பசி எவ்வாறு ஏற்படுகிறது?

உணவு, உடை, உறைவிடம் என்ற மூன்றும்தான் மனித வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகள்.
பசி எவ்வாறு ஏற்படுகிறது?


உணவு, உடை, உறைவிடம் என்ற மூன்றும்தான் மனித வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகள். நம் ஒவ்வொருவருக்கும், இந்த மூன்றும்தான் அத்தியாவசியத் தேவைகள் என்பதை நன்றாகஉணர வைத்துக் கொண்டிருக்கிறது உயிருக்கு உத்திரவாதமில்லாத இன்றைய கரோனா உலகம். ஒருவேளை பசியாற ஒரு கவளம் சோறு இருந்தால் போதுமென்ற நிலைக்கு ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடில்லாமல் தள்ளப்பட்டிருக்கிறோம். பசியாற உணவும், அந்த உணவு தொடர்ச்சியாகக் கிடைத்துக்கொண்டிருக்க உற்பத்தியும்தான் முக்கியம் என்பதைப் புரிய வைத்திருக்கிற நேரம் இது.

பசி ருசியறியாது ; பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்றெல்லாம் பழமொழிகள் கூறும். பசியே, பெரும்பாலான சமூக சீர்கேடுகளுக்கும் கூட வழிவகுத்துவிடுகிறது. பெரும்பொருள் வைத்திருப்பவர்கள் தங்கள் சந்ததிகளுக்கும், சுயவாழ்வுக்காகவும் மேலும் மேலும் பணத்தையும் பொருளையும் சேமித்து வைத்துக்கொண்டு, சீரும் சிறப்புமாக வாழ்ந்து கொண்டிருக்கும் நிலை ஒருபுறமிருக்க, ஒரு வேளை பசி தாங்கமுடியாமல் உணவைத் திருடியதற்காக ஒன்றுமற்றவனை அடித்தே கொல்லும் இரக்கமற்ற சமூகத்தில்தான் நாமும் மக்கிப்போன மனதையும், இறுகிப்போன இதயத்தையும் வெறும் உறுப்பாகவே வைத்துக்கொண்டு வாழந்துகொண்டிருக்கிறோம்.

பகுத்துண்டு வாழ்பவர்கள், தாங்கள் பசித்திருந்தாலும், பிறர் பசி தீர்த்து திருப்தியடைவதிலேயே தங்கள் பசியும் தீர்ந்துவிட்டதாக அகமகிழ்வார்கள். ஆனால், அப்படிப்பட்ட நிலை இல்லாமல், பசியால் வாடிச் செத்தொழிபவன் ஒழியட்டும் என்று வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பதால்தான், இன்றளவும் பசி, பட்டினியை நம்மால் ஒழிக்க இயலவில்லை.

கொல்கத்தாவில் வசிக்கும் சூரியயோகி மகான் சூரியனிடமிருந்து 20 நிமிடங்கள் ஆற்றலைப் பெற்றுக்கொண்டு, பசிக்கு உணவும், குடிப்பதற்கு தண்ணீரும் இல்லாமலேயே பத்து வருடங்களாக உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இதுபோல், உணவும், நீரும் மட்டுமே இருந்துவிட்டால் அடிப்படைத் தேவையை மட்டுமே பூர்த்தி செய்துகொள்ளலாம் என்ற நிலை மாறி, பசியே இல்லை, உணவும் நீரும் தேவையில்லை என்ற நிலை அனைவருக்கும் வந்துவிட்டால், பணம், பொருள், வசதி, ஆடம்பரம் என்ற அத்தனை சொற்களும் மறைந்து அழிந்துவிடும்.

பெரும்பாலான பசி, பட்டினி இறப்புகள், உலகப் போர்களுக்குப் பின்னர் ஏற்பட்ட உணவு பற்றாக்குறையாலும், உற்பத்தி பாதிப்பாலும் ஏற்பட்ட பஞ்சத்தினால்தான் என்றாலும், அவற்றிலிருந்து மக்களை முழுவதும் மீட்கஇயலாமல் போனதற்கு தற்போதுள்ளது போன்ற வசதிகள் இல்லாததுதான். இதற்குச் சான்றாக, கி.மு 265-இல் கலிங்கப் பேரரசின்போது ஏற்பட்ட பஞ்சத்திலிருந்து, இரண்டாம்; உலகப்போருக்குப்பின்னர் 1943-இல் 20 முதல் 40 லட்சம் மக்களைப் பலி வாங்கிய வங்காளப் பஞ்சம் வரை கூறலாம்.

உலகளவில் பார்க்கும்போது, 1870, 1890, 1920, 1940, 1960 காலகட்டங்களில், இந்தியா, சீனா, ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட பஞ்சத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கையைவிட, 1970 லிருந்து, 2016 வரை ஆப்பிரிக்கா, காங்கோ, சூடான், உகாண்டா, சோமாலியா போன்ற நாடுகளில் ஏற்பட்ட பஞ்சத்தின் போது, இறப்பு எண்ணிக்கை கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இதற்கு, உலக நிறுவனங்கள், சுகாதார அமைப்புகள், மனித நேயம், உணவு கிடைப்பதற்கான உடனடித் தீர்வு, மருத்துவ வசதிகள் போன்றவைகளே காரணம். இதனுடன் சேர்ந்து, பேரிடர் மேலாண்மை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், உணவு தொழில் நுட்பம் போன்றவைகளின் உதவியால், இயற்கையாக ஏற்பட்ட அல்லது செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட பஞ்சத்தினால், முன்பு இருந்ததைவிட இறப்பு எண்ணிக்கையை மனித சக்தியால் ஓரளவு குறைத்துக்கொள்ள முடிந்திருக்கிறது.

