சமையல்! சமையல்!

சென்னையிலுள்ள ஷெரட்டன் கிராண்ட் ரெஸார்ட்டின் தலைமை செப் ராஜேஷ் கண்ட்டாலா புதுவருடத்திற்கான கேக் செய்யும் முறையை இங்கே

சென்னையிலுள்ள ஷெரட்டன் கிராண்ட் ரெஸார்ட்டின் தலைமை செப் ராஜேஷ் கண்ட்டாலா புதுவருடத்திற்கான கேக் செய்யும் முறையை இங்கே பகிர்ந்து கொள்கிறார்:
 ப்ளம் கேக்

தேவையான பொருட்கள்:
 வெண்ணெய் - 250 கிராம்
 மைதா - 250 கிராம்
 நாட்டு சர்க்கரை- 200
 பேக்கிங் பவுடர்- 1/2 தேக்கரண்டி
 பேக்கிங் சோடா - 1/2 தேக்கரண்டி
 உலர் திராட்சை, ப்ளாக் கரண்ட்,
 க்ரான்பெர்ரீஸ், பாதாம், அத்திப்பழம் - 750 கிராம்
 எலுமிச்சை, ஆரஞ்சு பழத்தின் துருவிய தோல் }சிறிது
 கிராம்பு தூள்- 1/4 தேக்கரண்டி
 டூட்டி ஃப்ரூட்டி - 50 கிராம்
 பாதாம் பவுடர் - 50 கிராம்
 ஆப்பிள் சிடர் - சிறிது
 செய்முறை: மேற்கூறிய அனைத்து உலர் பழங்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கொள்ளவும். அத்துடன் சிறிது ஆப்பிள் சிடர் சேர்த்து கொதிக்க விடவும். இதனை இரவு முழுவதும் மூடி வைத்துவிடவும். அடுத்த நாள் காலை, மைதா, பேக்கிங் பவுடர், பாதாம் பவுடர், கிராம்பு, பட்டை தூள்ஆகியவற்றை கலந்து கொள்ளவும். மற்றொரு கிண்ணத்தில் வெண்ணெய் மற்றும் நாட்டு சர்க்கரை, எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு தோலை ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ளவும். பின்னர், அவனில் வைக்கும் பாத்திரத்தில் மாவுகலவை, வெண்ணெய் கலவையுடன் உலர் பழங்கள், டூட்டி ஃப்ரூட்டி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்த கலவையை மைக்ரோவேவ் அவனில் 170 டிகிரியில் ஹீட் செய்து 45 -50 நிமிடங்கள் வரை வைத்து பேக் செய்யவும். கேக் வெந்தபின் இறக்கி பரிமாறவும். சுவையான ப்ளம் கேக் தயார்.

அவகோடா ஐஸ்க்ரீம்

 தேவையானவை:
 அவகோடா( வெண்ணெய் பழம்) விழுது - 1 கிண்ணம்
 குளிர்ந்த விப்பிங் க்ரீம் - 1 கிண்ணம்
 சர்க்கரை - 1 கிண்ணம்
 வெனிலா எசென்ஸ் - ஒரு தேக்கரண்டி
 பொடியாக நறுக்கிய உலர் பருப்புகளின் கலவை
 (பாதாம், பிஸ்தா, வால்நட்) - கால்
 கிண்ணம்
 செய்முறை: சிறிதளவு நட்ஸ் கலவையை அலங்கரிக்க தனியாக எடுத்து வைக்கவும். விப்பிங் க்ரீமை எலெக்ட்ரிக் பீட்டரால் நன்கு அடிக்கவும். சிறிது சிறிதாக சர்க்கரை சேர்த்து, பஞ்சு போல வரும் வரை மேலும் அடிக்கவும் (ஒரு தட்டில் வைத்துத் தலை
 கீழாக கவிழ்த்தால் அது கீழே விழக் கூடாது). அதனுடன் அவகோடா விழுது, வெனிலா எசென்ஸ் சேர்த்து மீண்டும் அடிக்கவும். பிறகு நட்ஸ் சேர்த்து மெதுவாகக் கலக்கவும் (நன்கு அழுத்தாமல் மென்மையாகக் கலக்கவும்).
 இதனை மூடி ஃப்ரீசரில் ஆறு மணி நேரம் வைத்து எடுக்கவும். ஐஸ்க்ரீம் ஸ்கூப்பரால் பந்து போல் உருட்டி எடுத்து ஐஸ்க்ரீம் கிண்ணத்தில் வைத்து, மேலே அலங்கரிக்க வைத்துள்ள நட்ஸ் தூவிப் பரிமாறவும். அவகோடா ஐஸ்க்ரீம் தயார்.

