வாழ்வாங்கு வாழ்ந்தவர்: வை.மு.கோதை நாயகி

1919- ஆம் ஆண்டு தமிழ் வருடப்பிறப்பு அன்று பரபரப்பான செய்தியை நாளிதழ் தாங்கி வந்தது. அதைக் கண்ட பார்த்தசாரதி பேரதிர்ச்சியுற்றார்.
வாழ்வாங்கு வாழ்ந்தவர்: வை.மு.கோதை நாயகி

1919- ஆம் ஆண்டு தமிழ் வருடப்பிறப்பு அன்று பரபரப்பான செய்தியை நாளிதழ் தாங்கி வந்தது. அதைக் கண்ட பார்த்தசாரதி பேரதிர்ச்சியுற்றார். அன்றுதான் 1919 -ஏப்ரல் 13-ஆம் நாள் "டயர்' என்ற படுபாதக நீச அரக்கன் பஞ்சாப் ஜாலியன்வாலாபாகில் வெறித்தாண்டவமாடி பலரைக் கொன்று குவித்திருந்தான். இச்செய்தி கேட்ட பார்த்தசாரதியின் உள்ளம் கொதித்தது.
இனி நாம் வாளா இருப்பது கூடாது. தேசிய இயக்கத்தில் தீவிரமாக ஈடுபடவேண்டும் என்று அவர் உறுதி பூண்டதற்கு அந்தப் படுகொலை காரணமாக அமைந்தது. அன்றே வீட்டிலுள்ளோர் அனைவரது அந்நியத் துணிகளையும் அள்ளிக் கொண்டு வந்து சாலையில் போட்டு எரித்தார் பார்த்தசாரதி.
அன்று முதல் தூய கதர் ஆடையே கட்டத் தொடங்கினார். கோதைநாயகியும் அவர் வழியைப் பின் பற்றினார். இருவரும் கதர்ப் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபடலாயினர் கோதை, பார்த்தசாரதி இருவரும் ஆளுக்கு ஒரு மூட்டை கதர்த் துணியைச் சுமந்து கொண்டு வீடுதோறும் சென்று விற்கத் தொடங்கினர். பல நாட்கள் அப்பணி தொடர்ந்தது.
கோதையைப் பார்த்து சிலர், "நீ இவ்வளவு தீவிரமாகக் கதர் பிரச்சாரம் செய்கின்றாயே நீ ஏன் மேடை ஏறித் தேசீயச் சொற்பொழிவாற்றக் கூடாது'' என்று பலர் கேட்டனர். அவர்கள் அறிவுரை சரியெனப்பட்டது கோதைக்கு.
திருவல்லிக்கேணி துளசிங்கப் பெருமாள் கோயில் தெரு கங்கைகொண்டான் மண்படத்தில் நடந்த பெண்கள் கூட்டத்தில் கோதையின் சொற்பொழிவுக்குக் கால்கோள் நடந்தது. அந்தக் கூட்டத்திற்கு கே.பாஷ்யம் அவர்களின் துணைவியார் தலைமை தாங்கினார். கோதையின் முதல் பேச்சு பலரையும் கவர்ந்தது. முக்கியப் பிரமுகர்கள் அனைவரும் வேண்டிக் கொள்ள சுற்றுப்புறமுள்ள ஊர்களுக்கும் சென்று சொற்பொழிவாற்றினார் கோதை. பாராட்டுகள் குவிந்தன. 
உலகப்போர் என்ற உருவில் 1942-ஆம் ஆண்டில் "ஜெகன்மோகினி'க்குச் சோதனை வந்தது. ஆனால் அந்தச் சோதனையிலும் ஜெகன்மோகினி துவண்டு விடவில்லை. ஜெகன் மோகினியின் வெற்றிப் பவனி தடைப்படவில்லை. எப்போதும் போலவே சிங்கப் பெருமாள் கோயிலிலிருந்து வெளிவந்து கொண்டிருந்தது.
