"ஆட்டிசம்" குறித்த மொழிபெயர்ப்பு சிரமம்!

ஆரோக்கியமான குடும்ப சூழல், சுதந்திரமான சிந்தனையும் முற்போக்கான எண்ணங்களும் செயல்பாடும் கொண்டவர் க்ருஷாங்கினி.
"ஆட்டிசம்" குறித்த மொழிபெயர்ப்பு சிரமம்!
Updated on
4 min read

ஆரோக்கியமான குடும்ப சூழல், சுதந்திரமான சிந்தனையும் முற்போக்கான எண்ணங்களும் செயல்பாடும் கொண்டவர் க்ருஷாங்கினி. தாராபுரத்தில் பிறந்தவர், தற்போது சென்னையில் வசித்து வருகிறார். மொழி இவருக்கு வரம், மொழிபெயர்ப்பு இவருக்கு மூச்சு. நம்பிக்கையோடும் புன்னகையோடும் எதனையும் எதிர் கொள்கிறார். தமிழக அரசின் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருது பெற்றிருக்கிறார். இவரது கணவர் நாகராஜன் 'கலைச்செம்மல்' விருது பெற்றிருக்கிறார். ஒரே மேடையில் கணவன் மனைவி இருவருமே விருது பெற்றிருக்கிறார்கள். அவர் கடந்து வந்த பாதையை, அனுபவத்தை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்: 

விருது பெற்றதில் எப்படி உணர்கிறீர்கள்?
சிறந்த அங்கீகாரம் என்று கருதுகிறேன். பெண்களுக்கான மரியாதை என்று நினைத்து கொள்கிறேன். இன்னும் நிறைய  உழைக்க வேண்டும் என்னும் உத்வேகத்தை தந்திருப்பதாக நினைக்கிறேன். எந்தப் பெண் அங்கீகரிக்கப்பட்டாலும் அது ஒட்டுமொத்த பெண்களுக்கான அங்கீகாரமாக எடுத்துக் கொள்ள வேண்டுமென்றே எப்போதும் சொல்லி வந்திருக்கிறேன்.

மொழிபெயர்ப்பில் ஆர்வம் வந்ததைப் பற்றி சொல்லுங்களேன்?

எவ்வளவு தடைகள் வந்தாலும் நம் மனதிற்குப் பிடித்த வேலையை நம்மால் விட முடியாதல்லவா? மொழி பெயர்ப்பு என்பது ஒரு கலை. யாரோ ஒருவரின் சொற்களுக்கு நாம் சரியான சொற்களைத் தேடுகிறோம். தேடிக் கண்டடைந்த சொற்களால் நாம் மொழி அறியாத ஒருவரின் சிந்தனையை மற்றொரு மொழி பேசும் வாசகர்களிடம் கொண்டு சேர்க்கிறோம். நல்ல சிந்தனைப் பரிவர்த்தனைக்குப் பாலமாக நம்முடைய முயற்சியும் உழைப்பும் அமைகிறது. மொழி பெயர்ப்பு இலக்கிய உலகம் மட்டுமல்லாது இன்னும் பல துறைகளிலும் தேவைப்படுகிறது. மனித சமூகத்திற்கு நம்மாலான பங்களிப்பு என்று எண்ணியே இந்தத் துறையில் என்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறேன். 

அம்மா பூரணி எழுத்தாளர். 1935-இல் ஹிந்தி வகுப்புகள் எடுத்துக் கொண்டிருந்தார். சுதந்திரப் போராட்டத்தில் நேரடியாக ஈடுபட முடியாத குடும்ப சூழலில் என் தாயார் ஹிந்தி வகுப்புகள் எடுப்பது தேசிய சிந்தனையை வளர்ப்பதற்கான வழிமுறை என்று நினைத்தார். அதனையே செயல்படுத்தவும் செய்தார். ஒன்பது பிள்ளைகள்,பெரிய குடும்பம் என்றாலும் ஓரளவுக்கு வசதியான குடும்பமும் கூட . 1960வரை அம்மா இந்தப் பணியில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார்கள். பிரபல  மொழிபெயர்ப்பாளர் சரஸ்வதி ராம்நாத் அம்மாவின் மாணவி. அம்மாவும் நிறைய மொழி பெயர்ப்புகளை அப்போது செய்திருக்கிறார்.

