தன்னம்பிக்கை தரும் அழகுக்கலை!
By DIN | Published On : 05th February 2020 02:58 PM | Last Updated : 05th February 2020 02:58 PM | அ+அ அ- |

இந்தியா முழுக்க 680-க்கும் மேற்பட்ட பியூட்டி பார்லர்கள் என வெற்றிநடை போட்டுவருகிறது "நேச்சுரல்ஸ்.' ஆனால்,பரபரப்பு எதுவுமில்லாமல்சாதாரண நபர் போல் சிரித்தமுகத்துடன் பேசுகிறார் "நேச்சுரல்ஸ்'-ன் நிறுவனரான வீணா குமரவேல். இனி அவருடைய நேர்காணல்:
எப்படி இந்தத்துறைக்கு வந்தீர்கள்?
நான் படித்தது பி.காம். திருமணம் முடிந்து குழந்தைகள் ஆனது. அவர்கள் பள்ளிக்குப் போக ஆரம்பிதார்கள். அப்போது சுய தொழில் தொடங்கி நடத்தலாம் என்ற யோசனை உருவானது. எந்தத்துறையில் தொழில் தொடங்கலாம் என்று யோசித்த போது அழகுக்கலைக்கு என்று சிறுசிறு நிலையங்கள் மட்டுமே இருந்தன. வசதிப்படைத்தவர்கள் அவர்களுடைய தேவைக்காக ஐந்து நட்சத்திர ஓட்டல்களுக்கு மட்டுமே செல்ல வேண்டி இருந்தது. சொல்லக்கூடிய பிராண்டு அழகு நிலையங்கள் என்று எதுவுமே இல்லை. எனவே இந்தத்துறையில் இறங்கினால் வெற்றியடையலாம் என்று தொடங்கப்பட்டது தான் "நேச்சுரல்ஸ்'.
நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் என்ன?
முதலில் ஆரம்பிக்கப்பட்டது நுங்கம்பாக்கம் காதர் நவாஸ் கான் சாலையில் "நேச்சுரல்ஸ்' அழகு நிலையம். வசதிப்படைத்த பெண்கள் வந்து செல்வதற்கு அந்த பகுதி சுலபமாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு ஆரம்பித்தோம். அப்போது பெரிதாக இலாபம் கிடைக்கவில்லை. முதல் மூன்று ஆண்டுகள் என்பது மிகவும் சவாலாக இருந்தது. ஒவ்வொரு காலகட்டத்திலும்ஒவ்வொரு சவால்களை சந்திக்க நேர்ந்தது. எனக்கு அழகுக்கலை பற்றி எதுவும் தெரியாதுவேலைக்கு ஆட்கள் வைத்து தான் இந்தத் தொழிலை ஆரம்பித்தேன். ஆரம்பித்த புதிதில் வேலைக்கு நல்ல ஆட்கள் கிடைப்பது மிகவும் கடினமாக இருந்தது. அப்போது எடுத்த முயற்சியில் இருந்து பின் வாங்கவில்லை. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தான் சிறிது லாபம் வந்தது.
ஒரு கட்டத்தில் நாங்களே பயிற்சி மையங்களை உருவாக்கினோம். முதல் அழகு நிலையம் தொடங்கிய சில மாதத்தில் அடுத்த மையத்தைத் தொடங்கினோம். தொழிலை விரிவுபடுத்துவதற்காக வங்கிகளைஅணுகிய போது அழகுக்கலையை அவர்கள் ஒரு தொழிலாக கூட அங்கீகரிக்கவில்லை.ஆனாலும் நாங்கள் தொடர்ந்து போராடினோம். அதற்குப் பிறகு தான் கடன் கொடுக்க முன் வந்தார்கள். சிறிது சிறிதாக வளர்ச்சியை எட்ட ஆரம்பித்தோம். ஆனால் இன்று தொழில் தொடங்கிய ஓர் ஆண்டிற்குள் லாபம் வர வேண்டும் என்று நினைக்கிறார்கள். பொறுமை என்பது துளியும் இல்லாமல் போய்விட்டது.