சென்னை - ராஜாஜி மன்றத்தில் நடைபெற்ற ஜெகன்மோகினியின் வெள்ளி விழாவுக்கு அந்நாள் முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தலைமை தாங்கினார். வங்காளக் கவர்னராக இருந்த ராஜாஜி வாழ்த்துச் செய்தி அனுப்பினார்.
டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன், எம்.பக்தவத்சலம், ருக்மிணி லட்சுமிபதி, சகோதரி சுப்பலட்சுமி, ஹரிகதா காலட்சேபம் சரஸ்வதிபாய், ஜே.ஆர். ரங்கராஜு, "தியாகி' பத்திரிகை ஆசிரியர் இராம. சடகோபன், கே.எஸ். ராமசாமி சாஸ்திரியார், பேராசிரியர் ஏ.எஸ்.சீனிவாச ராகவன், குகப்பிரியை உட்பட பல முக்கியப் பிரமுகர்கள் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
எழுத்தாளர்கள் சார்பில் சரஸ்வதி, லட்சுமிகளின் அருளுக்கு அடையாளங்களாக வெண்முத்தும் மாணிக்கமும் சேர்ந்து ஜெகன்மோகினியின் சின்னமான "அமுதகலசம்' ஏந்திய மோகினியின் உருவம் பதித்து "கலாரத்தினம்' எனப்பட்டம் பொறித்த பொன்னாரம் ஒன்று கோதைக்குப் பரிசாகப் சூட்டப்பட்டது.
வை.மு.கோதைநாயகியாரின் எழுத்துக்களில் அடுக்கு மொழி இல்லை. ஆனால் அகத்தைப் பிணிக்கும் ஆற்றல் உண்டு. இலக்கணச் சுத்தம் இருப்பதில்லை. ஆனால் இதயச் சுத்தம் உண்டு. சொற்சாலம் கிடையாது. ஆனால் சுவைக் கோலம் குறையாது. அணியலங்காரங்களுக்கு அதிகம் இடமில்லை. ஆனால் உணர்வுகள் ஊற்றெடுக்கும். காதல் கதைகள் உண்டு. 
அதில் கடவுள் மணம்தான் விஞ்சி நிற்கும். எதிர்பாராத கதைத்திருப்பங்கள் உண்டு, அதில் எதிர்பார்த்த மன விருப்பங்கள் இருக்கும். உவமை அணிகள் உவகை அளிக்கும். பழ மொழிகள் பழகி இனிக்கும். ஆயிரம் அனந்தமான கதைப் பாத்திரங்கள். அத்தனைக்கும் வேறு வேறு குணச்சித்திரங்கள். எழுத்துவானில் எழுந்த ஏக சூரியனுக்குள்ள வெம்மையில்லை. சந்திரனின் தன்மைதான் உண்டு- என்று கோதையின் படைப்பிலக்கியங்களைப் போற்றிப் பாராட்டினார்கள்.
1932- ஆம் ஆண்டு அந்நிய ஆட்சியாளர் அனுப்பிய "லோதியன் கமிஷன்' இந்தியாவுக்கு வந்தது. அதற்கு நாடெங்கும் எதிர்ப்புக் காட்டல் வேண்டும் என்று காங்கிரஸ் ஆணையிட்டது. அதன்படி சென்னையிலும் எதிர்ப்பு ஊர்வலம் நடந்தது.
சென்னை சைனா பஜாரிலுள்ள காதி வஸ்திராலயத்திலிருந்து "வந்தே மாதரம்' என்று முழக்கமிட்டுக் கொண்டு ஊர்வலம் புறப்பட்டது. கே. பாஷ்யம் ஊர்வலத்துக்குத் தலைமை வகித்தார். எஸ்.அம்புஜம்மாள், அவரின் சித்தி ஜானம்மாள் ஆகியோருடன் கோதையம்மையாரும் அந்த ஊர்வலத்தில் பங்கு கொண்டார். கூட்டம் ஆற்று வெள்ளம்போல் அதிகரித்துக் கொண்டேயிருந்தது. கோதை உட்பட பலரும் கைது செய்யப்பட்டனர்.
