இயற்கையோடு வாழ்வோம்-நலமாக வாழ்வோம்! - மருத்துவர் என்.ராதிகா
By -ஸ்ரீ தேவி குமரேசன் | Published On : 12th August 2020 06:00 AM | Last Updated : 12th August 2020 06:00 AM | அ+அ அ- |

பஞ்ச பூதங்களான நீர், நெருப்பு, காற்று, மண் என இயற்கை சார்ந்த சிகிச்சை முறைகளை பரிந்துரைப்பதுதான் இயற்கை வைத்தியம். அதாவது நீரை வைத்து செய்வது வாட்டர் தெரபி, மண்ணை வைத்து செய்வது மட் தெரபி, நிறங்களை வைத்து செய்வது கலர் தெரபி என சொல்கிறோம். மேலும், அக்குபஞ்சர், மசாஜ், யோகா போன்றவற்றையும் இது உள்ளடக்கியது என்று கூறலாம் . இந்த சிகிச்சை முறைக்கு பெரிய பெரிய நோய்களையும் தீர்த்தும் வைக்கும் வல்லமை உண்டு என்கிறார் அண்ணா சித்த மருத்துவமனையில் பணியாற்றி வரும் யோகா மற்றும் நேச்ரோபதி மருத்துவர் என். ராதிகா. சமீபகாலமாக உலகை ஆட்டிப்படைத்து வரும் கரோனா வைரஸ் தொற்றின் பிடியில் சிக்கி தனிமைப்படுத்தப்பட்டு முகாம்களில் தங்கியிருப்பவர்களுக்கு மாதவரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் யோகா பயிற்சி அளித்து வருகிறார் இவர். இவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:
""நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்வியலில் இருந்து நவீன காலத்திற்கு ஏற்ப மாற்றம் கண்டதே நமது இன்றைய எல்லா பிரச்னைகளுக்கும் காரணம். இதிலிருந்து மீள்வதற்கு நாம் தற்போது குறைந்தபட்சம் இரண்டு விஷயங்களையாவது கடைப்பிடிக்க வேண்டும்.
முதலாவது, நேரத்திற்கு சாப்பிடுவது. ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது. இப்போதெல்லாம் பெரும்பாலான வீடுகளில் குழந்தைகளின் காலை நேர அவசர உணவு ஜாம் தடவிய இரண்டு பிரட் துண்டுகளாகத்தான் இருக்கிறது. அதுபோன்று மதிய உணவாகக் கொடுக்கும் உணவிலும் ஆரோக்கியம் இல்லை.
ஆனால் முந்தைய காலங்களில் அப்படியில்லை. கட்டாயமாக இட்லி , தோசை போன்ற உணவு இருக்கும். பிள்ளைகளுக்கு நேரமில்லையென்றாலும், அம்மா வாயில் திணித்தாவது அனுப்புவார்கள். இப்படி நமது லைஃப் ஸ்டைல் மாறும் போதுதான் உடலில் பல பிரச்னைகள் ஏற்படுகிறது.
இரண்டாவது, இப்போதெல்லாம் நேரமின்மை பெரும் பிரச்னையாக இருக்கிறது. இதனால் உடற்பயிற்சி செய்வது எல்லாம் மறந்தே போனது. நேரம் இல்லை என்று சொல்வதிலிருந்து நிச்சயம் நாம் அனைவரும் வெளியே வரவேண்டும். காலையோ மாலையோ குறைந்தது அரைமணி நேரமாவது நமக்காக ஒதுக்கி உடற்பயிற்சி செய்ய வேண்டும் அல்லது நடைப்பயிற்சி செய்ய வேண்டும். இதன் மூலம் தேவையில்லாத கொழுப்புகள் நம் உடலில் சேர்வதை தடுக்க முடியும்.
அடுத்தபடியாக துரித உணவுகள் சாப்பிடுவதை மாற்றவேண்டும். அதிலும் நாங்கள் கட்டாயமாக வலியுறுத்துவது மைதா சார்ந்த உணவுகள் வேண்டாம் என்பதுதான். முடிந்த அளவு காய்கறிகளையும், பழ வகைகளையும் அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள்.
அடுத்தபடியாக நமது உடலில் பல பிரச்னைகள் உண்டாக காரணமாக இருப்பது உணவில் பிராய்லர் கோழி இறைச்சியை அதிகளவில் சேர்த்துக் கொள்வது. பொதுவாக பிராய்லர் கோழியின் துரித வளர்ச்சிக்காக அதற்கு ஸ்டீராய்ட் கொடுக்கப்படுகிறது. இதை நாம் உண்ணும்போது ஸ்டிராய்டின் பாதிப்பு நமது உடலிலும் ஏற்படுகிறது. இதுவே பெண் குழந்தைகள் மிகச் சிறிய வயதிலேயே பூப்பெய்துவதற்கான காரணம். பெரும்பாலானவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படுவதற்கும் காரணமாக அமைகிறது. இளம்பெண்களின் சினைமுட்டைகள் உருவாவதை தடுத்து குழந்தையின்மைக்கும் காரணமாகிறது. இப்போது நாமெல்லாம் முற்போக்காக யோசிக்கிறோம் முற்போக்காக யோசிப்பது தவறு இல்லைதான். அதேசமயம் ஆரோக்கியத்தை பற்றியும் யோசிக்க வேண்டும்.