"நேச்சுரல்ஸ்' என்பது பெண்களுக்கு மட்டுமானதா?
ஆரம்பத்தில் பெண்களுக்கு மட்டுமே இருந்தது. உலகத்தில் பல இடங்களுக்கு சென்று பார்த்த போது ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரையும் கருத்தில் கொண்டு தான் அழகு நிலையம் உருவாக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. 2003- ஆம் ஆண்டில் இருந்து ஆண்- பெண் இருபாலருக்காகவும் என மாற்றினோம். அதற்கு இன்னொரு காரணமும் உண்டு. ஐ.டி துறை வந்த காலம். அங்கு பணியாற்றும் ஆண்கள் பெண்கள் அழகுக்கலையை விரும்ப ஆரம்பித்தார்கள். அதனால் மாற்றினோம். தொழிலை இன்று வரை வெற்றிகரமாக நடத்தி வருகிறோம்.
அழகுக்கலை என்பது அவசியம் தானா?
இப்போது எல்லாத் தரப்பு மக்களுக்கும் அது தேவையாக உள்ளது. ஒவ்வொருவரும் தங்களது வசதி ஏற்றவாறு அழகுக்கலை நிலையத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். வசதியானவர்கள் பிராண்டட் சலூன்களுக்குச் செல்கிறார்கள். சாதாரண நபர்கள் தங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள அழகு நிலையங்களுக்குச் சென்று தங்களை அழகுபடுத்திகொள்கிறார்கள். அழகாக இருப்பவர்கள் தங்கள் தோற்றத்தை மேம்படுத்திக் கொள்ளவும் தனிப்பொலிவுடன் இருப்பதை விரும்புகிறார்கள். இதற்கு வயது வரம்பு இல்லை. மேலும் அழகுக்கலை என்பது பெண்களுக்குத் தன்னம்பிக்கை ஏற்படுத்துகிறது என்பது தான் முக்கியமான செய்தி.
முன்பு திரைப்படத்தில் நடிப்பவர்களுக்கு, மீடியாத்துறை சார்ந்தவர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்தார்கள். சாதாரண குடும்பத்து பெண்கள் அழகு நிலையம் செல்வதே தப்பு என்று நினைத்த காலம் உண்டு. முடி வெட்டுவதற்குக் கூட யோசிப்பார்கள். ஆனால் இன்று பியூட்டி பார்லர் செல்லாத பெண்களை பார்க்க முடிவதில்லை.
ஆன்லைனிலே அனைத்து பார்த்து தெரிந்து கொள்கிறார்களே?
ஆமாம் இப்போது யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் அழகுக்கலை பற்றி தெரிந்து கொள்ள அனைத்து வசதிகளும் உள்ளன. சில பெண்கள் முகத்தைப் பொலிவு படுத்த அவர்களே கீரிம்களை வாங்கி வீட்டிலேயே பயன்படுத்துகிறார்கள். ஆனால் அவர்களுக்கு அவர்களே முடி வெட்டிக் கொள்ள முடியாது. கல்யாண மேக் அப் அவர்களால் செய்து கொள்ள முடியாது.மேலும் அழகு நிலையங்களில் வந்து நீங்கள் புருவத்தை சரி செய்துவிட்டு பேஷியல் செய்து விட்டு சென்றாலே அவ்வளவு புத்துணர்ச்சி இருக்கும். அதை வீட்டில் நீங்கள் உணர முடியாது.
நேச்சுரல்ஸ் சிறப்பு தான் என்ன?
20 ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் இந்த அழகுக்கலை தொழிலை செய்து வருகிறோம். பெண்கள் தங்கள் முகம், கூந்தலைப் பராமரிப்பதற்கு பல்வேறு முறைகள் வந்துவிட்டன. எங்களது நிலையங்களில் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்துமே எங்களுக்காகத் தனியாகத் தயார் செய்யப்பட்டவை. அதனால் எங்களுக்கென இந்தியா மட்டுமல்லாத உலகம் முழுவதும் தனியாக வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.