எங்கள் வீட்டில் எப்போதும் மொழி தொடர்பான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. படிப்பது சுவாசிப்பதைப் போல இயல்பாக இருந்தது. என் எட்டு வயதிலேயே நான் வாசிப்பை அன்றாட வழக்கமாக்கிக் கொண்டிருந்தேன். 

ரஷ்ய கதைகளை ஆர்வமாகப் படிப்பேன். பதின்ம வயதுகளில் பல மொழி நாவல்களைப் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கொரு விநோதமான பழக்கம் இருந்தது. வெளிநாட்டுக் கதைகளில் வரும் கதாபாத்திரங்களுக்கு நானே ஒரு புதிய தமிழ்பெயரை வைத்துக் கொள்வேன், நதிக்கரையில் கதை நடப்பது போல வந்தால் அதை நான் வாழும் இடத்தின் நதிக்கரை போல கற்பனை செய்து கொண்டு படிப்பேன். அப்படிப் படிக்கும் போது ஒரு நெருக்கத்தை உணர்ந்தேன். இது என்னுடைய கற்பனைக்கு ஆரம்பம் என்று நினைக்கிறேன். 

என் சகோதரர் ராமசாமி, ரவீந்திரநாத் தாகூரின்  "கீதாஞ்சலி'யை மொழிபெயர்த்தார். அப்போது எனக்கு ஆறு வயது. இப்படி மொழிபெயர்ப்புக்கான சூழலில் நான் வளர்ந்ததும் சிறு வயதிலேயே விளையாட்டுப் போல அந்தப் பணியும் எனக்கு இன்றியமையாத ஒரு விஷயமாகி விட்டது.

உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும்?


ஹிந்தி வகுப்புகள் எங்கள் வீட்டின் ஒரு அன்றாட நடைமுறை என்பதால் ஹிந்தி இயல்பாகவே வந்து விட்டது. பின்னர் எம்.ஏ.ஹிந்தி படித்தேன், மலையாளம் ஓரளவுக்கு தெரியும். ஆங்கிலம், சமஸ்கிருதம் படித்திருக்கிறேன். 

உங்கள் படைப்புகள் பல தொகுப்பு நூல்களிலும் இடம் பெற்றிருக்கிறதே?

ஆமாம், “இந்த நூற்றாண்டு சிறு கதைகள் இலக்கிய வட்டம்” சிறுகதை தொகுப்பு, நவீன விருட்சம் சிறுகதை தொகுப்பு, ந. பிச்சமூர்த்தி நினைவாக தொகுத்த சிறுகதை மற்றும் கவிதை தொகுப்பிலும் என்னுடைய கவிதை
களும் கதைகளும் இடம் பெற்றுள்ளன. மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் என்னுடைய கதைகள், கவிதைகள் மொழிபெயர்ப்பு செய்யப் பட்டிருக்கின்றன.

உங்கள் படைப்புகளை பற்றி சொல்லுங்களேன்?

இதுவரை, ஏழு புத்தகங்கள் என்னுடைய படைப்பாக வந்திருக்கின்றன. "கானல் சதுரம்' கவிதைத் தொகுதி, “"சமகாலப் புள்ளிகள்'”சிறுகதைத் தொகுதி, “"பரதம் புரிதல்'” என்று பரத நாட்டியம் பற்றிய அடிப்படைப் புரிதலை ஏற்படுத்தும் கட்டுரைகள் கொண்டது, இந்தப் புத்தகத்தை எழுதுவதற்கு பரத நாட்டியக் கலைஞரான என் மகளின் உதவி பெருமளவில் இருந்ததை இங்கே குறிப்பிட வேண்டும்.



முற்போக்கான சிந்தனை எப்படி உங்கள் எழுத்துகளில் இவ்வளவு வீரியத்துடன் வெளிப்படுகிறது?

என்னுடைய அம்மா முற்போக்கான சிந்தனைகள் கொண்டவர். வீட்டுக்கு யாராவது கணவனை இழந்தவர்கள் வந்தாலும் அவர்களுக்கும் குங்குமம் தந்து பூ வைத்து விட்டு படிக்கச் சொல்வார். அடுப்படியில் இருந்தாலும் பெண் தன் குடும்பத்தை எல்லா நிலையிலும் காப்பதற்கும் நிர்வகிப்பதற்கும் ஆற்றல் கொண்டவள். பெண்கள் துணிவோடு வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டுமென அறிவுறுத்துவதோடு மாதர் சங்கத்திலும் இருந்து தன்னால் இயன்றதை செய்திருக்கிறார்கள். அந்தத் தாக்கம் எனக்குள்ளும் சிறு வயது முதலே இருக்கிறது.

