அத்தனையும் கல்விக்கே..!
By | Published On : 05th February 2020 02:46 PM | Last Updated : 05th February 2020 02:46 PM | அ+அ அ- |

எல்லாரும் கை நிறைய சம்பளம் என்பார்கள். கொல்கத்தாவைச் சேர்ந்த சித்ரலேகா மல்லிக் "கை நிறைய ஓய்வூதியம்' என்கிறார் பெருமையாக. ஆமாம்... சித்ரலேகா பெறும் மாத ஓய்வூதியம் ஐம்பதாயிரம் ரூபாய். இவ்வளவு ஓய்வூதியம் வருகிறதே என்று "தாட் பூட்'டென்று செலவு செய்வதில்லை. பயணிப்பது பேருந்துகளில் மட்டுமே.. வீட்டு வேலைகளை பார்க்க உதவியாளர் எவரையும் வைக்காமல் தானே செய்து கொள்கிறார். கை நிறைய ஓய்வூதியம்.. செலவும் குறைவு... மாதா மாதம் கணிசமான தொகை சேமிப்பாகிறது. இந்த அபரிமித சேமிப்பை சித்ரலேகா என்ன செய்கிறார்?
சித்ரலேகாவே சொல்கிறார்:
"முறையான கல்வி அனைவரையும் மாற்றும். பொறுப்புள்ள ஆசிரியரால் எதையும் மாற்ற முடியும்" என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. எனக்கு 72 வயதாகிறது. கடந்த 17 ஆண்டுகளில் பல கல்வி நிறுவனங்களுக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளேன்.
நானும் ஓர் ஆசிரியை. நாற்பதாண்டுகள் கல்விச் சேவையில் ஈடுபட்டிருந்தேன். பல கல்வி நிலையங்கள் பள்ளி, கல்லூரியின் வசதிகளை மேம்படுத்த நிதியில்லாமல் தவிக்கின்றன. இது எனக்கு அனுபவபூர்வமாகத் தெரியும். நன்றாகப் படிக்கக் கூடிய மாணவ மாணவிகள் பொருளாதார வசதியில்லாதலால் தரமான கல்வியை தொடர முடியாமல் திண்டாடுகிறார்கள்.
நான் அத்தகைய மாணவ மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்கி வருவதுடன் நிதியை எதிர்பார்க்கும் கல்வி நிலையங்களுக்கு பண உதவி செய்து வருகிறேன். எனது அப்பா பள்ளி ஆசிரியர். எங்கள் குடும்பம் சாதாரண குடும்பம்தான். "பிறருக்குக் கொடுப்பதில்தான் மன நிறைவு உண்டாகும்' என்று நம்பிய அப்பா எங்களையும் அப்படிச் சொல்லி வளர்த்தார். கல்விப் பணியில் ஆசிரியையாக சிறுவயதிலேயே ஈடுபட்ட நான் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆடம்பர வாழ்க்கையில் எனக்கு நம்பிக்கையில்லை. சிக்கனம்தான் எனது மந்திரம். அதனால் எனது வீட்டைக் கூட 350 சதுர அடிகளுக்குள் கட்டிக் கொண்டேன். பிறர் கல்வி பெற உழைத்த நான், எனது சேமிப்பையும் ஓய்வூதியத்தையும் பிறர் கல்வித் தேவைகளுக்காக செலவு செய்வது என்று முடிவு செய்துள்ளேன்.
பணி ஓய்வு பெற்றதும் கிடைத்த 31 லட்சத்தை எனது பெற்றோர்களின் பெயரால் பொதுக் கல்வி நிறுவனம் ஒன்றிற்கு நன்கொடையாக அளித்துவிட்டேன். 2018-இல் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்திற்கு 56 லட்சத்தை அன்பளிப்பாக வழங்கினேன்.. பணி ஓய்வுத் தொகை... ஓய்வூதியம்... அத்தனையும் கல்விப் பணிக்கே'' என்கிறார் சித்ரலேகா மல்லிக்.
சமர்ப்பணமுள்ள ஆசிரியர்கள் பணி ஓய்விற்குப் பிறகும் அதே சமர்ப்பணமுள்ள ஆசிரியர்களாகவே இருக்கிறார்கள். மாறுவதில்லை. அதற்கு எடுத்துக் காட்டு சித்ரலேகா..!
- கண்ணம்மா பாரதி
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...