு நாட்கள் நடந்த அந்த கண்காட்சியில் சுமார் 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் விற்பனை ஆனது. தொடர்ந்து பொருட்களை சப்ளை செய்ய ஆர்டர்கள் பெறப்பட்டன. 

"ஸ்பைருலினா' என்கிற சுருள் பாசி உற்பத்தி மற்றும் விற்பனையை மேம்படுத்த அண்மையில் ஒரு கருத்தரங்கு நடத்தினீர்களே! அதற்கு என்ன பின்னணி? 

ஸ்பைருலினா பன்முகத் தன்மை கொண்ட ஒரு பொருள். அது ஒரு நல்ல ஊட்டச் சத்து; நோய் நிவாரணி; அதிலிருந்து உணவுப் பொருட்களும், அழகு சாதனப் பொருட்களும் தயாரிக்க முடியும். ஸ்பைருலினா உற்பத்தி செய்ய பெரிய முதலீடு இல்லாமல், சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் கூட்டாகத் தயாரித்து. 

மதிப்பு கூட்டி, விற்பனை செய்து, லாபம் சம்பாதிக்க முடியும். ஆனால், ஸ்பைருலினாவின் அருமை பற்றி மக்களுக்குத் தெரியவில்லை. அதனை, மக்கள் மத்தியில் அது குறித்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவும், அதன் மதிப்புக் கூட்டிய பொருட்களை பிரபலப்படுத்தவும்  நடவடிக்கை எடுத்து வருகிறோம். 

அதற்காகத்தான் அரசுத் துறைகளையும், ஸ்பைருலினா தொடர்புடைய பல தரப்பினரையும் அழைத்து அந்தக் கருத்தரங்கினை நடத்தினோம். ஊட்டச் சத்துள்ள ஸ்பைருலினா மாத்திரைகளை, மதிய உணவுத் திட்டத்தின் கீழ் பள்ளிக்கூட குழந்தைகளுக்கு வழங்குவதற்கு பரிந்துரை செய்தோம். மேலும் ஸ்பைருலினா உற்பத்திக்கான மாதிரித் திட்டம் ஒன்றையும் தயாரித்து வங்கி
களுக்கு அனுப்பி இருக்கிறோம்.

தற்போதைய கரோனா அச்சுறுத்தல் காரணமாக விவசாயிகளுக்கு, விவசாயத்துக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. நீங்கள் அவர்களுக்கு எப்படி உதவப்போகிறீர்கள்?

கரோனா தொற்று பாதிப்பினால் இந்திய பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதியில்  வேளாண்மை மற்றும் கிராமப்புற பொருளாதாரத்துக்கு உத்வேகமூட்டி, பாதிப்பில் இருந்து மீட்பதற்காக நபார்டு  ரூ. 1505 கோடி சிறப்பு உதவியை அனுமதித்துள்ளது. வங்கிகள் கடன் வழங்குவதற்கான வசதியை அதிகரிக்கும் நோக்கத்துடன், சிறப்புப் பணப்புழக்க வசதியின் கீழ், 4.4சதவீத வட்டியில் வங்கிகளுக்கு வழங்கப்படும் இந்த கடன் உதவி விவசாயிகள் தாராளமாக விவசாயக் கடன்கள் பெற வழி செய்யும். 

தங்கள் குடும்பத்தைப் பற்றி?

என் கணவரும் வங்கியில் உயர் பொறுப்பில் இருந்து ஓய்வுப் பெற்றவர். எங்களுக்கு ஒரே மகன். அவர், அமெரிக்காவில் இருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com