"கவிதைகள் கையெழுத்தில்' என்ற நூல் மிகவும் பேசப்பட்டதே?

ஆம், இந்த நூலை தட்டச்சு செய்து வடிவமைக்கவில்லை. நூல் முழுவதும் கையெழுத்திலேயே அமைந்தது. நல்ல ஓவியரான என் கணவர் தன் கைகளினாலேயே எழுதி இருந்தார். கவிதைக்குப் பொருத்தமான ஓவியங்களையும் அவரே வரைந்து தந்தார். ஒரு புதிய வடிவமைப்பில் கவிதைகள் நூல் ஓவிய நூல் போல அமைந்து விட்டது. என் கணவருக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்.


மொழிபெயர்ப்பு நூல்கள் பற்றி...

ஹிந்தியிலிருந்து தான் பெரும்பாலும் என்னுடைய மொழி பெயர்ப்புகள் இருந்திருக்கின்றன. ஜெர்மன் நாடகம் "தீரத்தாய்' என்ற பெயரில் தமிழில் கொண்டு வந்திருக்கிறேன். மிருதுலா கர்க் எழுதிய ஹிந்தி நாவல் (மில்ஜுல் மன்) "இணைந்த மனம்' என்னும் தலைப்பில் சாகித்ய அகாதெமி வெளியீடாக வெளிவந்து உள்ளது.  “"பெண் எனும் பேராளுமைகள்' தொகுப்பும் மொழி
பெயர்ப்பும் இதில் பெண் கலைஞர்கள் தாங்கள் கற்ற கலையை எப்படித் தக்க வைத்துக் கொண்டு தனக்கென ஒரு இடத்தை, அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள் என்பது பற்றி எழுதியிருக்கிறேன்.

நாடு முழுவதும் தலித் மக்களின் படைப்புகளில் சிலவற்றை தேடி எடுத்து "அம்பேத்கர் இன்னும் அதிகம் தேவை' என்று நூலாக கொண்டு வந்தேன். 
ஆங்கிலத்தில் இருந்து இரண்டே  நூல்களைத் தான் மொழி பெயர்த்திருக்கிறேன். எஸ்.சாரதா ஆங்கிலத்தில் எழுதிய (ஓஹப்ஹந்ள்ட்ங்ற்ழ்ஹ- தன்ந்ம்ண்ய்ண்ஈங்ஸ்ண்-தங்ம்ண்ய்ண்ள்ஸ்ரீங்ய்ஸ்ரீங்ள்) நூலை  "கலாúக்ஷத்திரா}ருக்மிணிதேவி} சில நினைவுகள்} சில பகிர்வுகள்' என்னும் தலைப்பில் தமிழாக்கம் செய்தேன்.

"ஆட்டிசம்' பாதிப்பு உள்ள குழந்தைகளோடு செயல்பட வேண்டிய தருணம் வந்த போது மனம் நடுங்கிப் போய்விட்டேன். இந்தக் குழந்தைகளோடு வாழும் பெற்றோருக்கு நாம் என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்வி என்னை தூங்க விடவில்லை. "ஆட்டிசம்' பற்றிய ஒரு நூல், அறிவியல் தொடர்பானது என்றும் சொல்லலாம், அதனை மொழி பெயர்க்க சிரமங்கள் இருந்தன. ஆனாலும் அதனை செய்ய வேண்டும் அது ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் பராமரிக்கும் பெற்றோருக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்குமென மெனக்கெட்டேன். அதிலே ஒரு மனநிறைவு எனக்கு உண்டு.

"குருவே சரணம்'”என்றொரு இசைக் கலைஞர்கள் பற்றிய புத்தகம். சாருமதி ராமசந்திரன், வீணை ரங்கநாயகி, விக்கு விநாயக ராம் போன்ற இசைக் கலைஞர்களைத் தேடி சென்று அவர்களின் குருமார்களைப் பற்றி அவர்கள் கற்றுத் தந்த விதம்,  அடுத்தத் தலைமுறைக்கு அவர்கள் எப்படித் தாங்கள் கற்றுக் கொண்ட சங்கீதத்தை சொல்லிக் கொடுக்கிறார்கள், இசை உலகில் அவர்களின் அனுபவங்கள் என்று பதினெட்டு இசை கலைஞர்களை நேர்காணல் செய்து புத்தகமாகக் கொண்டு வந்தேன்.