நீங்கள் அழகுக்கலையை விரும்புவதுண்டா?
அழகுத்துறையில் புதிது புதிதாக அறிமுகமாகும் சிகிச்சைகள், கருவிகள், டிரெண்ட்ஸ், ஃபேஷன்... இவற்றை நோக்கியே என் தேடலும் ஓட்டமும் இருப்பதால், என் வேலை எனக்கு ரசனைக்குரியதாக இருக்கிறது. ஆனால், உடல் அதற்கு ஒத்துழைக்க வேண்டுமே... உட்கார்ந்த இடத்திலேயே பார்க்கும் வேலை என்பதால், உடல் உழைப்பு கிடையாது. அதற்காகத்தான் என்னை நான் ஆக்டிவ்வாக வைத்துக்கொள்ள ஃபிட்னெஸில் அதிக கவனம் செலுத்துகிறேன்.
எத்தனை பேர் உங்களிடம் பணியாற்றுகிறார்கள்?
10 ஆயிரம் பேர் வரையில் பணியாற்றுகிறார்கள். வேலையிடத்தில் பணியாளர்கள்விஷயத்தில் நான் ஸ்ட்ரெஸ்ûஸ ஏற்படுத்திக் கொள்ளுவதில்லை. அவர்களுக்குப் பொறுப்புகளைப் பகிர்ந்து கொடுத்துவிட்டால் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். நான் சம்பளம் கொடுக்கும் முதலாளி. நான் சொல்கிறபடி செய்'' என்கிற ரீதியில் பணியாளர்களைக் நச்சரித்துக் கொண்டே இருந்தால் எந்த வேலையும் முழுமையாக நடக்காது.
பெண்கள் இந்தத் துறைக்கு விரும்பி வருகிறார்களா?
மத்திய அரசின் தேசிய கைத்திறன் மேம்பாட்டு நிறுவனம் நடத்திய ஆய்வில் 2020-ஆம் ஆண்டு முதல் 2025-ஆம் ஆண்டுக்குள் ஒரு கோடி அழகுக்கலை நிபுணர்கள் இந்தியாவுக்கு தேவை என கண்டறியப்பட்டிருக்கிறது. தற்போது 10 லட்சம் பேர் இருக் கிறார்கள். ஆதலால் நிறைய அழகுக்கலை நிபுணர்களை தரமாக உருவாக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசின் "பியூட்டி செக்டார் ஸ்கில்ஸ் கவுன்சில்' அமைப்பு அழகுக்கலை துறைக்கான பாடத்திட்டத்தை உருவாக்கி இருக்கிறது.
நாங்கள் அதனை பின்பற்றி திறமையான மாணவிகளை உருவாக்குகிறோம். தற்போது இந்தியாவில் 2 லட்சம் பியூட்டி பார்லர்கள் இருக்கிறது. இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 8 ஆயிரம் கோடி ரூபாய் இந்தத் துறையில் புழங்குகிறது. வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர், சிக்கிம் மற்றும் டார்ஜிலிங் போன்ற பகுதிகளை சேர்ந்தவர்கள் அழகுக்கலை பயிற்சி பெறுவதற்கு அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்கள் இங்குள்ள சூழ்நிலைக்கு தக்கபடி தங்களை பழக்கப்படுத்திக்கொள்கிறார்கள். அவர்களுக்கு இந்தியும், ஆங்கிலமும் தெரிகிறது. இப்போது அழகுக்கலை பணி மதிப்பு மிக்கதாக பார்க்கப்படுகிறது. வருமானம் தரும் தொழிலாகவும் இருப்பதால் பெண்கள் மத்தியில் வரவேற்பும் கூடி இருக்கிறது. மத்திய அரசும் இந்த துறைக்கு உறுதுணையாக இருந்து செயல்படுகிறது'' என்றார் வீணா குமரவேல்.
-வனராஜன்
(அடுத்த இதழில்
கூந்தல் பராமரிப்பு டிப்ஸ்)
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...