இதுவரை சந்திக்காத சவால்கள்!

மிஞ்சிய உணவுகளை உரிய நேரத்தில் பசி பட்டினியால் வாடுபவர்களை அடையச் செய்தால், பசி ஆற்றிய பயனும் கிடைக்கும்.
இதுவரை சந்திக்காத சவால்கள்!
Updated on
2 min read

"மிஞ்சிய உணவுகளை உரிய நேரத்தில் பசி பட்டினியால் வாடுபவர்களை அடையச் செய்தால், பசி ஆற்றிய பயனும் கிடைக்கும். தரமான உணவு கழிவுப் பொருள்களாகி சுற்றுப்புற சூழ்நிலையை மாசுபடுத்துவதிலிருந்தும் காக்கலாம்'. இதை உணர்ந்த சென்னை பல் மருத்துவர் இஸ்ஸா ஃபாத்திமா ஜெஸ்மின், "ஐயமிட்டு உண்' என்ற பெயரில் சென்னை நகரின் ஏழு முக்கிய இடங்களில் (தி.நகர், பெசன்ட் நகர், அசோக் நகர், அண்ணா நகர், ஆலந்தூர், ஓ எம் ஆர் சாலையில் கந்தன் சாவடி) குளிரூட்டிகளை (ச்ழ்ண்க்ஞ்ங் ) வைத்து அந்தப் பகுதி மக்கள், திருமண மண்டபங்கள், உணவுவிடுதிகள் மிஞ்சிய உணவு வகைகளை கெட்டுப் போவதற்கு முன்பாகவே இந்தக் குளிரூட்டிய பெட்டிகளில் வைக்கும் முறையை அறிமுகம் செய்தார்.

உணவுத் தேவையுள்ளவர்கள் இங்கிருக்கும் பொருள்களை எந்த தயக்கமும் இல்லாமல் எடுத்துக் கொள்ளலாம். அதுபோன்று பயன்படுத்தப்பட்ட ஆனால் நல்ல நிலையில் உள்ள உடை, புத்தகங்கள், காலனி, காலுறை, பொம்மைகள் போன்ற பொருள்களை வைப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேவைப்படுபவர்கள் தங்களுக்குத் தேவையானதை எடுத்துக் கொள்ளலாம்.

ஜெஸ்மின் உருவாக்கியிருக்கும் இந்த "பப்ளிக் பவுண்டேஷன்' (டன்க்ஷப்ண்ஸ்ரீ ஊர்ன்ய்க்ஹற்ண்ர்ய் ) என்ற அறக்கட்டளையின் கீழ் "ஐயமிட்டு உண்' என்னும் பொதுநலத் திட்டமும் செயல்பட்டு வருகிறது. பெங்களூருவிலும் இந்த அமைப்பிற்கு கிளை இருக்கிறது. கரோனா காலத்தில் "ஐயமிட்டு உண்' எப்படி செயல்படுகிறது?,

இஸ்ஸா ஃபாத்திமா ஜெஸ்மின் விளக்குகிறார்:

"கரோனா அனைவரது செயல்பாடுகளையும் முடக்கிப் போட்டிருப்பது போலவே எங்களின் சமூக உதவிகளையும் முடக்கிப் போட்டுள்ளது. பொதுமுடக்கம் என்பதால் காலை எட்டு மணி முதல் இரவு ஒன்பது வரை இயங்கும் "ஐயமிட்டு உண்' செயல்பாடுகளும் முடங்கியுள்ளது.

எங்கள் அறக்கட்டளையைச் சார்ந்த உதவியாளர்கள், சமூக ஆர்வலர்களும் கரோனா தோற்று வந்துவிடுமோ என்று வீட்டில் இருக்க வேண்டிய கட்டாய நிலைமை.
ஆனால் சமூக சமையலறையை நடத்தி வந்த அனுபவத்தில், பொதுமுடக்கம் காரணமாக பசியில் வாடும் மக்களுக்கு அவர்கள் வசிக்கும் இடத்திலிருந்து வெளியே வர இயலாது. உதவிகளை கேட்கவும் முடியாது. அதனால், எங்கள் உதவியாளர்களுக்குத் தெரிந்த பகுதிகளில் வாழும் அடித்தட்டு மக்களுக்காக நாங்கள் அவர்களைத் தேடிச் செல்ல முடிவு செய்தோம். வீட்டுக்கு அவசியமான அரிசி, மளிகை சாமான்களை சேகரித்து தேவையானவர்களுக்கு வழங்க ஆரம்பித்தோம். நாற்பது ஐம்பது சமூக ஆர்வலர்கள் இருந்த நிலையில் கரோனா காலத்தில் ஐந்தாறு பேர்களை வைத்துக் கொண்டு உதவி வேண்டி எங்களை அணுகுபவர்களுக்கு தேவையான பொருள்களை கொண்டு போய் தந்து வருகிறோம். இன்னொரு பக்கம் சமையல் செய்ய முடியாத தெருவில் வாழும், அநாதைகளுக்கு உணவு சமைத்து, குடி நீர் பாட்டில்களுடன் வழங்கி வருகிறோம். சிறு குழந்தைகளுக்கு பாலும் தந்து வருகிறோம். இந்த விநியோகத்தில் முகக் கவசம், கையுறைகள் அணிவதுடன் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க எங்களது உதவியாளர்களையம், பயனாளர்களையம் வலியுறுத்தி வருகிறோம்.

எங்கள் சேவை சென்னை மாநகராட்சிக்கும், காவல்துறைக்கும் தெரியும் என்பதால் உதவிகள் செய்ய பயணிப்பதில் எந்தவித சிரமங்களும் இதுவரையில் ஏற்படவில்லை. கரோனா அபாயம் குறையும் பட்சத்தில், மீண்டும் "ஐயமிட்டு உண்' சேவை தொடங்கும்.

உயிருக்கு சவாலான இந்த சூழ்நிலையை இதற்குமுன் நாம் யாரும் அனுபவித்ததில்லை. தேவையான பொருள்களை இலவசமாக வழங்க பல நல்ல மனங்கள் முன்வந்தாலும் அவைகளை சேகரித்து, தேவையானவர்களுக்கு சுய பாதுகாப்புடன் வழங்குவது எளிதான விஷயம் அல்ல. சிறிய அளவில் உதவியாளர்களை வைத்துக் கொண்டு உணவு சமைப்பதும் சிரமம்தான். இருந்தாலும் எங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறோம். இக்கட்டான இந்த சூழ்நிலையில் நலிந்தவர்கள் பசியால் வாடக் கூடாது என்று ஒவ்வொரு பகுதியில் வாழும் வசதி உள்ளவர்கள் நினைத்தால் போதும். மனிதத் துயரங்களைக் குறைக்கலாம். ஆனால் நலிவடைந்த குடும்பங்களைச் சேர்ந்த, கிராமப்புற மாணவ மாணவிகள் தரமான அலைபேசி, டேப், மடிக்கணினி, இணையதள இணப்பு இல்லாமல், ஆன்லைன் வகுப்புகளைத் தொடர இயலாமல் போவார்கள். அவர்களுக்கு உதவ எங்கள் அமைப்பு தயாராகி வருகிறது'' என்கிறார் இஸ்ஸா ஃபாத்திமா ஜெஸ்மின்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com