

கரோனா.. கரோனா... இதில் நாம் மட்டும் இல்லை, உலக நாடுகளே இதன் கோரப் பிடியில் சிக்கி உள்ளது. இதன்விளைவு அம்பானி முதல் ஆண்டி வரை அனைவரது வாழ்க்கையையும் புரட்டிப் போட்டுவிட்டது எனலாம். அதில் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள், புலம் பெயர் தொழிலாளிகளும், தினக்கூலிகளும் மட்டுமல்ல தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வந்த மிடில்கிளாஸ் மக்களும்தான். பெரும்பாலானோர் மாதக்கணக்கான பொதுமுடக்கத்தினால், வேலையிழந்து, வருமானம் இழந்து, அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்ற கையறு நிலையில், இருக்கின்றனர். இந்நிலையில், ஓரிடத்தில் ஓய்ந்து உட்கார்ந்துவிடாமல், இப்பொழுது கிடைத்திருக்கும் இந்த நேரத்தில் சிறிய முதலீட்டில் கைத்தொழில் செய்ய விரும்புவோருக்கு ஆலோசனை தருகிறார் சுயதொழில் ஆலோசகர் உமாராஜ்.
இதற்கு வெறும் ரூ.500 முதலீடு இருந்தாலே போதும். அது என்ன தொழில், அதுதாங்க நோய் எதிர்ப்பு சக்தி தரும் மூலிகை கம்ப்யூட்டர் சாம்பிராணி தயாரிப்பு.
தேவையான பொருள்கள்: அகில், முகில், கருங்காலி, தேவதாரு, மரமஞ்சள் இதில் முதல் நான்கும் கட்டைகளாக கிடைக்கும். இவற்றை நாட்டு மருந்து கடைகளில் வாங்கி பொடி செய்து கொள்ள வேண்டும். அடுத்ததாக மரத்தூள், கரித்தூள், கட்டி சம்பிராணி, கம்ப்யூட்டர் சாம்பிராணி செய்வதற்கான சிறிய கன், (சிறிய மிஷின்)
செய்முறை: ஒரு பாத்திரத்தில் கரித்தூள், மரத்தூள் இரண்டும் கலந்த கலவை 1 கிண்ணம். மேலே குறிப்பிட்ட 5 மூலிகைகளின் தூள் அரை கிண்ணம், சாம்பிராணி தூள் கால் கிண்ணம். இவை அனைத்தையும் ஒன்றாக கலக்க வேண்டும். பின்னர் இதில் தண்ணீர் தெளித்து புட்டு மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். பின் இதை கம்ப்யூட்டர் சாம்பிராணி மிஷினில் ( அச்சில்) பொருத்தி அழுத்தி எடுத்தால் போதும் அழகான மூலிகை கம்ப்யூட்டர் சாம்பிராணி ரெடி. இதேபோல் கலந்து வைத்துள்ள கலவை அனைத்தையும் செய்து ஒருநாள் வெய்யிலில் காய வைத்தால் போதும். பிறகு இதற்கான கவர்கள், அட்டைப் பெட்டிகள் ரெடிமேடாகவே கிடைக்கின்றன. அதில் பேக் செய்து விற்பனை செய்யலாம். இதற்கு நல்ல வரவேற்பு உண்டு.
இதேபோன்று கண்திருஷ்டி சாம்பிராணியும் செய்யலாம். இதற்கு தேவையான பொருள்கள்: வெண்கடுகு, பேய்விரட்டி, குங்குலியம், சிவனன் வேம்பு இவைகளும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கக் கூடியவைதான். இவற்றை தூள் செய்து மரத்தூள், கரித்தூள், சாம்பிராணியுடன் கலந்து மேற்கூறிய முறையில் செய்ய வேண்டும்.
நான் எப்பவும் சொல்வதுதான், முதலில் இதனை உங்கள் வீட்டில் உபயோகப்படுத்திப் பாருங்கள். பிறகு அக்கம், பக்கம், கடைகளுக்கு விற்பனை செய்யலாம். நாளடைவில் உங்களைத் தேடி வந்து வாங்கி செல்வார்கள். மேலும் இதில் உள்ள பொருட்கள் அனைத்துமே மருத்துவ குணம் உள்ளவை. அதன் புகையை சுவாசிக்கும்போது நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.