சாக்லெட் பிரவுனி கேக்

தேவையான பொருட்கள்:
 வெண்ணெய் - முக்கால் கிண்ணம்
 சர்க்கரை - 1கிண்ணம்
 மில்க் மெய்ட் - 100 கிராம்
 பால் - 60 மி.லி.
 மைதா - முக்கால் கிண்ணம்
 கோகோ பவுடர் - கால் தேக்கரண்டி
 பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி
 டார்க் சாக்லெட் பார் - 1 கிண்ணம்
 உப்பு - 1/2 தேக்கரண்டி
 அக்ரூட் - 1 கிண்ணம் (நறுக்கியது)
 செய்முறை: ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்கவிடவும். அதன்மீது மற்றொரு பாத்திரத்தை வைக்கவும். உப்பு சேர்க்காத வெண்ணெய், சாக்லெட், சர்க்கரை மூன்றையும் நன்கு உருக்கவும். பிறகு பாத்திரத்தை இறக்கி, சூடு குறையும்வரை காத்திருக்கவும். பின்னர், மில்க் மெய்டை கொஞ்சம், கொஞ்சமாக சேர்த்து கலக்கவும். இதனுடன் மைதா மாவு, கோகோ பவுடர் , உப்பு, பேக்கிங் பவுடர் சேர்த்து கிளறவும். மாவு கலவை க்ரீம் பதத்திற்கு வந்தபிறகு, பொடியாக நறுக்கிவைத்துள்ள அக்ரூட்டை சேர்த்து 165 டிகிரி செல்சியஸ் சூட்டிற்கு, 35 நிமிடம் ஓவனில் வைத்து பேக் செய்யவும். ஓவன் இல்லாதவர்கள், குக்கரைப் பயன்படுத்தலாம். குக்கரினுள் ஒரு துளையுள்ள தட்டினை வைத்து அதன் மீது பேக் செய்யவேண்டிய பிரவுனியை வைக்கவும். விசில் இல்லாமல் மூடி, 30 நிமிடம் பேக் செய்யவும். பிரவுனி நன்கு வெந்ததும் இறக்கிவிடவும்.

சாக்லெட் கேரட் கேக்

 தேவையான பொருட்கள்
 கேரட் துருவியது - அரை கிண்ணம்
 ரவை - 1 கிண்ணம்
 மில்க் மெய்ட் - கால் கிண்ணம்
 சர்க்கரை - 1 கிண்ணம்
 பெரிய சாக்லெட் - 1
 நெய் - 5 தேக்கரண்டி
 வெண்ணெய் - 1 கிண்ணம்
 உப்பு - சிறிதளவு
 முந்திரி, பாதாம் - அலங்கரிக்க
 செய்முறை: மைதா, ரவை இரண்டையும் லேசாக வறுத்துக் கொள்ளவும். உப்பு, மில்க்மெய்ட் சேர்த்து நன்றாக கலக்கவும். அதனுடன் வெண்ணெய், நெய், சர்க்கரை சேர்த்து அடிக்கவும். துருவிய கேரட்டை அரை தேக்கரண்டி நெய் கலந்து மைக்ரோ வேவ் ஓவனில் 1 நிமிடம் வைத்து இந்த கலவைகளுடன் சேர்க்கவும். மீதம் உள்ள நெய்யை கேக் ட்ரேயில் விட்டு இந்த கலவையை இதில் ஊற்றவும் முக்கால் பகுதி வரை மட்டும் ஊற்றவும். மீதமுள்ள கேரட்டை அதன் மேல் தூவவும். 10 நிமிடம் ஓவனில் வைக்கவும். 5 நிமிடம் கழித்து திறந்து அதன் மேல் வறுத்த முந்திரி அல்லது பாதாமை அலங்கரித்து மைக்ரோ வேவ் அவனை மூடிவிடவும். கேக் தயாரானதும் அதன் மேல் சாக்லெட்டை துருவி போடவும். சூட்டிலேயே உருகிவிடும். சூடான சாக்லெட் கேரட் கேக் ரெடி.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com