"உலகின் உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து நிலை-2019' என்ற உலக சுகாதார நிறுவனத்தின் கருத்துக்கணிப்பின்படி, இந்தியாவில், 14.5 சதவிகிதத்தினர் ஊட்டச்சத்து குறைபாட்டாலும், 51.4 சதவிகித 15 முதல் 49 வயதிற்குட்பட்ட பெண்கள் இரத்த சோகையாலும், 37.9 சதவிகித 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் வளர்ச்சி குறைபாட்டாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவையனைத்திற்குமே, வறுமையால் ஏற்படும் பசி, பட்டினியே காரணம். பசியால் ஏற்படும் பட்டினிச் சாவுதான் இறப்பிற்கான முதல் காரணமாக இருக்கிறது என்பது நமது அதிர்ச்சியான தகவல்தான்.

நாட்பட்ட ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்குவதற்கு எவ்வளவுதான் முயற்சி செய்தாலும், உணவு இல்லாமல் பட்டினி கிடக்கும் ஏழ்மை நிலையை ஒழிக்கும் வரையில், ஊட்டச்சத்து குறைபாடும் இருந்துகொண்டுதான் இருக்கும் என்பதும் வல்லுநர்களின் கருத்து. தீவிர நோய்களான காசநோய், தட்டம்மை, வயிற்றுப்போக்கு போன்றவைகளும், தொற்றுக்களால் ஏற்படும் நோய்களும் பசியால், பட்டினியால், ஊட்டச்சத்து குறைபாட்டால் வருவதே என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

பசியை தமிழில் "பசி' என்று மட்டும்தான் குறிப்பிடுவோம். ஆனால், ஆங்கிலத்தில் "ஏன்ய்ஞ்ங்ழ், அல்ல்ங்ற்ண்ற்ங்' என்ற இரண்டு வார்த்தைகளாலும் குறிப்பிடுவோம். உண்மையில் இரண்டும் ஒன்றா அல்லது, வேறுபாடு உண்டா என்று பலருக்குக் குழப்பம் ஏற்படலாம்.இதிலென்ன குழப்பம்? எதுவானாலும், சாப்பிட்டுவிட்டால் போய்விடப்போகிறது என்றும் நினைக்கலாம். இதற்குப் பதில், இரண்டும் வேறு வேறு பொருள் கொண்டது; வெவ்வேறு நிலைகளில் ஏற்படுவது.

சாப்பிடும் நேரம் வரும்போது மட்டும், காத்திருப்புடன் ஏற்படும் உணர்வும், ஒரு வேளை, இரு வேளை, ஒரு நாள் அல்லது இரண்டு மூன்று நாட்கள்கூட உண்ணுவதற்கு எந்த உணவும் கிடைக்காமல்;, அதற்கு ஒரு வழியும் இல்லாமல் வதையும் மனிதனுக்கு வரும் உணர்வு தான் பசி என்பது. அது எல்லோருக்கும் பொதுவானது.

காலை உணவை முடித்து, ஒரு மணி நேரம் கழித்தபின்பு கூட, வரும் வழியில் ஒரு டீ குடித்துவிட்டு, இரண்டு வடை சாப்பிடவேண்டும்போல் இருக்கிறது என்று மூளை இடும் கட்டளைக்கு அடிபணிந்து, சிறிதாகப் பசிப்பது போலவும் உணர்ந்து, வயிறு செய்யும் ஒருவித பாசாங்கு உணர்வுக்காக அந்த உணவுப்பொருளையும் சாப்பிட்டுவிட்டு, திருப்தியடைந்ததுபோல் மகிழும் ஒரு நிலைக்குதான் ஹல்ல்ங்ற்ண்ற்ங் என்று பெயர். அதாவது, விருப்பத்தின்பேரில் பசியைப் போக்கிக்கொள்வது போன்ற ஒரு மனநிலை.

பசி என்பதும் வயிறு நிரம்புதல் என்பதும் ஒருவிதமான உணர்வுகள்தான். பசியானது, உணவு உட்கொள்ளுதலை ஊக்கப்படுத்தும் நிலையில், வயிறு நிரம்புதல் என்பது பசியல்லாத, ஆனால் ஒரு விதமான திருப்பியடைந்த நிலையைக் குறிக்கிறது.

நரம்புத் தூண்டல்கள், செரிமான மண்டலத்தின் சமிக்ஞைகள், ரத்ததிலுள்ள ஊட்டச்சத்துகளின் அளவுகள், செரிமான மண்டலத்தில் சுரக்கப்படும் ஹார்மோன்கள், மனம் சார்ந்த எண்ணங்கள் போன்ற அனைத்தையும் உள்ளடக்கி, ஒன்றுடன் ஒன்று இணைந்தும் நிகழும் உணர்வு சார்ந்த ஒரு வேதிவினை நிகழ்வதுதான் பசி என்ற நிலையும், உணவு உண்டபின் திருப்தியடையும் (satiety) நிலையும்.

(அடுத்த இதழில்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com