சின்னத்திரை மின்னல்கள்!

சின்னத்திரை மின்னல்கள்!

திரைத்துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சுஜிதா.

21 ஆண்டுகால சின்னத்திரை பயணம்!

திரைத்துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சுஜிதா.

தற்போது, சின்னத்திரை பயணத்தில் 21 ஆண்டுகளைக் கடந்துள்ள இவர், தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்:

""சினிமாவில் என்னுடைய முதல்படம் நான் பிறந்த 41-ஆவது நாளில் என்றால் ஆச்சர்யமாக இருக்கும். ஆனால் அதுதான் நிஜம். அதைத்தொடர்ந்து குழந்தை கதாபாத்திரத்தில் நிறைய படங்கள் நடித்திருக்கிறேன். "முந்தானை முடிச்சு' படத்தில் பாக்யராஜ் சாரின் குழந்தையாக நடித்ததும் நான்தான். என்அம்மாவுக்கு சினிமா ரொம்ப பிடிக்கும். அதனால் என் அண்ணனும், நானும் குழந்தை நட்சத்திரமாக நிறையப் படங்களில் நடித்துள்ளோம். என்னுடைய 13 -ஆவது வயதில் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்தேன். 14 வயதில் சின்னத்திரை தொடரில் நாயகியாக நடிக்கத் தொடங்கினேன். தற்போது "பாண்டியன் ஸ்டோர்ஸ்' வரை இந்த பயணம் தொடர்கிறது. பெரியதிரை ஆண்களுக்கான மீடியம் என்றால் சின்னத்திரை பெண்களின் மீடியம். இங்கே பெண் கதாபாத்திரத்திற்கு தான் முக்கியத்துவம். ஹீரோ இரண்டாவது தான்.

"பாண்டியன் ஸ்டோர்ஸ்' கதையைக் கேட்டதுமே பிடித்திருந்தது. ஒத்துக்கொண்டேன். அதில் வரும் தனம் கதாபாத்திரம், ஒரு முதிர்ச்சியான, பெருமையான, வெகுளியான, எல்லாருக்கும் நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிற கேரக்டர். ஆனால், நிஜத்தில் தனம் அளவுக்கு தியாகம் எல்லாம் செய்ய சுஜிதாவால் செய்ய முடியுமான்னா நிச்சயம் முடியாது'' என்றார்.

சக்திக்கும் ரேஷ்மாவுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு!

ஜீ தொலைக்காட்சியின் "பூவே பூச்சூடவா' தொடரில் சக்தி கதாபாத்திரத்தில் வருபவர் ரேஷ்மா. திரையில் துறுதுறுவென இருக்கும் இவர், நிஜத்தில் ரொம்ப அமைதி. தனது சின்னத்திரை அறிமுகம் குறித்து ரேஷ்மா கூறுகிறார்: எனக்கு பூர்வீகம் கேரளா. ஆனால், பிறந்தது மதுரையில், வளர்ந்தது எல்லாம் பெங்களூருவில். பிறகு சென்னை வந்து சேர்ந்தேன். சின்ன வயதில் இருந்தே நடிப்பின் மீது ஒரு காதல், அதுக்காக கதாநாயகி பாத்திரத்துக்காக ஆசைப்பட்டதில்லை. ஒரு முறையாவது திரையில் என்னைப் பார்த்து விட வேண்டும் என்று ஆசை அவ்வளவுதான். நிறைய ஆடிஷனில் கலந்து கொண்டு நிராகரிக்கப்பட்டேன். சரி இது ஒத்து வராது என்று நினைத்த சமயத்தில் மாடலிங் துறையில் வெளிச்சம் கிட்ட கவனத்தை மாடலிங் துறையில் திருப்பினேன். அதன்பின், "மிஸ் மெட்ராஸ்' போட்டியில் கலந்துகொண்டு இரண்டாம் இடத்தைப் பிடித்தேன்.

அந்த சமயத்தில்தான் சின்னத்திரையில் "டான்ஸ் ஜோடி டான்ஸ்' நடன நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அதைத்தொடர்ந்து தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதல் தொடரே "பூவே பூச்சூடவா'தான். நண்பர்கள், கோ-ஆக்டர், இயக்குநர் எல்லாருமே எனக்கு பெஸ்ட்டா கிடைச்சாங்க. நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். தொடரில் வரும் சக்திக்கும், நிஜத்தில் இருக்கும் ரேஷ்மாவுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. அடுத்தக்கட்டமாக எம்.பி.ஏ. படிக்க முயற்சித்து வருகிறேன். நிச்சயமாக படித்து முடித்துவிடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com