வேண்டாமே செயற்கை நிறம்!

சத்தான உணவு... ரசாயனப் பொருள்கள் சேர்க்கப்படாத, பூச்சி கொல்லிகள் அடிக்கப்படாத உணவுப் பொருள்களிலிருந்து தயாரிக்கப்படும் உணவு. சந்தையில் உணவு விடுதிகளில் கிடைக்கும்
வேண்டாமே செயற்கை நிறம்!

சத்தான உணவு... ரசாயனப் பொருள்கள் சேர்க்கப்படாத, பூச்சி கொல்லிகள் அடிக்கப்படாத உணவுப் பொருள்களிலிருந்து தயாரிக்கப்படும் உணவு. சந்தையில் உணவு விடுதிகளில் கிடைக்கும் நூடுல்ஸ், பரோட்டாவுக்கு சுவையிலும், தரத்திலும் சவால்விடும் உணவுப் பொருள்களைத் தயாரிக்கும் உணவுத் தொழிலில் புதிய வரவுதான் "ஃபார்ம் டூ ஹோம் - எ மதர்ஸ் ப்ராமிஸ்'. இந்த தயாரிப்புகளின் பின்னணியில் இயங்குபவர் ஜென்சிலின் வினோத்.
 ஆறு மாதக் குழந்தையிலிருந்து எண்பது வயது முதியோர் வரையில் அனைவருக்குமான உடல் நலத்தை உறுதி செய்யும் உணவு வகைகளைத் தயாரித்து வருகிறார். புரோட்டின் மிகுந்தும் கொழுப்பைக் குறைக்கும் சக்தியுள்ள கொள்ளுவிலிருந்து நூடுல்ஸ் தயாரிக்கிறார்.
 குழந்தைகள் ஆசைப்படும் குளிர்பானமான ரோஸ் மில்க்கிற்கு பதிலாக "பீட்ரூட் ரோஸ் மில்க்'கை உருவாக்கியிருக்கும் ஜென்சிலின் வினோத், தொழில் தொடங்கிய இரண்டு ஆண்டுகளில் முன்னணி தொழில் முனைவராக மாறியுள்ளார்.
 ஆரோக்கியமான உணவு என்ற லட்சியத்துடன் பயணிக்கும் ஜென்சிலின் வினோத் மனம் திறக்கிறார்:
 "நான் நாகர்கோவிலைச் சேர்ந்தவள். சென்னை அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரானிக்ஸில் பட்டப்படிப்பில் ரேங்க்குடன் தேர்வு பெற்றேன். கணினித் துறையில் வேலை கிடைத்தது. பிறகு திருமணம். மகன் பிறந்ததும் வேலையை ராஜினாமா செய்தேன். இரண்டாவதும் மகன்தான். மூத்தவன் முதல் வகுப்பில் படிக்க, இளையவன் மழலைப் பள்ளியில். இருவரும் பள்ளிக்குச் செல்வதால் ஓய்வு நேரம் அதிகம் கிடைத்தது. ஓய்வு நேரத்தைப் பயனுள்ள வகையில் செலவழிக்கலாம் என்று யோசித்தபோதுதான் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பாதிப்பில்லாததும், சத்துமிக்கதுமான உணவு வகைகளைத் தயாரித்து விற்கலாம் என்று முடிவு செய்தேன்.
 பள்ளியில் படிக்கும் போதே சமையலில் எனக்கு ஈடுபாடு அதிகம். வழக்கமான காய்கறிகள், மீன், மாமிசம், மசாலா வகைகளைக் கொண்டு விதம் விதமாக சமைப்பேன். வித்தியாசமான சுவைகளுடன் இருக்கும். அதனால் வீட்டில் அனைவரும் எனது சமையலை ரசிப்பார்கள். அந்த தைரியத்தில்தான் உணவுவகைகள் தயாரிப்பில் இறங்கினேன். வீட்டிற்கு சமையலுக்குத் தேவையான பொடிவகைகளை நானே வீட்டில் தயாரித்துக் கொள்வேன். முதலில் பல உணவுப் பதார்த்தங்களை தயாரித்து தெரிந்தவர்களுக்கும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கும் தந்து அவர்களின் கணிப்பினை அறிந்து கொண்டேன். அனைவரும் பாராட்டினார்கள். எனக்குத் தன்னம்பிக்கை உருவானது. தொழில் ரீதியாக இறங்குவது என்று தீர்மானித்தேன். கணவரும் உற்சாகப்படுத்தினார்.
 ஆர்டர்கள் வாங்கி தயாரித்துக் கொடுத்தேன். நல்ல வரவேற்பு. அதிகம் ஆர்டர்கள் வரத் தொடங்கியதால், என்னால் தனி ஆளாகக் கையாள முடியவில்லை. மூன்று பேரை துணைக்கு நியமித்துக் கொண்டேன். சொந்த ஊரான நாகர்கோவிலில் ஒரு தொழில் கூடத்தைத் தொடங்கினேன். அங்கு இருவர் வேலை செய்கிறார்கள். ஆண்டிற்கு ஐம்பது லட்சம் வரையில் வியாபாரம் நடக்கிறது.
 "எனக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை இயற்கை விவசாயம் செய்யும் சான்றிதழ் பெற்றவர்களிடமிருந்து நேரடியாக வாங்குகிறேன். இதனால், கலப்படம், ரசாயன உரங்களில் விளைந்த, பூச்சிக்கொல்லிகள் அடிக்கப்பட்ட உணவுப் பொருள்களைத் தவிர்க்க முடிந்தது. நல்ல தரமான உடல்நலனுக்கு கேடு விளைவிக்காத உணவு வகைகளைத் தயாரித்து சந்தைப்படுத்துகிறோம் என்ற மன நிறைவும் ஏற்படுகிறது.
 எனக்கு மிகவும் சவாலாக அமைந்த தயாரிப்பு ரோஸ்மில்க் கலவைதான். கடைகளில் விற்கும் கலவையில் செயற்கை நிறம் சேர்க்கப்படுகிறது. இப்போது உணவுப் பொருள்கள் குறித்த விழிப்புணர்வு அதிகமாகியிருப்பதால் ரசாயனப் பொருள்கள், செயற்கை நிறங்கள் சேர்க்கப்படாது உணவுவகைகளைப் பயன்படுத்துபவர்கள் பெருகி வருகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் என்னிடம் கேட்டுக் கொண்டதால் செயற்கை நிறம் சேர்க்கப்படாத ரோஸ் மில்க் கலவையை உருவாக்கப்படாதபாடுபட்டேன். பல முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. கடைசியில் பீட்ரூட் சாற்றினைப் பக்குவப்படுத்தி சேர்த்துப் பார்த்தேன். எதிர்பார்த்த பலன் கிடைத்தது. பீட்ரூட் சாற்றைப் பயன்படுத்தி நான் தயாரித்த ரோஸ் மில்க் கலவை விற்பனை சூடு பிடித்தது. எனது தயாரிப்புகளில் அதிகம் விற்பனையாகும் பொருள்களில் பீட்ரூட் ரோஸ் மில்க் கலவையும் ஒன்று. மாதத்திற்கு ஐநூறு பாட்டில்கள் விற்பனையாகின்றன .