முன்பெல்லாம் பூப்பெய்தும் குழந்தைகளுக்கு உளுந்தங்களி, நல்லெண்ணெய், சிகப்பரிசி புட்டு போன்றவற்றைக் கொடுத்தார்கள். உளுந்தங்களி இடுப்பு எலும்புகளுக்கு பலம் கொடுக்கும். நல்லெண்ணெய் உடல் உஷ்ணத்தை குறைத்தது. சிகப்பரிசி புட்டு இரும்பு சத்து, கால்சியம் சத்து போன்றவற்றை கொடுத்தது. ஆனால், காலப்போக்கில் இதையெல்லாம் மறந்துவிட்டோம். நாங்கள் சொல்வது என்னவென்றால், இதுவரை கடந்ததை விட்டுவிடுவோம். உங்கள் வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தார்கள் என்றால் மாதவிடாய் காலமான அந்த மூன்று நாட்களாவது இதுபோன்ற உணவை குழந்தைகளுக்கு கொடுக்கத் தொடங்குங்கள்.
அதுபோன்று இட்லி தோசைக்கு மாவு அரைக்கும்போது இரண்டு கப் வெள்ளை அரிசி சேர்த்தால் 2 கப் சிகப்பரிசியை சேர்த்து அரைக்கலாம். தோசை வார்க்கும்போது அதன்மேல் துருவிய கேரட், வெங்காயம் சிறிது சேர்த்து கொடுக்கலாம். உணவில் கீரை வகைகள், சிறுதானியங்களை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் .
பொதுவாக உடலில் சின்ன உபாதை ஏற்பட்டாலும் மருந்து மாத்திரைகள் சார்ந்து இல்லாமல், உணவே மருந்து என்பதை உணர வேண்டும்.
தூக்கம் வரவில்லை, தலைவலி, ஸ்ட்ரெஸ்ஸாக இருந்தால் உடனே மாத்திரை எடுத்துக் கொள்கிறார்கள். அப்படியில்லாமல், ரொம்ப சிம்பிளா ஒரு கால் பக்கெட் சூடு பொறுக்குமளவு தண்ணீரில் அரை தேக்கரண்டி ஆப்ப சோடாவோ, அல்லது ஒரு தேக்கரண்டி உப்போ போட்டு கலந்து காலை 15 நிமிடம் வைத்திருந்து எடுக்கும்போது, தலைவலி, ஸ்ட்ரெஸ் , டென்ஷன் எல்லாம் குறைந்துவிடும். தூக்கமும் நன்றாக வரும்.
முடிந்தளவு வெல்லம், இஞ்சிச்சாறு கலந்த எலுமிச்சைச் சாறு குடியுங்கள். சர்க்கரை சேர்த்து குடிக்காதீர்கள். மாலை நேரத்தில் முளைக்கட்டிய பயறு வகைகளை சாப்பிடுங்கள். வெறுமென சாப்பிட முடியவில்லை என்றால், சிறிது வெல்லம், ஏலப்பொடி, வேர்க்கடலையோ, பாதாமோ, உலர் திராட்சையோ சேர்த்து சாப்பிட்டால் சுவையாகவும் இருக்கும். உடலுக்கு ஆரோக்கியமாகவும் இருக்கும். நீரிழிவு நோயாளிகள் முளைக் கட்டி பயறுடன் வெள்ளரிக்காயோ, தக்காளியோ, வெங்காயமோ, கொய்யாப் பழமோ சிறிது மிளகுத்தூள், சிறிது உப்பு சேர்த்து, 1 சொட்டு எலுமிச்சைச்சாறு விட்டு சாப்பிடலாம். இது மல்டி விட்டமின் மாத்திரையில் 100 சதவீத சத்து கிடைக்கிறது என்றால், முளைக்கட்டின பயறில் 200 சதவீத சத்து கிடைக்கும்.
எல்லாருமே தினமும் ஒரு 5 நிமிடம் வேப்பிலை, மஞ்சள், உப்பு சேர்த்து கொதிக்க வைத்து ஆவிப் பிடிப்பது அவசியம். இதனால் மூக்கு, தொண்டையில் இருக்கும் கரோனா வைரஸ் கிருமி அழிந்துவிடும். சூடு தண்ணீரில் உப்பு போட்டு வாய் கொப்பளிப்பது கரோனா வந்தவர்கள் கட்டாயம் மூன்று முறையாவது செய்ய வேண்டும். மற்றவர்கள் தினமும் காலை, மாலை 2 வேளை செய்தால் போதும். இதையெல்லாம் எல்லாருமே தொடர்ந்து செய்து வந்தால் கரோனா குறித்து நாம் பயப்பட வேண்டிய அவசியமில்லை'' என்றார்.