கோதையம்மையாரின் சிறை வாழ்வின் போதும் "ஜெகன்மோகினி' ஓய்வு பெறவில்லை. முன்பே அவர் எழுதியிருந்த கதைப் பகுதியைத் தாங்கி அது வெளி வந்து கொண்டிருந்தது. அவரது "சாந்தகுமாரி' என்ற கதை முடிவு பெற்றது. மேலும் இரு மாதங்கள் அம்மையாரின் சிறுகதைகள் மட்டும் வெளிவந்தன. சிறையிலேயே "உத்தம சீலன்' என்ற நாவலை எழுதி இரகசியமாக வெளியே அனுப்பினார். அது "ஜெகன்மோகினி'யில் தொடர்ந்து வெளிவந்தது. "தியாகக் கொடி', "நளின சேகரன்' ஆகிய இரு தேசிய நாவல்களை எழுதினார் கோதை. அவற்றை ஏன் தடை செய்யக் கூடாது? என்று அச்சுறுத்தி அரசு ஆணையனுப்பியது. ஆனால் அந்த நாவல்களைப் பறிமுதல் செய்யும் தைரியம் அரசுக்கு இல்லை. ஏனெனில் அந்த நாவல்களில் காந்தீயக் கொள்கைகளான கதர் வளர்ச்சி மதுவிலக்கு, தீண்டாமை ஒழிப்பு, சகோதரத்துவம், சமூக ஒற்றுமை, சுதேசிப் பிரசாரம் ஆகியவையே வற்புறுத்தப் பட்டிருந்தன. அந்திய ஆட்சியைப் பற்றிய நிந்தனை ஏதும் இல்லாமையால், அரசு எச்சரிக்கை செய்தததோடு விட்டுவிட்டது. வேறு நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. சட்டமும் இடம் தரவில்லை.
வை.மு. கோதை நாயகியின் எழுத்தோவியங்களை சிறப்பு வாய்ந்ததாக மதிப்பீடு செய்தவர்கள் புகழ்பெற்ற எழுத்தாளர்களான கவியோகி சுத்தானந்த பாரதியார், மற்றொருவர் ஜே.ஆர். ரங்கராஜு. அவர், "பாம்பு அறியும் பாம்பின் கால்' என்பர். ஓர் எழுத்தாளரின் திறத்தை, அவர்தம் கற்பனை வளத்தை, அவர் நடையின் நலத்தை வேறொரு சிறந்த எழுத்தாளர்தாம் உணர இயலும். மேற்குறித்த இருவரும் வை.மு.கோ.வின் படைப்பிலக்கியங்களுக்கு சூட்டிய புகழாரமே சான்று.
இளமையில் இருபத்து மூன்றாம் அகவையில் எழிற்கரத்து ஏந்திய எழுதுகோலை, இறுதி மூச்சு வரை இயக்கிக் கொண்டேயிருந்த சிந்தனைச் சிற்பி வை.மு.கோதை நாயகி அம்மையார்.
இதயங்களை இன்புறுத்தி இளக வைக்கும் இன்னிசைக் கலைஞர். நாட்டு விடுதலைக்காக மக்களிடையே விடுதலை உணர்வை ஊட்டிய நாவன்மையாளர். அவர் விடுதலைப் போரில் கலந்து கொண்டு வெஞ்சிறை புகுந்த வீரத்தியாகி. 
பெண்கள் தெருவில் தலைகாட்டுவதே கூடாது என்னும் சமூகக் கட்டுப் பாட்டைத் தகர்த்தெறிந்து, முதன்முதலாகத் தலைநிமிர்ந்து தெருவில் நடந்தது மட்டுமல்ல. மேடையிலும் ஏறி சொற்பொழிவாற்றிய முன்னோடி.
பெண்கள் விடுதலைக்கு பேச்சில் மட்டுமல்ல. செயலிலும் வழிகாட்டியாகத் திகழ்ந்த சிறந்த சீர்திருத்தச் செல்வியாக விளங்கியவர் அவர்.
