திரைத்துறையில் ஓர் அங்கமாக இருக்க வேண்டும்!

கரோனா தொற்றினால் பொதுமுடக்கம் அறிவித்ததில் இருந்து பலரும் பலவித பாதிப்புகளை சந்தித்திருக்கிறார்கள்.
திரைத்துறையில் ஓர் அங்கமாக இருக்க வேண்டும்!


""கரோனா தொற்றினால் பொதுமுடக்கம் அறிவித்ததில் இருந்து பலரும் பலவித பாதிப்புகளை சந்தித்திருக்கிறார்கள். அது வருத்தமாக இருந்தாலும், ஒருபுறம் வேலை வேலை என பிசியாக ஓடிக்கொண்டே இருந்த அனைவருக்குமே இந்த பொதுமுடக்கம் தேவையான ஓய்வாக இருக்குமோ என்று தோன்றுகிறது. திரைத்துறையைப் பொருத்தவரை, டிவியாகட்டும், சினிமா ஆர்ட்டிஸ்ட்டாகட்டும் அனைவருமே சூட்டிங் சூட்டிங் என்று இருந்தோம். திரைத்துறை என்றில்லை, மற்ற துறையை சார்ந்தவர்களும், குடும்பத்துடன் செலவிட கிடைத்த நேரமாகத்தான் இதை பார்க்கிறேன். என்னைப் பொருத்தவரை, படிப்பு, சூட்டிங் என பிசியாக இருந்ததில் இருந்து இப்போது கொஞ்சம் வீட்டில் இருப்பதற்கான நேரம் கிடைத்திருப்பது பிடித்திருக்கிறது. ஆனால், வீட்டில்தான் சாப்பிட்டு சாப்பிட்டு தூங்குறேன் என்று திட்டிக்கிட்டே இருப்பதுதான் கொஞ்சம் வருத்தமா இருக்கு'' என்கிறார் வாணி ராணி தொடரில் தேனாக பேசி ரசிகர்கள் மனதில் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்ட தேனு நேஹா மேனன். மேலும் அவர் பகிர்ந்து கொண்டவை:

""5-ஆம் வகுப்பு படிக்கும்போது விளம்பரத்திற்கும், திரைப்பட சூட்டிங்கிற்கும் என்னுடைய புகைப்படங்கள் அனுப்பப்பட்டிருந்தன. ஆனால், நான் முதன்முதலில் செலக்ட் ஆனது "பிள்ளை நிலா' தொடருக்காகத்தான். முதல் ரோலே டைட்டில் ரோலான நிலா கேரக்டர். திரைத்துறை குறித்த எந்த புரிதலுமே இல்லாமல், எந்த பேக் ரவுண்டுமே இல்லாமல், கேமரா முன்னாடி நின்ற முதல் தொடர் அது. அந்தவகையில் நான் ஆசிர்வதிக்கப்பட்டவள் என்று தான் நினைக்கிறேன்.

முதல் நாள் சூட்டிங் எந்த பயமும் இல்லாமல் நடித்தேன். இதற்கு காரணம், கிளாசிகல் நடனத்திற்காக நிறைய மேடை நிகழ்ச்சிகள் செய்த அனுபவம்தான் என்று நினைக்கிறேன். ஆனால், சூட்டிங்கில் நான் பயந்த முதல் விஷயம் கிளிசரின் போடும்போதுதான். கிளிசரின் போடவந்த அசிஸ்டன்ட் மேக்கப் மேனுக்கும் அன்றுதான் முதல்நாள் சூட்டிங். அதனால் அவர் என் கண்ணில் சொட்டு மருந்து விடுவது போன்று கிளிசரினை விட்டுவிட்டார். கண் எரிச்சலால் துவண்டு போய்விட்டேன். பின்னர் மெல்ல மெல்ல சமாளித்து ஒருவழியாக அன்றைய சூட்டிங்கை முடித்தோம்.

"பிள்ளைநிலா' தொடர் நடித்துக் கொண்டு இருக்கும்போதே, "பைரவி' தொடரில் வாய்ப்பு வந்தது. அதில் குட்டி அம்மனாக நடித்திருந்தேன். அந்த சூட்டிங் நடந்த இடத்திற்கு இரண்டு வீடு தள்ளிதான் ராதிகா மேடமோட "செல்லமே' தொடரின் படப்பிடிப்பு நடந்தது.

அந்த தொடரோட மேனேஜர் என் அம்மாவிடம், ராதிகா மேடத்தின் "வாணி ராணி' என்ற புது தொடருக்கான ஆடிஷனில் கலந்து கொள்ள சொன்னார். போய் பார்த்தோம். செலக்ட் பண்ணிட்டாங்க. அதுவும் ராதிகா மேடத்தின் மகள் கேரக்டர் என்றதும் ரொம்ப சந்தோஷமா இருந்தது.

முதல்நாள் முதல் ஷாட்டே எனக்கும் ராதிகா அம்மாவுக்குமான காம்பினேஷன்தான். பிராம்ட் கொடுத்தாங்க அத அப்படியே பேசி முடிச்சேன். கட் சொன்னதுமே, மேடம் சந்தோஷமாகி, "எங்கிருந்து புடிச்சிங்க இத.. செமயா பண்ணுதே'' என்று சொன்னார். அதுதான் இப்போ "சித்தி -2' வில் செவந்தி வரை தொடர்கிறது என்று நினைக்கிறேன்.

பொதுவா ராதிகா மேடம் ரொம்ப கோவக்காரங்க, ரொம்ப கண்டிப்பா இருப்பாங்க, அடிப்பாங்க இப்படியெல்லாம் சொல்வதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், கடந்த 8 வருடமாக அவங்களோட ஒர்க் பண்ணிட்டு இருக்கேன். ஒருமுறை கூட அவங்களை நான் அப்படி பார்த்ததில்லை.

அதுபோன்று "வாணிராணி' சூட்டிங்கின்போது, சம்மர் வந்துவிட்டால் அவுட்டோர் சூட்டிங் போய்விடுவோம். அந்த நேரத்தில் அவங்க தனியா அறையிலேயே இல்லாமல், எல்லாருடனும் வந்து அமர்ந்து கொண்டு அவரவர் சூட்டிங் அனுபவங்களையெல்லாம் கேட்டுக்கிட்டு ஜாலியா பேசிக்கிட்டு இருப்பாங்க. நிறைய ஷேர் பண்ணுவாங்க, நிறைய சொல்லித்தருவாங்க.

திரைத்துறை வாய்ப்பு என்பது எனக்கும் சரி, எங்க குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் சரி இது எதிர்பாராத கிடைத்த வரம் என்றுதான் சொல்வேன். நான் எவ்வளவு நாள் இந்தத் துறையில் இருக்கிறேனோ, அதுவரை என்னுடைய பெஸ்ட் நடிப்பைக் கொடுக்க முயற்சிப்பேன்.

டைரக்ஷன் மீது ரொம்பவே ஆர்வம் இருக்கிறது. எனவே டைரக்டஷன் சார்ந்த ஏதாவது ஒன்றில்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். எப்பவுமே நடிகையாகத்தான் இருப்பேன் என்றில்லாமல், இந்த துறையில் ஏதாவது ஓர் இடத்தில் எப்பவும் இருக்க வேண்டும்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com