கரோனா காலத்தில் சாதிக்கும் பெண்மணிகள்..!

மரபுகளை மீட்டெடுக்கும் முயற்சியாக, தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள தில்லைஸ்தானம் கிராமத்தில் "மரபு பவுண்டேஷன்' என்ற அமைப்பை நடத்தி வருகிறார் கெளசல்யா.
கரோனா காலத்தில் சாதிக்கும் பெண்மணிகள்..!
Updated on
4 min read

மனதை மென்மையாக்கும் மரபுகள்!

மரபுகளை மீட்டெடுக்கும் முயற்சியாக, தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள தில்லைஸ்தானம் கிராமத்தில் "மரபு பவுண்டேஷன்' என்ற அமைப்பை நடத்தி வருகிறார் திருவையாறிலுள்ள தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்றராம. கெளசல்யா.

அமைப்பின் பணி குறித்து அவர் தொடர்கிறார்:

""நாங்கள் எல்லாம் குழந்தைப் பருவத்தில் ஓடி விளையாடி மிக உயர்ந்த பண்பாட்டுச் சூழலில் வளர்ந்தோம். பள்ளியிலும் மனச் சுமை இல்லாமல் சுதந்திரமாகப் பாட்டு, நடனம் என மகிழ்ச்சியாக இருந்தோம். சம்ஸ்கிருதம், வேதம் பயின்றோம். ஐந்து வயதாகும்போதே எல்லா குழந்தைகளும் கற்றுக் கொள்வதைப் போல நாங்களும் கற்றுக் கொள்வோம்.

இதேபோல, கோலி, பாண்டி, பல்லாங்குழி உள்ளிட்ட விதவிதமான விளையாட்டுகளை அந்தந்த சீசனுக்கு தகுந்தவாறு விளையாடுவோம். இப்போது உள்ளதைப் போன்று கண்டதையெல்லாம் சாப்பிடாமல், கொடுக்காய்ப்புளி, மாங்காய் உள்ளிட்டவற்றைச் சாப்பிட்டோம். கோயிலிலும் தொடர்ச்சியாக திருவிழாக்கள் நடைபெறும்.

இதுபோல எங்களது வாழ்க்கைச் சூழலே மிக உயரிய கலாசாரத்துடன் இருந்தது. இதனால், மிகப் பரந்த மனதுடன், ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல், பொருளாதார பிரச்னை இன்றி, ஆண் - பெண் வித்தியாசமில்லாமல் தோழமையோடு வளர்ந்தோம். இல்லை என்ற குறை யாரிடமும் இருந்ததில்லை. இப்படியெல்லாம் குழந்தைப் பருவத்தில் மன நிறைவோடு வாழ்ந்தோம். அதன் பிறகு படித்து வேலைக்குச் சென்றோம். ஓய்வு பெறுவதற்கு ஓராண்டுக்கு முன்புதான் இது பற்றி யோசித்தோம். ஊரில் பார்த்தால் குழந்தைகள் விளையாடுவதைக் காண முடியவில்லை. தொலைக்காட்சிக்கும், செல்லிடப்பேசிக்கும்தான் அடிமையாகி உள்ளனர்.

எனவே, நம்மை நன்றாக வளர்த்த இந்த ஊருக்கு நன்றி செலுத்தும் விதமாக ஏதாவது செய்தாக வேண்டும் என முடிவு செய்தேன். கடந்த 2006 -ஆம் ஆண்டில் எனது தாயாரின் 80 -ஆவது பிறந்த நாளன்று இந்த மரபு பவுண்டேஷனை தொடங்கினேன். இதில், கிராமத்துக் குழந்தைகளுடன் பணியாற்றவும், அவர்களை நிறைய உயர்த்தவும், இசை தொடர்பான பயிற்சி அளிக்கவும் முடிவு செய்தேன்.ஜாதி வித்தியாசமில்லாமல் பயிலரங்கம் நடத்துவது, எக்காரணத்தைக் கொண்டும் யாரிடமும் கட்டணம் வசூலிப்பதில்லை என்ற இரண்டு விஷயங்களில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

பயிலரங்கம் நிறைய நடத்துகிறோம். மறைந்து போன பாடல்களையெல்லாம் கண்டுபிடித்து பயிற்றுவிக்கிறோம். இதை பெரியவர்களை அழைத்து தேவாரம், திருவாசகம் பயிலரங்கங்களை நடத்தினோம். இதன் மூலம், ஏராளமான குழந்தைகள் தேவாரம், திருவாசகத்தைக் கற்று, அவர்கள் தங்களது நண்பர்களுக்குக் கற்பிக்கின்றனர்.