எண்ணிறந்த இசைப்பாடல்கள் இயற்றிப் பாடிய இனிய பாடல் ஆசிரியர். நாடகங்களை இயக்கியவர், திரைப்படத்துக்கு ஏற்ற பல நல்ல கதைகள் படைத்து உதவிய திரைக்கதையாசிரியர்.
தம் படைப்புகளை வெளியிடுவதற்கென்றே ஒரு மாத இதழ் தொடங்கி நன்கு நடத்தி அதற்கு வெள்ளிவிழாக் கண்ட இதழாசிரியர்.
"வைஷ்ணவ ஜனதோ' என்ற பாடலுக்கு தமிழ் உருவம் தந்து, தமிழகமெங்கும் முழங்கிடச் செய்தவர். காந்தீய வாதியாகத் திகழ்ந்தவர்.
தமிழகத்தில் முதன்முதலாக மாதர்களுக்கென்றே "நந்தவனம்' என்ற இதழைத் தொடங்கிய புதுமைப் பெண். 
வைணவக் கருத்துகளை வளர்ப்பதற்காக "முகுந்த பக்த ஜன சபா' என்ற அமைப்பை ஏற்படுத்தியவர்.
தம் பதினைந்து வயதில் தலைசிறந்த பாடகியான டி.கே.பட்டம்மாளுக்கும், வானொலி பாடகியான ஜி.பி.கமலாவுக்கும், இன்னும் சிலருக்கும் இசை கற்பித்தவர்.
பல கீர்த்தனைகளுக்கு சுரம் அமைத்து ஜெகன்மோகினியில் வெளியிடும் அளவு வை.மு.சடகோப ராமானுஜாசாரியாரின் திருமகளார் ஏ.ராஜம்மாளுக்கு இசையறிவூட்டிய இசையாசிரியையாகத் திகழந்தவர்.
பிரபல நடிகை வைஜெயந்திமாலாவின் அன்னையான வசுந்தராதேவிக்கு முதன்முறையாக நடிப்புக் கற்றுத் தந்த நல்லாசிரியை வை.மு.கோ. இப்படியாகப் பலரின் பாராட்டுகள், விமர்சனங்கள்.
கோதையம்மையாரின் திருமகன் வை.மு.சீனிவாசன் சட்டம் படித்தவர். பல பயனுடைய நூல்களைப் படைத்து வந்தார். அத்தகு திருமகன் 5.2.1956 அன்று திடீரென்று திருநாடு அலங்கரித்தான். ஒரே மகன், அருமை மகனின் பிரிவைத் தாங்க இயலாத வை.மு.கோ.அம்மையார் பெருந்துயரில் ஆழ்ந்தார். ஜெகன்மோகினியையும் நடத்த இயலாது என்ற முடிவுக்கு வந்தார். ராஜாஜி முதலியோரின் வற்புறுத்தலால், மேலும் இரண்டு ஆண்டுகள் ஜெகன்மோகினி தொடர்ந்தது. அவருக்கு பிரிவுத் துயரம் எந்த வகையாலும் குறையவில்லை. உள்ளுக்குள்ளே கனன்று உடலை உருக்கி உருக்குலைத்துவிட்டது. நோய்வாய்ப்பட்டார்.
1959-ஆம் ஆண்டு படுத்த படுக்கையானார். தம் உயிர் கொண்டு மகன் உயிரைத் தொடர்ந்து தேடப் புறப்பட்டுவிட்டார். இருபது வயதில் கையில் எடுத்த எழுதுகோல் நிரந்தரமாக ஓய்வு எடுத்துக் கொண்டது. 
மழலை நாயகியாக மலர்ந்து, மனையற நாயகியாக மாண்புற்று, இன்னிசை நாயகியாக ஏற்றம் பெற்று, எழுத்துலக நாயகியாக விழுப்புகழ் கொண்டு, தேசிய நாயகியாகத் திகழ்ந்த வை.மு.கோதை நாயகி அம்மையார் தெய்வீக நாயகியாக மாறினார்.
வை.மு.கோ. மறைந்த நாள்: 22.2.1960
தொகுப்பு: டி.எம்.இரத்தினவேல்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com