இன்னும் நிறைய எழுத வேண்டும், மூட வழக்கங்களை சமூகத்தின் அவலங்களைப் பார்க்கும் போதெல்லாம் அதனை ஒழிக்க என்ன செய்யப்போகிறோம் என்ற எண்ணம் தோன்றிக் கொண்டே இருக்கிறது. இன்னும் நிறைய வேலை இருப்பதாகவே உணர்கிறேன்.

உங்கள் புனைபெயருக்கு ஏதாவது காரணம் உண்டா? 

சிறப்பாக காரணம் ஒன்றும் இல்லை. என் இயற்பெயர் பிருந்தா. ஒரு காரணப் பெயர் தான் க்ருஷாங்கினி. புல் போன்று ஒல்லியான தேக அமைப்பு உடையவள் என்று பொருள். அது மனதிற்கு பிடித்திருந்தது. அவ்வளவு தான். 

மொழி பெயர்ப்புக்கான நூலை எப்படி தேர்வு செய்கிறீர்கள்?

நான் படிக்கும் பொழுது என்னை பாதிக்கும் நூல்கள், இந்தக் கருத்து மக்களைச் சென்றடைந்தால் நன்றாய் இருக்குமென நான் நினைக்கும் நல்ல புத்தகங்கள் இவற்றைத் தான் மொழிபெயர்ப்புக்கென எடுத்து கொள்கிறேன்.

இப்போது நீங்கள் செய்து கொண்டிருக்கும் பணி?

அம்பேத்கர் தொகுத்த பாலி மொழி அகராதியை தமிழுக்கு மொழி பெயர்த்து வருகிறேன். இதில் நான்கு பகுதிகள் உள்ளன. பாலி மொழியில் இலக்கணம், ஏறத்தாழ தமிழ் மொழி இலக்கணம் போலவே தான் இருக்கும். 

1956-இல் அம்பேத்கர் அதற்கு முன்னுரையும் தந்திருக்கிறார். முதலில் அகராதி, பாலி மொழியை தேவநாகரி வடிவத்தில் தந்திருக்கிறார். அதில் அம்பேத்கர் ஒவ்வொரு சொல்லுக்கும் அதன் ஆதி சொற்களை அதாவது வேர் சொற்களையும் குறிப்பிட்டிருக்கிறார். அவர் 17 மொழிகள் அறிந்தவர்.

ஆங்கிலம், மராத்தி, குஜராத்தி, ஹிந்தி, பஞ்சாபி மொழிகளிலும் அவர் அதற்கான சொற்களைத் தந்திருப்பார். "அ' வரிசை சொற்களை மட்டும் அவர் இப்படி தந்திருக்கிறார். பாலி மொழி இலக்கணம் சமஸ்கிருதத்தை அடியொற்றியதும் கூட. அதனால் அந்த இலக்கணத்தை மொழி பெயர்ப்பதில் சிரமம் இல்லை. புத்தரின் வழிபாடு முறை ஒரு பகுதியாகவே இருக்கிறது, இதனை பாலி மொழியிலிருந்து மராத்தியில் மொழி பெயர்த்து அம்பேத்கர் தந்திருக்கிறார்.  அதனை நான் தமிழாக்கம் செய்திருக்கிறேன். 

ஏறத்தாழ 1000 பக்கங்கள். நான் இதிலே தமிழாக்கம் மட்டும் செய்யாமல் பாலி மொழியின் சொற்களை எப்படி உச்சரிக்க வேண்டும் என்ற குறிப்பும் அதற்கான சமஸ்கிருத சொற்களும் கூட இணைத்திருக்கிறேன். இதை எழுதுவதை விட வடிவமைப்பதில் தான் சிரமங்களை எதிர் கொண்டேன். இத்தனை மொழிகளை கொண்டு ஒரு பக்கத்தை வடிவமைப்பது சிரமமாக இருந்தது. நூல் வடிவம் ஏறத்தாழ முடிந்து விட்டது. தமிழ் வளர்ச்சி துறை இதனை வெளியிட  உதவுவதாக சொல்லியிருக்கிறார்கள். எல்லாம் நன்றாகவே இருக்கின்றன நலமே விளைகிறது. 

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com