ஓவியம், நாடகம், கிராமத்துப் பாடல், பரதநாட்டியம் போன்ற பயிலரங்கங்களை நடத்துகிறோம். நிறைய வளரிளம் பெண்கள், கல்லூரி மாணவிளுக்கு சமையல் கலை, கோலம் போடுதல் உள்ளிட்ட பயிற்சிகள் அளித்து வருகிறோம். இப்போது நிறைய பேருக்கு பூ கட்டுவதற்குக்கூடத் தெரிய வில்லை. எனவே, பூ தொடுத்தல் பயிற்சிஅளிக்கிறோம்.

மறைந்துபோன விளையாட்டுகளான பல்லாங்குழி, தாயக்கட்டை, கல்லாங்காய், பரமபதம் உள்ளிட்ட விளையாட்டுகளையும் கற்றுத் தருகிறோம்.
மூலிகை தோட்ட வகுப்பும் நடத்துகிறோம். இதில், சித்த வைத்தியர்களை அழைத்து வந்து ஒவ்வொரு மூலிகைச் செடியையும் காண்பித்து, அதன் மருத்துவக் குணங்களை விளக்கி வருகிறோம். வீட்டிலுள்ள சமையல் அறையிலேயே மிளகு, வெந்தயம் உள்ளிட்ட மருந்துகள் இருக்கின்றன என்பதையும் அறிவுறுத்துகிறோம்.

குழந்தைகளிடம் நல்ல பழக்க வழக்கங்கள், எது நல்லது - கெட்டது போன்றவற்றைக் கற்றுத் தருகிறோம். குழந்தைகள் நல்ல குடிமக்களாக வளர வேண்டும் என்பதே இந்த மரபு பவுண்டேஷனின் நோக்கம்.

ஆண்டுதோறும், சத்குரு தியாகராஜ சுவாமி பிறந்த நாள், சியாமா சாஸ்திரி பிறந்த நாளைக் கொண்டாடுவோம். இந்த இரு நிகழ்ச்சிகளையும் ரத்து செய்யாமல், மரபு பவுண்டேஷனின் முகநூல் (பேஸ்புக்) வழியாக இந்த இரு நிகழ்ச்சிகளையும் நடத்தினோம்.

ஏப்ரல்30 அன்று சென்னை, கோவை, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 5 மாணவர்களும் ஆளுக்கொரு பஞ்ச ரத்ன கீர்த்தனையை முகநூல் வழியாகப் பாடினர். இதேபோல, சியாமா சாஸ்த்ரி பிறந்த நாளன்று (ஏப்.25) முகநூல் வழியாக கோவை, சென்னை, தஞ்சாவூர் உள்பட வெவ்வேறு இடங்களிலிருந்து ஒவ்வொருவரும் இரு கீர்த்தனைகளை எடுத்து பாடினர். எனவே, தொடர்ந்து மாணிக்கவாசகர், சுந்தரமூர்த்தி சுவாமிகள் நினைவு நாளன்று முகநூல் மற்றும் ஜூம் செயலி வழியாக நிகழ்ச்சியை நடத்தவுள்ளோம் என்கிறார் ராம. கௌசல்யா.

- வி.என். ராகவன், தஞ்சாவூர்.


காணொளிகளில் சிறுவர் கதைகள்!

விடுமுறைக் காலங்களில் குழந்தைகளுக்கு வகுப்புகள் மூலம் நேரடியாக கதைகள் சொல்லிவந்த ஈரோட்டைச் சேர்ந்த வனிதாமணி அருள்வேல் ஆன்லைன் மூலமாகவும், யூடியூப் மூலமாகவும் காணொளிகள் மூலம் சிறார்களை சந்தித்துவருகிறார்:

""பல இடர்களை சந்தித்த நாம் கரோனாவும் கடந்து போகும் என்றுதான் தொடக்கத்தில் கருதினோம். ஆனால் கரோனா அத்தனை சீக்கிரம் நம்மை விட்டு அகலாது என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. அனைவரையும் பாதித்த கரோனா என்னையும் எனது செயல்பாடுகளையும் பாதித்துவிட்டது. எனக்கும் குழந்தைகளுக்கும் இடையே இருந்த நெருக்கத்தையும் தகர்த்துவிட்டது.

அதனால் காணொளிகள் மூலம் மீண்டும் சிறார்களுடன் சந்திப்பைப் புதுப்பித்துக் கொண்டேன். இதுவரை 18 யூடியூப் காணொளிகளை பதிவேற்றம் செய்துள்ளேன். இந்த காணொளிகளில், சிறார் கதைகள், பாடல்கள், விளையாட்டுக்கள், விடுகதைகள் உண்டு.

அமெரிக்காவில் வாழும் தமிழ் குழந்தைகளுக்கு கோடை விடுமுறைக் காலத்தில் தமிழில் கதைகள் சொல்லும் "வனி அத்தை கதைகள்' காணொளி பதிவுகளைத் தயார் செய்து அனுப்பியுள்ளேன். ஜப்பானைச் சேர்ந்த தமிழ் ஆர்வலர்கள் தமிழக குழந்தைகளுக்காக "கல்வி நாற்பது' என்ற செயலியை உருவாக்கியிருக்கிறார்கள். அதில் எனது பங்களிப்பிற்கும் இடம் தந்திருக்கிறார்கள்.

