இந்திய  வரலாற்றின் புரட்சி வீராங்கனைகள்!

வெள்ளையனே வெளியேறு என்ற தீர்மானத்தை மகாத்மா காந்தி காங்கிரஸ் மகாசபையில் அறிமுகப்படுத்திய சமயம் பாரதம் முழுவதும் புரட்சி அலைமோதத் தொடங்கியது.
இந்திய  வரலாற்றின் புரட்சி வீராங்கனைகள்!

வெள்ளையனே வெளியேறு என்ற தீர்மானத்தை மகாத்மா காந்தி காங்கிரஸ் மகாசபையில் அறிமுகப்படுத்திய சமயம் பாரதம் முழுவதும் புரட்சி அலைமோதத் தொடங்கியது.

அந்தச் சமயத்தில் காந்தியடிகள் உள்ளிட்ட பெரும்பான்மையானரான முக்கிய தலைவர்களைப் பிரிட்டிஷ் ஆட்சி பிடித்து சிறைக்குள் அடைத்துவிட்டது.

புரட்சி வீராங்கனையாகத் திகழ்ந்த அருணா ஆசப் அலி தலைவர்கள் கைது செய்யப்பட்ட செய்தியைக் கேள்விப்பட்டு பம்பாய்க்கு வந்து சேர்ந்தார்.

மகளிர் வட்டாரத்திலும், மாணவர் வட்டாரத்திலும் தீவிரமான கிளர்ச்சியினைத் தோற்றுவித்தார் அருணா, தகவல் அறிந்த பிரிட்டிஷ் ஆட்சி அருணா ஆசப் அலியையும் கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பித்தது.

அருணா போலீஸார் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு தலைமறைவாகிவிட்டார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பெயரைச் சூட்டிக் கொண்டு ஒவ்வொருவரிடமாகச் சென்று மாணவர்கள் வட்டாரத்தில் தொடர்ந்து கிளர்ச்சி உணர்ச்சியைத் தூண்டினார்.

இளைஞர்களும், இளம் பெண்களும் அருணா அளித்த உற்சாகத்தினால் வீறு கொண்டு எழுந்து பெருங்கிளர்ச்சியில் ஈடுபட்டு ஆட்சியினரைக் கதி கலங்கச் செய்துக் கொண்டிருந்தனர்.

எப்படியாவது அருணாவைக் கைது செய்து விட வேண்டும் என்று போலீஸார் படாதபாடுபட்டனர். அருணாவைப் பிடித்துக் கொடுத்தால் ஆயிரக்கணக்கான ரூபாய்கள் பரிசளிக்கப்படும் என்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் விளம்பரப்படுத்தினர்.

ஒரு தடவை அருணா தங்கியிருந்த இடத்தை போலீஸார் திட்டவட்டமாக யூகித்து விட்டனர். தன்னைக் கைது செய்ய போலீஸார் வருவது அருணாவுக்குத் தெரிந்தது. உடனடியாக மறைந்திருக்க இடம் ஏதும் கிட்டவில்லை. இந்தத் தடவை நிச்சயம் பிடிபட்டு விடுவோம் என்று அருணா நிச்சயித்துக் கொண்டார்.
தற்செயலாக அன்றைய நாளேட்டைப் பார்த்த அருணாவுக்கு அதில் வெளி வந்திருந்த விளம்பரம் கண்ணில்பட்டது.

ஆங்கிலப் பெண் ஒருவருக்கு உதவியாளராகப் பணியாற்ற ஓர் ஆங்கிலோ இந்தியப் பெண் தேவை என்று அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் தரப்பட்டிருந்த முகவரியும் அவர் இருந்த அந்தத் தெருவிலேயே இருந்தது.
அருணா உடனே தன்னை ஓர் ஆங்கிலோ இந்தியப்பெண் போல ஒப்பனை செய்து கொண்டு அந்த ஆங்கிலமாதின் வீட்டுக்குச் சென்றார்.

அருணாவுக்கு அங்கு வேலை கிடைத்துவிட்டது. அவருக்கு வேலை கொடுத்தவள் ஓர் ஆங்கிலேயப் பெண்மணியாக இருந்ததால் அந்த இடத்தில் அருணா புகலிடம் பெற்றிருக்கக் கூடும் என்று போலீஸார் சற்றும் சந்தேகம் கொள்ளவில்லை.

- ஆர்.மகாதேவன்

ஆங்கிலேயனை எதிர்த்து நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்தில் பிரபலம் ஆகாதவர்கள் ஏராளம், அவற்றில் ஒருவர் குயிலி என்ற இளம் பெண்.

தமிழகத்தில் ஒவ்வொரு பகுதியாக கைப்பற்றி வந்த ஆங்கிலேயன் சிவகங்கையையும் கைப்பற்றினான். இழந்தப் பகுதியை மீட்க அதன் ராணி வேலுநாச்சியார் தொடர்ந்து போராடி வந்தார்.

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு சின்ன மருது, பெரிய மருது, வேலுநாச்சியார் மூவரும் சேர்ந்து சிவகங்கையை மீட்க போர் தொடுத்தனர். வேலு நாச்சியார் தலைமையில் பெண்கள் படை உருவாகியிருந்தது. அதில் பதினெட்டே வயதான குயிலியும் ஒருவர். அவர் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருநாள் இரவு வேலு நாச்சியாரைக் கொல்ல வந்த சதிகாரர்களை எதிர்த்துப் போராடி, வேலு நாச்சியாரை காப்பாற்றினார். அதனால் வேலு நாச்சியார் குயிலியை தனது மெய்க்காப்பாளராக நியமித்திருந்தார்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு, வேலு நாச்சியார் படைக்கும் ஆங்கிலேயப் படைக்கும் போர் மூண்டது. போரில் வெற்றி பெற குயிலி ஒரு திட்டம் தீட்டினார். ஓரிடத்தில் ஆங்கிலேயர்கள் ராணுவ ஆயுதங்களைக் குவித்து வைத்திருந்தார்கள். குயிலி தன் உடல் முழுவதும் நெய்யைப் பூசிக் கொண்டு கையில் தீப்பந்தத்துடன் அந்த ஆயுதக் கிடங்கில் குதித்தார். அவ்வளவு தான் அங்கிருந்த அத்தனை ஆயுதங்களும் வெடித்துச் சிதறின. ஆயுதங்களைப் பறிகொடுத்த ஆங்கிலேயன் புறமுதுகிட்டு ஓடினான். சிவகங்கை வேலுநாச்சியார் வசமாகியது. குயிலி நெருப்போடு நெருப்பாக சாம்பலானார். குயிலி மட்டும் அந்த ஆயுதக் கிடங்கை நாசம் செய்யாமல் இருந்திருந்தால் சிவகங்கையை மீட்பது கனவாகவே ஆகியிருக்கும்.

குயிலின் தியாகத்தை அறிந்த வேலு நாச்சியாரும், படையினரும் கண்ணீர் வடித்தனர். உலகின் முதல் தற்கொலைப் படைப் பெண் குயிலி என்றால் மிகையாகாது.

( விஜய பாரதம் இதழிலிருந்து )

- கோட்டாறு ஆ.கோலப்பன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com