இது தவிர குழந்தைகளுக்கு கஞ்சி மாவு கலவைகள், கர்ப்பிணி பெண்களுக்கும், பிரசவித்த பெண்களுக்கு உடல்நலம் பேண "சத்து பானம்', பொடி வகைகள், திணை வகைகளில் தயாரிக்கப்பட்ட தின்பண்டங்கள் என்று 180 உணவுவகைகள் பட்டியல் நீளுகிறது.
 எனது தயாரிப்புகளில், செயற்கை நிறங்கள், சுவையூட்டிகள், பதப்படுத்திகள், மைதா, வெள்ளை சர்க்கரையைச் சேர்க்க மாட்டேன். எங்கள் தயாரிப்பில் இன்னொரு வெற்றித் தயாரிப்பு "வாழைக்காய் பொடி'. இது குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. குழந்தைகள் எடை அதிகரிக்க உதவும் சத்துள்ள பொடி. இப்போதைக்கு எங்கள் வலைதளம் மூலமாகதான் விற்பனை நடக்கிறது. விரைவில் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில், சூப்பர் மார்க்கெட்களிலும் விற்பனைக்கு எனது தயாரிப்புகள் வரும்'' என்கிறார் ஜென்சிலின் வினோத்.
 - பிஸ்மி பரிணாமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com