இப்போது ஆன்லைன் வகுப்புகளுக்காக அலைபேசி, மடிக்கணினிகளை சிறார்கள், வளர்ந்த சிறார்கள் மேல் திணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனது காணொளிகள் அதிகம் போனால் பத்து நிமிடங்கள் ஓடும்.

கரோனா ஊரடங்கு குழந்தைகளையும் மனதளவில் பாதித்துள்ளது. தங்கள் நண்பர்களை நேரில் பார்க்க முடியாத நிலைமை. விளையாட வெளியே போக முடியாத கட்டுப்பாடு. கூண்டுக்குள் வசிக்கும் பறவைகளாகியுள்ளார்கள்.

இந்த சந்தர்ப்பத்தை ஒரு வரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த நேரங்களை திறமையாக நிர்வகிக்க வேண்டும். குழந்தைகளுக்குப் பிடித்த உணவுவகைகளுடன், கதைகள், பாடல்கள், விளையாட்டு, விடுகதைகள் சொல்லி அவர்களுக்கு கரோனா பதட்டங்களை மறக்கச் செய்யலாம். கரோனாவின் அபாயத்தைச் சொல்லி பயமுறுத்தாமல் பாதுகாப்பு எச்சரிக்கைகளை விளக்க வேண்டும்.

கரோனா காலத்தில்மட்டும் அல்ல .. பொதுவாக பெண்கள் கருவுற்றிருக்கும் போது குழந்தையிடம் குடும்பத்தில் உள்ள அனைவரும் பேசி வந்தால்... வயிற்றின் இருட்டிலிருந்து குழந்தை பிறந்ததும் புதிய சூழலில் கேட்ட குரல்களைத் தெளிவாகக் கேட்கும் போது குழந்தைக்கு அப்போதே பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற உணர்வு ஏற்படும். அப்படியான குழந்தைகள் வளரும் போது அடம் பிடிக்காது.. பெரியவர்கள் சொல்வதைப் புரிந்து கொள்ளும் பக்குவம் வந்துவிடும். இந்தக் கருத்துக்கள் அடங்கிய காணொளியை கர்ப்பிணிகளுக்காக பதிவேற்றம் செய்துள்ளேன். விரைவில் பழைய நாட்கள் திரும்பி வரும் என்று நம்புவோம்'' என்கிறார் வனிதாமணி.

100 தலைப்புகளில் நிகழ்வுகள்!

கரோனா காலத்திலும் தமிழ்ப் பணிக்காக ஓர் இலக்கிய அமைப்பு ஜெர்மனியைத் தலைமை இடமாக கொண்டு இயங்கி வருவது "தமிழ் மரபு அறக்கட்டளை' தான். இந்த ஊரடங்கு காலத்தில் "தமிழ் மரபு அறக்கட்டளை' நூறு தமிழ் நிகழ்ச்சிகளை இணையத்தின் மூலமாக நடத்தி சாதனை புரிந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் பெரும்பாலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ் அறிஞர்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், ஆராய்ச்சி வல்லுநர்கள் கலந்து கொண்டு தமிழின் பெருமை, தொன்மை, கல்வெட்டுகள், இன்றைய தமிழின் தேவை... தொல்காப்பியர் காலம் முதல் இன்று வரை பெண்கள் தொடர்பான அச்சம் என நூறு தலைப்புகளில் சொற்பொழிவுகள், கலந்துரையாடல்கள், பயிலரங்கம் ஏற்பாடு செய்திருக்கிறது. அவற்றில் உலகத் தமிழ் ஆர்வலர்களையும் இணைத்தது ஒரு சவாலாக அமைந்தாலும் அது சாதனையாக பரிணமித்திருக்கிறது. இது எப்படி சாத்தியமாயிற்று என அறக்கட்டளைத் தலைவர் சுபாஷினி சொல்கிறார்:

""உலக மக்களை கொரோனா பிரித்து வைத்தாலும், சமூக இடைவெளியைப் பேணச் சொன்னாலும் தமிழும், இணையமும் உலகெங்குமுள்ள தமிழ் ஆர்வலர்களை இணைத்துள்ளது. தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி, பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி போன்ற கல்லூரிகளும் எங்களது முயற்சியில் பங்களிப்பு அளித்தன. தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் இந்த நிகழ்ச்சிகளை இணையம் வழி நடத்த முன்வந்ததால் திட்டமிட்டபடி நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக துல்லியமாக நடந்தேறின. இந்த நிகழ்ச்சிகள்மூலம் தமிழின் பெருமைகளை உலகத் தமிழர்களிடத்தில் கொண்டு போய்ச் சேர்த்துள்ளோம் என்பது கரோனா காலத்தில் குறிப்பிடத்தக்க சாதனை'' என்கிறார் சுபாஷினி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com