நெகிழியற்ற கல்லூரி

மாணவர்களிடம் மட்டுமே சமூக மாற்றத்துக்கான விதையை மரமாக்க முடியும் என்ற கருத்தோடு, மாணவர்களின் ஒத்துழைப்பில் நெகிழியற்ற கல்லூரியாக மாற்றியுள்ளனர்.
நெகிழியற்ற கல்லூரி

மாணவர்களிடம் மட்டுமே சமூக மாற்றத்துக்கான விதையை மரமாக்க முடியும் என்ற கருத்தோடு, மாணவர்களின் ஒத்துழைப்பில் நெகிழியற்ற கல்லூரியாக மாற்றியுள்ளனர்.

கோவை அரசு கலைக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள். இந்தக் கல்லூரியில் யாரும் நெகிழிகளைப் பயன்படுத்துவது இல்லை, ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் நெகிழி பேனாக்களுக்கு பதிலாக மை ஊற்றி எழுதும் பேனாக்களை மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். 

கடந்த சில ஆண்டுகளில் நெகிழியற்ற கல்லூரியாக பல்வேறு மாற்றங்களை அக்கல்லூரியில் பணியாற்றி வரும் பொருளாதாரப் பிரிவு உதவிப் பேராசிரியை கே.வசந்தி உருவாக்கி உள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது: 

""எனது சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ள கணக்கன்பட்டி கிராமம். அரசுப் பள்ளியில் படித்து, பின் திருச்சி மற்றும் கோவையில் உள்ள கல்லூரியில் பட்டம் பெற்றேன். கடந்த 2007 முதல் கோவை அரசுக் கல்லூரியில் பொருளாதாரப் பிரிவு உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறேன். 

சுற்றுச்சூழல் மற்றும் இயற்கையைப் பாதுகாக்கும் வகையில் மாணவர்களின் ஒத்துழைப்போடு கல்லூரியில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் ஒரு பகுதிதான் நெகிழி ஒழிப்பு. தமிழக அரசு நெகிழிகளுக்குத் தடை விதித்து உத்தரவிடுவதற்கு ஓர் ஆண்டுக்கு முன்பே, கோவை அரசுக் கல்லூரியில் நெகிழிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. 

முன்னாள் கல்லூரி முதல்வர் நளினி ஒத்துழைப்போடு இது சாத்தியமானது. முதலில் கல்லூரியில் செயல்பட்டு வந்த உணவகத்தில் இருந்து நெகிழி ஒழிக்கும் பணியை துவங்கினோம். உணவகத்தில் வழங்கப்பட்டு வந்த நெகிழிப் பைகளை அகற்றினோம். அதற்கு மாற்றாக துணிப் பை மற்றும் காகிதப் பைகளைப் பயன்படுத்த அறிவுறுத்தினோம். இரண்டாவதாக கல்லூரியில் உள்ள அனைத்து வகுப்புகளிலும் கரும்பலகை அழிக்கப் பயன்படுத்தி வந்த நெகிழி அழிப்பானுக்கு பதிலாக துணியில் தயாரிக்கப்பட்ட அழிப்பான்களைப் பயன்படுத்த துவங்கினோம். மாணவர்களே அதைத் தயாரித்தனர். 

தேர்வு அறைகளில் பயன்படுத்தி வந்த நெகிழி தண்ணீர் குவளைகளுக்கு மாற்றாக சில்வர் குவளைகள் பயன்பாட்டிற்கு வந்தன. ஒவ்வோர் ஆண்டும் சுமார் 1,300 ஆராய்ச்சிக் கட்டுரைகளை நெகிழி அட்டையால் மாணவர்கள் தயார் செய்வார்கள், அவை முற்றிலுமாக காகித அட்டைகளால் தயார் செய்யும் நடைமுறை செயல்படுத்தப்பட்டது.

கல்லூரி விழாக்களில் நெகிழி விளம்பரப் பலகைகளுக்கு, மாற்றாக துணிகளில் எழுதி அதையே பயன்படுத்தி வருகிறோம். ஒரு முறை பயன்படுத்தும் நெகிழி பேனாக்களுக்கு பதில், மை பேனாக்களைப் பயன்படுத்த மாணவர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். 

இறுதியாக மாணவர்களுக்கு வழங்கும் அடையாள அட்டைகள் நெகிழியால் தயாரிக்கப்படுவதால் அவற்றைத் தவிர்க்க இணையதளத்தில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு காகிதத்தால் உருவாக்கப்பட்ட அடையாள அட்டைகளை செய்யும் நிறுவனங்களைக் கண்டறிந்து அவற்றை செயல்படுத்தி வருகிறோம். 

இதேபோல, கல்லூரி வளாகத்தில் ஆங்காங்கே நெகிழி ஒழிப்பு சுவர் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முழு ஒத்துழைப்பால் நெகிழியற்ற கல்லூரி வெற்றி சாத்தியம் ஆனது.

மியாவாக்கி முறை: (அடர் நடவு) இதேபோல, கல்லூரியில் செயல்பட்டு வரும் தேசிய மாணவர் படை மூலமாக பல்வேறு இடங்களில் மியாவாக்கி முறையில் சிறு காடுகளை உருவாக்கி வருகிறோம். கோவை அரசுக் கல்லூரியில் உள்ள தேசிய மாணவர் படை மற்றும் சக மாணவர்கள் ஒத்துழைப்போடு பந்தய சாலை (ரேஸ்கோர்ஸ்) பகுதியில் தனியார் நிறுவன உதவியோடு மியாவாக்கி முறையில் சிறு காடுகள் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. 

மரக் கன்றுகள் வைக்கப்பட்டு அதை மாணவர்கள் தினமும் பராமரித்து வருகின்றனர். மேலும், கிராமப்புற மாணவர்கள் தங்களது கிராமங்களில் இந்த முறைகளை செயல்படுத்த ஊக்குவிக்கப்படுகின்றனர். கல்லூரியைப் பொருத்தவரை இங்கு பயிலும் மாணவர்களுக்குப் பாடங்களுடன் சேர்த்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் அதன் அவசியத்தை தெளிவுபடுத்துகிறோம்'' எனும்  உதவிப் பேராசிரியர் வசந்திக்கு  பாராட்டுகள் குவிகின்றன. 

படங்கள்- வீ.பேச்சிக்குமார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com